Published : 16 Dec 2017 10:09 AM
Last Updated : 16 Dec 2017 10:09 AM
கோ
ழிகள் கழிவை மறுசுழற்சிச் செய்வதிலும் மிகச் சிறந்த திறனாளிகள். காய்கறிக் கழிவு, மீன் போன்ற இறைச்சிக் கழிவை முறையாகக் கொடுத்தால் அவை உண்டு செரித்துவிடும். காய்கறிக் கழிவை நேரடியாகக் கொடுக்கலாம்.
ஆனால், மீன் போன்ற இறைச்சிக் கழிவை நேரடியாகக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் அவற்றில் உள்ள குருதி நாற்றம் மோசமான விளைவை ஏற்படுத்திவிடும். குருதியைச் சுவைத்த கோழிகள், பிற கோழிகளுக்கு ஏதாவது காயம் இருக்குமாயின் அவற்றையும் கொத்திக் கிழிக்கக் தொடங்கிவிடும். எனவே இறைச்சிக் கழிவை வேகவைத்துக் கொடுக்கலாம் அல்லது அவற்றைக் கொண்டு புழுக்களை உருவாக்கி அவற்றை உணவாகக் கொடுக்கலாம். புழுக்கள் புரதம் நிறைந்தவை.
வேண்டாம் வெளித் தீனி
கோழிக் கூடத்தைப் பத்து பகுதிகளாகப் பிரித்து 42 நாட்களுக்கு ஒரு பகுதியாகக் குஞ்சுகள் முதல் பெருங்கோழிகளாக வரும்வரை வளர்த்து வெளியேற்றலாம். இது இறைச்சிக் கோழிகளுக்கான முறை. முட்டைக் கோழிகளுக்கு அவ்வாறு பிரிக்கத் தேவையில்லை. ஆனால் முட்டையும் இறைச்சியுமாக வளர்த்தால்தான் நன்மை உண்டு.
வெளியில் இருந்து குஞ்சுகளை வாங்கி வளர்க்கும் முறையில் பல இடர்பாடுகள் உள்ளன. குறிப்பாக நோய்த் தாக்குதல் அதிகம் இருக்கும். அவற்றுக்கான தீனியை வெளியில் இருந்து வாங்கித் தரவேண்டிய சூழல் வரும். எனவே, தற்சார்புப் பண்ணைக்கு வெளியில் இருந்து வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
கோழிகளுக்குப் பல கீரைகளை உணவாகக் கொடுக்கலாம். அருகம் புற்களை கோழிகள் நன்கு உண்ணும். எனவே செலவைக் குறைத்து கோழிகளை வளர்க்கும் நுட்பங்களைப் புரிந்துகொள்ள வேண்டும்.
உழவுக்கு உதவும் ஆடு
ஆடுகள் வளர்க்க, கோழிகளைவிடச் சற்று கூடுதல் முதலீடு தேவைப்படும். இவற்றுக்கு எப்போதும் நல்ல சந்தை உண்டு. சிறு - குறு உழவர்களுக்கும், நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கும் ஆடுகள் அவ்வப்போது கைகொடுக்கும்.
முல்லை நில வேளாண்மையில் ஆடுகளின் பங்கு மிக முக்கியமானது. மரங்களில் இருந்து கழிக்கப்படும் தழைகளையும் சோற்றுக் கழிவு நீரையும் குடித்தேகூட ஆடுகள் வளர்ந்துவிடும். அவை உலாவி வரச் சிறிது இடம் வேண்டும்.
செம்மறிகள் மேயும் விலங்குகள், வெள்ளாடுகள் ஆயும் விலங்குகள். அதாவது செம்மறி ஆடுகள் மரங்களின் மீது பற்றி ஏறி கிளைகளை நாசம் செய்வதில்லை. தலையைக் கவிழ்ந்துகொண்டே மேய்பவை. ஆனால் வெள்ளாடுகள் சிறிய மரங்களைப் பற்றி ஏறித் தின்றுவிடும். இந்த ஆயும் தன்மையைப் புரிந்துகொண்டு, அதற்கேற்ப இடத்தைத் தெரிவு செய்ய வேண்டும்.
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: pamayanmadal@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT