Published : 15 Jul 2014 10:31 AM
Last Updated : 15 Jul 2014 10:31 AM
காட்டு ஓடை சலசலவென விடாமல்.ஓசையெழுப்பிக்கொண்டிருந்தது. தென்றல் காற்று லேசாக வீசியதில் ஓடைக் கரையில் இருந்த அத்தி மரத்திலிருந்து ஓரிரு பழுத்த இலைகள் உதிர்ந்து, நீரோடையில் விழுந்து நீரின் போக்கில் மிதந்து செல்ல ஆரம்பித்தன. விதவிதமான தகரைச் செடிகளும் (பெரணிகள் - Ferns), காட்டுக் காசித்தும்பை செடிகளும் (Impatiens), ஓடைக் கரையோரம் வளர்ந்து, ஏற்கெனவே அழகாயிருந்த ஓடைக்கு மேலும் அழகு சேர்த்துக் கொண்டிருந்தன. அருகில் இருந்த ஒரு பாறையின் மீது நான் காத்திருந்தேன். குறிப்பிட்ட ஊசித்தட்டான் வகை ஒன்றைப் பார்ப்பதற்காக.
ஓடையின் அற்புதங்கள்
அதன் பெயர் மரகதத் தும்பி, ஆங்கிலத்தில் Stream Glory. இதன் அழகைக் குறிப்பாக ஆண் மரகதத் தும்பியின் அழகைச் சொல்லில் வர்ணிப்பது கடினம். இதை நேரில் பார்ப்பவர்கள் வியப்பில் திக்குமுக்காடிப் போவார்கள். மரகதத் தும்பி, கிழக்கத்திய நாடுகளின் காட்டுப் பகுதிகளில் உள்ள நீரோடைகளில் தென்படும். ஆணின் வாயுறுப்புகள் (Mandibles), மார்பு (Thorax), வயிறு (Abdomen - நாம் வால் என நினைப்பது) அனைத்தும் மரகதப் பச்சை நிறத்தில் இருக்கும். இரண்டு பெரிய கரிய கூட்டுக் கண்கள் தலையில் அமைந்திருக்கும். பூச்சிகளைப் பிடிக்க உதவும் கூர்மையான முட்கள் கொண்ட கால்களும் பச்சை நிறம்தான். இரண்டு ஜோடி இறக்கைகளில், முன்னிறக்கைகள் நிறமற்று இருக்கும். ஆனால், நம் கண்ணைக் கவர்வது பின்னிறக்கையின் உட்புறம். தகதகவென மின்னும் மரகதப் பச்சை நிறமும், பளபளக்கும் அதன் கறுப்பு முனைகளும்.
பெண் மரகதத் தும்பியின் உடல், மஞ்சள் கலந்த பளபளக்கும் பச்சை நிறம். இவற்றின் இறக்கைகள் தேன் நிறத்தில் ஒளி ஊடுருவும் தன்மையுடன் இருக்கும். பெரும்பாலும் இனப்பெருக்கக் காலங்களில் மட்டுமே இவை ஓடைக்கு அருகில் வரும். ஓடை அருகே இருக்கும் தாவரங்களின் மேலோ, நீரிலிருந்து வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் குச்சி அல்லது பாறையின் மீதோ அமர்ந்திருக்கும்.
போட்டியும் நடனமும்
இவற்றைக் கவர ஆண் மரகதத் தும்பி பிரம்மப் பிரயத்தனம் செய்ய வேண்டும். முதலில் முட்டையிடுவதற்குச் சரியான இடத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நீரின் அடியில் இருக்கும் குச்சியிலோ, வேரிலோதான் முட்டையிடும். நீரோட்டம் சரியான அளவிலும், நல்ல சூரிய வெளிச்சம் படும் வகையிலும் இருக்க வேண்டும். அந்த இடத்தைச் சுற்றி வலம் வந்து, அந்தப் பகுதியைத் தன் எல்லையாக்கிக்கொள்ள வேண்டும். இதுபோன்ற நல்ல இடத்தைப் பிடிக்கப் போட்டியும் வரும்.
