Published : 25 Nov 2017 11:27 AM
Last Updated : 25 Nov 2017 11:27 AM
கோம்பை நாய்களை எப்படிப் புரிந்துகொள்வது? அதற்கு முதலில் அதனுடைய பூர்வீகத்திலிருந்து தொடங்க வேண்டும். தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள ஊர் கோம்பை. இது மேற்கிலும் கிழக்கிலும் மலைகளால் சூழப்பட்டது. இந்த மலை சார்ந்த சூழல், காடுகளுடனான தொடர்பு, கோம்பை நாய்களை வேறு ஒரு வகையில் தகவமைத்துக்கொள்ள உதவியுள்ளது.
அதாவது, வனவிலங்குகளின் ஊடுருவல் காரணமாகவும் தன் சூழல் காரணமாகவும் எப்போதும் விழிப்புடனும், பாதுகாப்பு உணர்வுடனும் இயங்கும்படியான தன்னுணர்வோடு இந்த நாய்கள் உருவாகியுள்ளன. கோம்பை, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான தேவாரம், உத்தமபாளையம், கம்பம், போடி, பழனி மலைத் தொடர்களிலும் இந்த நாய்கள் உள்ளன.
சிறப்புகள்
ஒப்பீட்டளவில் தமிழக நாய் இனங்களிலேயே மிகப் பழமையான நாய், கோம்பை இனம்தான். இது பல நூற்றாண்டுகளாக நம் பழங்குடிகளின் வேட்டைத் துணைவனாக வாழ்ந்து, முழுக்க இயற்கைத் தேர்வின் மூலமே பரிணமித்து வந்த இனமும்கூட.
கோம்பை நாய்கள் பொதுவாக மான் , காட்டுப் பன்றிகள் , மிளா போன்றவற்றை வேட்டையாடப் பயன்படுத்தப்பட்டன. பிற்காலத்திய இனங்களான கன்னி நாய்களும் ராஜபாளையம் நாய்களும்கூட ஒரு மேட்டிமைத்தன்மையின் அடையாளமாகவே இங்கு அறிமுகமாகின. ஆனால், கோம்பை நாய்களோ தொடர்ந்து எளிய மக்களுடன் பல நூற்றாண்டுகளாகப் பயணித்துவருகிறது.
கோம்பையில் போலிகள்
கோம்பை நாய்களில் ஏற்படும் ஒரே சிக்கல், மிக அதிக அளவில் காணப்படும் போலிகள்தான். சுத்தமான கோம்பை நாய்களின் கூறுகள் அதனுடைய பண்பு சார்ந்தவைதானே தவிர, அங்க லட்சணங்கள் சார்ந்தவை அல்ல. எனவே அந்தச் சூழலில் உருவாகிவந்த நாய்களின் குட்டியைத் தேர்வு செய்வது உத்தமம்.
தொடக்கத்திலிருந்தே குறிஞ்சி நிலம் சார்ந்த வேட்டை நாய்களைப் பற்றிய குறிப்புகள் நமது சங்க இலக்கியத்தில் காணப்படுகின்றன. குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த வேட்டுவக் குடி மக்களால் அதிக அளவில் பயன்படுத்தப்பட்ட நாய் இனம் இதுதான்.
முதல் குறிப்பு
வெகு காலமாக இவை பயன்பாட்டில் இருந்தபோதிலும் தேவாரம், போடிநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்த ஜமீன்கள் இந்த நாய்களையே வேட்டைக்கு அதிக அளவில் பயன்படுத்தியதாலேயே இவை பிரபலமடையத் தொடங்கின.
இந்த வகை நாய்களைப் பற்றிய முதல் குறிப்பானது 1901-ம் ஆண்டு வெளியான மதுரை ஆவணக் (கெஸட்) குறிப்புகளில் காணப்படுகிறது: “கம்பம் பள்ளத்தாக்குப் பகுதிகளில் உள்ள இந்த நாயைத் தேர்வுசெய்வது கடினமாக உள்ளது. இன்று அதை யாரும் கவனத்துடன் இனவிருத்தி செய்வது இல்லை” என்பதே அந்தப் பதிவு.
இன்றைக்கு அந்த நிலை மாறத் தொடங்கியுள்ளது. இந்த நாய்களைப் பற்றிய கவனம் அதிகரித்துவருவதைக் காண முடிகிறது. கோம்பையில் மலைச் சரகங்களை ஒட்டியுள்ள பகுதியைச் சேர்ந்த நாய்கள்தான் சிறந்தவை. அவற்றை இனவிருத்தி செய்யும்போது மூன்று, நான்கு தலைமுறைகள் கணக்கில் கொள்ளப்படும் என்கிறார்கள், இந்த நாய் வளர்ப்பில் அனுபவமுள்ளவர்கள்.
செந்நாய்களுடன் கலப்பு
இந்த நாய்களின் ஆக்ரோஷத்தன்மைக்கு அவர்கள் காரணமாகச் சுட்டிக்காட்டுவது, மலைக்காடுகளில் ஆநிரைகளுடன் மேய்ச்சலுக்குச் செல்லும்போது இந்த நாய்கள் செந்நாய்களுடன் கலந்தன என்பதால்தான். இவை அதிகம் செவலை நிறத்துடனும் கருவாயுடனும் வந்த போதிலும், செவலை நிறத்தில் வெள்ளைத் திட்டுக்களுடனும் கறுப்பு நிறத்துடனும் கூட வருகின்றன.
இந்த நாய்கள், சற்று ரோமத்துடன் இரண்டு அடி முதல் இரண்டேகால் அடி உயரத்துடனும் நல்ல திரண்ட தசைகளுடனும் வலுவான தாடை எலும்புகளுடனும் நீளம் குறைவாகவும் இருக்கும். சரியான புரிதலுடன் அணுகினால் தமிழகத்திலுள்ள மிகத் தனித்துவமான நாய் இது என்பதை புரிந்துகொள்ள முடியும்.
(அடுத்த வாரம்: அழிந்து போனதா அலங்கு?)
கட்டுரையாளர், நாட்டு நாய்கள் ஆராய்ச்சியாளர்
தொடர்புக்கு: sivarichheart@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT