Last Updated : 08 Jul, 2023 06:13 AM

 

Published : 08 Jul 2023 06:13 AM
Last Updated : 08 Jul 2023 06:13 AM

பட்டு விவசாயிகளுக்கு மானியம்

கோயம்புத்தூர் பட்டு விவசாயிகளுக்கான மானிய விவரங்களை மாவட்ட பட்டு வளர்ச்சித் துறை அறிவித்துள்ளது. விவசாயிகள் புதிதாக மல்பெரி நாற்றுகளை நடவுசெய்யும்போது ஏக்கர் ஒன்றுக்கு ரூ.10,500 மானியமாக வழங்கப்படவுள்ளது. ஒருவருக்கு 12.35 ஏக்கர் வரையிலும் நடவு மானியம் கிடைக்க வாய்ப்புள்ளது. பட்டுப் புழு மனை அமைக்க 1,500 சதுர அடிக்கு 1,20,000 ரூபாய் மானியம் வழங்கப்படவுள்ளது.

பட்டு விவசாயத்துக்குத் தேவையான தளவாடங்கள் ஆண்டுதோறும் இலவசமாக கோவை விவசாயிகளுக்கு அரசு வழங்கிவருகிறது. இந்த விலையில்லாத் தளவாடங்களைப் பெறுவதற்கு விவசாயிகள் மாவட்ட பட்டு வளர்ச்சித்துறை அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

நாட்டுக்கோழி வளர்ப்புப் பயிற்சி: நாட்டுக் கோழி முட்டை, இறைச்சி உற்பத்தியைப் பெருக்கும் வளா்ப்பு முறைகள் தொடா்பான பயிற்சி ஜூலை 11 முதல் 13 வரை திருப்பூரில் நடைபெறவுள்ளது. திருப்பூா் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் இந்தப் பயிற்சி ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சியில் நாட்டுக் கோழிகளின் வகை, வளா்ப்பு முறைகள், கோழிகளைப் பாதிக்கும் நோய்கள், அவற்றைத் தடுக்கும் முறைகள், தீவன மேலாண்மை ஆகிய தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

இப்பயிற்சியின் இறுதி நாளில் அருகே உள்ள பண்ணைகளுக்கு அழைத்துச் சென்று நேரடிச் செயல்முறை விளக்கம் அளிக்கும் திட்டமும் உள்ளது. முதலில் வரும் 25 நபா்களுக்கு மட்டுமே முன்னுரிமை என்கிற அடிப்படையில் வகுப்பில் இடமளிக்கப்படும். பயிற்சிக் கட்டணம் ரூ.200. பயிற்சி முன்பதிவுக்கு 0421-2248524 என்கிற எண்ணைத் தொடர்புகொள்ள வேண்டும்.

குறுவை சாகுபடி குறைந்தது: குறுவை நெல் சாகுபடி பரப்பு குறைந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தென்மேற்குப் பருவ மழை தாமதமாகிவருவதால் இந்தக் குறைவு ஏற்பட்டுள்ளதாக மத்திய வேளாண் துறை அமைச்சக அறிவிக்கை தெரிவிக்கிறது. சென்ற ஆண்டு இதே குறுவை சாகுபடி காலகட்டத்தில் 36 லட்சம் ஹெக்டேர் பரப்பில் குறுவை நெல் பயிரிடப்பட்டது.

ஆனால், இந்த ஆண்டு 26.55 லட்சம் ஹெக்டேர் பரப்பில்தான் குறுவை நெல் பயிரிடப்பட்டுள்ளது. இது சென்ற ஆண்டைவிட 26 சதவீதம் குறைவாகும். நாட்டின் நெல் உற்பத்தியில் 80 சதவீதம் குறுவை சாகுபடியில்தான் நடைபெறுகிறது. பருப்பு சாகுபடி பரப்பும் 18.51 லட்சம் ஹெக்டேரிலிருந்து 18.15 லட்சம் ஹெக்டேராகக் குறைந்துள்ளது.

முட்டை விலை வீழ்ச்சி: தமிழகத்தின் முட்டை உற்பத்திச் சந்தையான நாமக்கல்லில் முட்டைக் கொள்முதல் விலை ரூ.5.30 காசுகளாக இருந்துவந்தது. இந்த நிலையில் நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் முட்டை விலையை 10 காசுகள் குறைக்க முடிவெடுக்கப்பட்டது. இதன் மூலம் முட்டைக் கொள்முதல் விலை 5.20 காசுகளாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இதுபோல் கோழி இறைச்சி விலையும் கிலோவுக்கு ரூ.8 வீதம் குறைக்கப்படும் என்றும் இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

பருத்தி ஏலம்: தமிழ்நாட்டில் பரவலாக விளைச்சல் முடிந்து பருத்தி ஏலத்துக்கு வந்துள்ளது. தமிழ்நாடு ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் ஏலம் நடைபெற்றுவருகிறது. கடந்த வாரம் தர்மபுரி வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடைபெற்ற ஏலத்தில் 1,350 மூட்டை பருத்தி ரூ.35 லட்சத்திற்கு ஏலம் போனது.

மயிலாடுதுறை வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடைபெற்ற ஏலத்தில் 1,293 குவிண்டால் ரூ.1 கோடிக்கு ஏலம் போனது. நாமக்கல், செம்பனார்கோயில் ஆகிய வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் நடைபெற்ற ஏலத்தில் முறையே ரூ.27 லட்சம், ரூ.1 கோடியே 65 லட்சத்துக்கு ஏலம் போனது. தொகுப்பு: விபின்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x