அப்போது போட்டி ஆண் மரகதத் தும்பியை அப்பகுதியிலிருந்து துரத்த வேண்டும். அல்லது பலம் வாய்ந்த ஆணாக இருந்தால், அமர்ந்தபடிக்கே தனது வயிற்றுப் பகுதியை மேலே தூக்கி, பளபளக்கும் இறக்கையை ஒரு முறை விரித்துக் காண்பித்தால் போதும். பின்னர் தனது துணையைத் தேடி, அதன் முன்னே நடனமாட வேண்டும்.
பெண் அமர்ந்திருக்கும் இடத்தினருகே சென்று 8 வடிவத்தில் ஆண் சிறகடித்துப் பறக்கும். அது கண்கொள்ளா காட்சி. பார்ப்பதற்கு நடனத்தைப் போலிருக்கும். பிறகு பெண்ணின் சம்மதம் பெற, தனது இடத்தைக் காண்பிக்கக் கூட்டிச் செல்ல வேண்டும். அதற்குப் பின் அப்பெண் மரகதத் தும்பி சம்மதித்தால், இரண்டும் இணைசேரும்.
அடுத்து முட்டையிடும் பணி. சரியான இடத்தைப் பார்த்துப் பெண் முட்டைகளை இடும்போது, ஆணும் அதைச் சுற்றிப் பறந்து பாதுகாக்கும். சில வேளைகளில் பெண் நீருக்கு அடியில் மூழ்கியும் முட்டையிட வேண்டியிருக்கும். இந்த முட்டை பொரிந்து இதன் தோற்றுவளரி (லார்வா) பல ஆண்டுகள் நீரினடியிலேயே வாழும். முழு வளர்ச்சியடைந்த பின் சரியான வேளையில் நீருக்கு அருகே இருக்கும் தாவரங்களின் மேலேறி, தோலுரித்து வெளிவந்து பறக்க ஆரம்பிக்கும்.
பல்லுயிர்க் காட்சி
நான் அமர்ந்திருந்த தெளிந்த ஓடையின் அருகே, மரங்களின் ஊடாகச் சுள்ளென்று சூரியக் கிரணம் பாய ஆரம்பித்தது. ஓடிக்கொண்டிருந்த கண்ணாடி போன்ற தெளிந்த நீரைக் குத்திக் கிழித்து ஓடைத்தரையைக் காட்டியது அந்தச் சூரிய ஒளி. நீரின் அடியில் இருந்த பாசிகளும், நீர்த்தாவரங்களும் நீரோட்டத்தின் போக்குக்கு ஏற்ப அலைபாய்ந்து கொண்டிருப்பது தெரிந்தது. மீன் கூட்டமொன்று வேகமாக நீந்தி ஓடையை உயிர்ப்பித்தது. சற்றுத் தொலைவில் சிறிய மீன்கொத்தி ஒன்று மரக்கிளையில் அமர்ந்து, என்னைப் போலவே ஓடும் நீரையே பார்த்துக் கொண்டிருந்தது. ஓடையின் அருகிலிருந்து ஒரு சீகார பூங்குருவி (Malabar Whistling Thursh) தனது ரம்மியமான குரலில் பாட ஆரம்பித்தது. நான் அமர்ந்திருந்த பாறையின் பக்கம் காட்டு நீர்நாயின் (Small-clawed Otter) எச்சம் பரவிக் கிடந்தது. முந்தைய நாள் இரவு அவை இங்கே வந்திருக்கலாம். நண்டின் ஓட்டுத் துகள்களைக் கொண்ட, அந்த எச்சத்தின் மணம் இன்னும் அடங்கவில்லை.
சூரிய ஒளி மெல்லத் தலைக்கேறியது. இரண்டு ஆண் மரகதத் தும்பிகள் ஒன்றை ஒன்று துரத்திக்கொண்டு வந்தன. நான் இவ்வளவு நேரம் எதிர்பார்த்துக் காத்திருந்த காட்சி இதுதான். காட்டு ஓடையே பல அற்புதங்கள் பொதிந்த இடம்தான் என்றாலும், என்னைப் பொறுத்தவரை மரகதத் தும்பி போன்ற ஊசித்தட்டான்கள் இல்லாமல் எந்த ஒரு நீரோடையும் முழுமை பெறுவதில்லை.
கட்டுரையாளர், காட்டுயிர் ஆராய்ச்சியாளர்
தொடர்புக்கு: jegan@ncf-india.org
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT