Last Updated : 09 Sep, 2023 05:50 AM

 

Published : 09 Sep 2023 05:50 AM
Last Updated : 09 Sep 2023 05:50 AM

“நான் இறந்தாலும் காடு இருக்கும்!”

சத்யநாராயணா

நீர் உரிமை ஆர்வலர், எழுத்தாளர், இயற்கை காவலர் எனப் பன்முகங்கள் கொண்டவர் துசர்லா சத்யநாராயணா (69). தெலங்கானாவைத் தாண்டியும் பரவலாக அறியப்பட்ட ஒருவர். இயற்கை மீது அவர் கொண்டிருந்த ஈடுபாடானது ஒரு கட்டத்தில் அவரது அடையாளமாகவே மாறியிருப்பதுதான் இதற்குக் காரணம்.

துசர்லா சத்யநாராயணாவுக்கு தெலங்கானாவின் சூர்யப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மோத்மண்டல்தான் சொந்த ஊர். 1980களில் ‘ஜல சாதனா சமிதி'யை துசர்லா சத்யநாராயணா தொடங்கினார். இது நல்கொண்டா, மகபூப்நகர் மாவட்டங்களில் உள்ள நீர் பற்றாக்குறை கொண்ட நிலங்களுக்கு நீர்ப்பாசனத்தை ஏற்படுத்த முயன்ற இயக்கம்.

மேலும், பல ஆண்டுகளாக ஃபுளூரோசிஸ் அதிகம் இருந்த தண்ணீரை அருந்தியதால் பற்கள் பாதிக்கப்பட்ட நல்கொண்டா மாவட்ட மக்களின் பிரச்சினையை தேசிய அரங்கிற்குக் கொண்டு சென்றவர் இவர்.

துசர்லா சத்ய நாராயணாவின் செயல்பாடே நல்கொண்டா விவகாரத்தில் அரசு தீவிர நடவடிக் கையில் இறங்க காரணமாக அமைந்தது. இப்படி ஒருபுறம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படக் காரணமாக இருந்த இவர், தனிப்பட்ட முறையிலும் சில சாதனைகளைப் புரிந்திருக்கிறார்.

சத்யநாராயணா

தனது பரம்பரை நிலமான 70 ஏக்கரை காடாக்கி, அதன் பாசனத் தேவையைப் பூர்த்திசெய்ய சிறு நீர்நிலைகளை உருவாக்கி, கால்வாய்களைத் தோண்டி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறார் சத்யநாராயணா. தன் நிலத்தில் பயிரிட்டு வருவாயைப் பெருக்கும் ஆதாரமாக அதைப் பயன்படுத்த வேண்டுமென்று அவர் நினைக்கவில்லை. மாறாக, எல்லாக் காலத்திலும் பயன்தரும் காடாகவும், அந்தக் காடு நிலைத்திருக்க நீர்ப்பாசன வசதிகளையும் செய்திருக்கிறார்.

சிறு வயது முதலே இயற்கையின் மீது பேரன்பு கொண்டிருந்த சத்யநாராயணா, “எனது மகன் ஒரு கால்நடை மருத்துவர். என்னைப் போலவே அவரும் இயற்கையை நேசிப்பவர். அவருக்கும் பணத்தின்மீது அதிக ஈடுபாடு இல்லை. அதனால் நான் உருவாக்கியுள்ள காடு வேறு பயன்பாடுகளுக்குத் திருத்தப்படாது என்று நம்புகிறேன். எனது இறப்புக்குப் பிறகு இந்தக் காடு நிச்சயம் பிழைத்திருக்கும்” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்.

- எல்னாரா

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x