Published : 29 Jul 2023 06:02 AM
Last Updated : 29 Jul 2023 06:02 AM
பூச்சிக்கொல்லி தடை தொடர்பாக மத்திய அரசு வல்லுநர் குழுக்களைத் தொடர்ந்து அமைத்துவருவதை உச்ச நீதிமன்றம் விமர்சனம் செய்துள்ளது. பூச்சிக்கொல்லி தடை தொடர்பான வழக்கு விசாரணையில் உச்ச நீதிமன்றம் இதைப் பதிவுசெய்துள்ளது. பூச்சிக்கொல்லி தடை தொடர்பாக 2015இல் மத்திய அரசு அனுபம் வர்மா குழுவை அமைத்தது. விசாரணைக்குப் பிறகு 13 பூச்சிக்கொல்லிகளைத் தடைசெய்ய வேண்டும் என இந்தக் குழு பரிந்துரைத்தது. ஆனால், பூச்சிக்கொல்லி தயாரிப்பாளர் சங்கத்தின் எதிர்ப்புக்குப் பிறகு அனுபம் வர்மாவின் பரிந்துரை கிடப்பில் போடப்பட்டது. மீண்டும் எஸ்.கே.மல்ஹோத்ரா தலைமையில் 2017இல் புதிய குழு ஒன்று அமைக்கப்பட்டது.
இந்தக் குழு 27 பூச்சிக்கொல்லிகளைத் தடைசெய்யப் பரிந்துரைத்தது. இதே குழு அடுத்த ஆண்டு 2018இல் மறு ஆய்வு செய்து தனது முந்தைய பரிந்துரையை உறுதிப்படுத்தியது. 2020இல் எஸ்.கே.குரானா தலைமையில் ஒரு துணைக் குழு உருவாக்கப்பட்டது. இந்தக் குழுவும் 27 பூச்சிக்கொல்லிகளைத் தடைசெய்யப் பரிந்துரைத்தது.
இந்த இரண்டு குழுக்களும் 27 பூச்சிக்கொல்லிகளைத் தடைசெய்யப் பரிந்துரைத்த பிறகும், மத்திய அரசு ராஜேந்திரன் குழுவை அமைத்தது. இத்தனை குழுக்கள் அமைக்கப்பட்டுப் பரிந்துரைகள் அளித்த பிறகும் மத்திய அரசு தொடர்ந்து குழுக்கள் அமைத்துக்கொண்டே இருப்பதற்கான காரணம் என்ன என உச்ச நீதிமன்றம் மத்திய அரசை விமர்சித்துள்ளது.
சின்ன வெங்காயம் வரத்து அதிகரிப்பு: தமிழ்நாட்டின் பெரிய வெங்காயச் சந்தையான திண்டுக்கல் சந்தையில் சின்ன வெங்காய வரத்து அதிகரித்துவருகிறது. கர்நாடகம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களிலிருந்தும் சின்ன வெங்காயம் வருவது உண்டு. ஆனால், கடந்த சில வாரங்களாக அம்மாநிலங்களில் பெய்த மழையால் திண்டுக்கல் சந்தைக்கு சின்ன வெங்காயம் வரத்து குறைந்து, விலையும் அதிகரித்தது.
கிலோ ரூ.170 விற்பனையானதாகச் சொல்லப்பட்டது. திண்டுக்கல், திருச்சி, திருப்பூர், தேனி எனப் பல இடங்களில் வெங்காய அறுவடை நடைபெற்றுவருகிறது. இதனால் சின்ன வெங்காய வரத்து அதிகரித்து விலையும் குறைந்துவருகிறது. இப்போது விலை ஒரு கிலோவுக்கு ரூ.50 முதல் ரூ.100 வரை விற்கப்படுவதாகச் சொல்லப் படுகிறது.
குறுவை சாகுபடிக்கு நீர்: தஞ்சாவூர், திருவாரூர் பகுதிகளில் நீர்ப்பாசனம் இல்லாததால், விளைந்திருந்த குறுவைப் பயிர்கள் கருகத் தொடங்கியுள்ளன. காவிரி, வெண்ணாறு ஆறுகள் மற்றும் பெரிய அணைக்கட்டு கால்வாயிலிருந்து தண்ணீர் திறந்தால் மட்டுமே பயிர்களைக் காப்பாற்ற முடியும் என அந்தப் பகுதி விவசாயிகள் புகார் அளித்துள்ளனர்.
குறுவை சாகுபடிக்காக அணையிலிருந்து திறந்து விடப்பட்ட நீர் போதாது என்றும் குறுவைப் பயிருக்குத் தேவையான நீரைத் தடையின்றி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment