Last Updated : 22 Jul, 2014 09:30 AM

 

Published : 22 Jul 2014 09:30 AM
Last Updated : 22 Jul 2014 09:30 AM

கோடியக்கரை: விருந்தாளிப் பறவைகளின் உல்லாச விடுதி

கரிசல் காட்டு எழுத்தாளர் கி. ராஜநாராயணன் எழுதிய ‘பிஞ்சுகள்' குறுநாவல் பல்வேறு வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்தது. குழந்தைகள் படித்துக் கொண்டாட வேண்டிய இந்த நாவல், சூழலியல் ரீதியிலும் மிகவும் முக்கியமானது. அதில் வெளிநாடுகளில் இருந்து வலசைவரும் பறவைகளை விருந்தாளிப் பறவைகள் என்கிறார் கி.ராஜநாராயணன்.

ஆண்டுதோறும் செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் பூமியின் வடக்குப் பகுதியில் கடும் குளிர் நிலவும் காலத்தில் பறவைகள் இரை தேடிப் பூமிப் பந்தின் தெற்குப் பகுதிகளை நோக்கி வருகின்றன. அந்த விருந்தாளிப் பறவைகள் (Migratory Birds) வெகுதூரம் பயணித்து, வழக்கமாகச் சென்றடையும் இடத்தைத் தொடும்முன் வழியில் சில இடங்களில் ஓரிரு நாட்கள் தங்கி இளைப்பாறும். இந்த இடங்களையும், பறவைகள் வலசை வந்து தங்கும் இடங்களையும் அவர் ‘தாப்பு' என்றழைக்கிறார்.

பறவையியலாளர்கள் இதை Stop-over sites or Wintering grounds என்பர். ஒடிஸா மாநிலத்தில் உள்ள சிலிகா ஏரி, ஆந்திர-தமிழக எல்லையில் பரவியிருக்கும் பழவேற்காடு ஏரி, திருநெல்வேலி மாவட்டம் கூந்தங்குளம், சென்னையில் பள்ளிக்கரணை இப்படி இன்னும் பல உள்நாட்டு நீர்நிலைகள் ‘தாப்பு'களாக உள்ளன.

பறவை வளையமிடல்

அப்படிப்பட்ட ‘தாப்பு'களில் ஒன்று கோடியக்கரை. அண்மையில் அங்குச் சென்றுவந்தேன். இதையொட்டி பம்பாய் இயற்கை வரலாற்று கழகத்தின் (Bombay Natural History Society - BNHS) இணை இயக்குநரும், பறவையியலாளருமான முனைவர் பாலச்சந்திரனை அங்கே செல்வதற்கு முன்பே தொடர்பு கொண்டிருந்தேன்.

பறவைகளின் வலசையைப் பற்றி 1980-களிலிருந்து ஆராய்ச்சி செய்துவருபவர் அவர். அவருடன் சேர்ந்து பறவைகளை நோக்கப் புறப்பட்டேன். கோடியக்கரையின் முக்கியத்துவத்தைப் பற்றியும் அங்கு வரும் பறவைகளைப் பற்றியும் விளக்கிக்கொண்டே வந்தார்.

பறவைகளின் வலசைப் பண்பை ஆராய்வதில் முக்கிய அம்சம், பறவைகளுக்கு வளையமிடுவது (Bird ringing). முதலில் பறவைகளைப் பாதுகாப்பாகப் பிடிப்பதற்காகப் பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட மெல்லிய வலைகளை (Mistnet) கொண்டு பிடிப்பார்கள். பின்னர், அவற்றின் காலில் அலுமினியத்தால் ஆன தகட்டு வளையத்தைப் பூட்டுவார்கள்.

பறவையினுடைய காலின் அளவுக்கேற்ப வளையத்தின் அளவும் இருக்கும். அந்த வளையத்தில் வரிசை எண்ணும், அந்த வளையத்தை இடும் ஆராய்ச்சி நிறுவனத்தின் பெயரும் பொறிக்கப்பட்டிருக்கும். ஒரு வேளை இதே பறவை உலகில் வேறெந்த பகுதியிலாவது ஆராய்ச்சியாளர்களால் பிடிக்கப்பட்டால், இந்தத் தகவல்களை வைத்து இப்பறவை எங்கிருந்து வருகிறது என்பதை அறிய முடியும்.

வெளிநாட்டு பறவைகள்

இந்தியப் பறவையியல் முன்னோடிகளில் ஒருவரான முனைவர் சாலிம் அலியின் தலைமையில் பல பி.என்.ஹெச்.எஸ். ஆராய்ச்சியாளர்கள் 1970-74 மற்றும் 1980-1992-ம் ஆண்டுகளில் சுமார் 2,00,000 பறவைகளுக்கு வளையமிட்டிருக்கிறார்கள். இவற்றில் 16 வகையான 250 பறவைகள் இந்தியாவின் பிற பாகங்களிலும், உலகின் பல பகுதிகளிலும் பிடிபட்டிருக்கின்றன.

இது போலவே உலகின் பல்வேறு இடங்களில் வளையமிடப்பட்ட பறவைகளும் கோடியக்கரையில் பிடிக்கப்பட்டுள்ளன. ரஷ்யா, உஸ்பெகிஸ்தான், கஸகஸ்தான் முதலிய நாடுகளில் வளையமிடப்பட்ட உப்புக்கொத்திகளும், உள்ளான்களும் (Waders), சவுதி அரேபியா, காஸ்பியன் கடல் பகுதி, போலந்து முதலிய நாடுகளில் வளையமிடப்பட்ட ஆலாக்களும் (Terns), ஈரானில் வளையமிடப்பட்ட பெரிய பூநாரைகளும் (Greater Flamingo), ஆஸ்திரேலியாவில் வளையமிடப்பட்ட வளைமூக்கு உள்ளான்களும் (Curlew Sandpiper) கோடியக்கரைக்கு வருவது அறியப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் வலசைவரும் பல லட்சக்கணக்கான பறவைகளுக்குப் புகலிடமளிக்கும் மிக முக்கியமான பகுதி கோடியக்கரை. உப்பங்கழிகள், சதுப்பு நிலங்கள், அலையாத்திக் காடுகள், புதர்க் காடுகள், கடலோரம், கழிமுகம், உவர் நீர்நிலைகள், நன்னீர் நிலைகள் எனப் பல வகை வாழிடங்கள் இருப்பதால், பலதரப்பட்ட பறவை வகைகளைக் காணமுடிகிறது. இதுவரை 274 வகைப் பறவைகள் இங்கே வந்திருப்பது பதிவு செய்யப்பட்டுள்ளது.

சூழலியல் சீர்கேடு

நீண்டகாலமாக வலசைவரும் பறவைகளுக்கான இடமாக விளங்கும் கோடியக்கரை, கடந்த முப்பது ஆண்டுகளில் பல்வேறு மாற்றங்களைக் கண்டுள்ளது. உப்பளங்களுக்காகக் கடல் நீரை உள் நிலப்பகுதிகளுக்குப் பாய்ச்சுவது மற்றும் நன்னீர் ஓடைகளின் வரத்தைத் தடுப்பணைகளால் கட்டுப்படுத்துவதால் மண்ணின் தரமும் வளமும் நாளடைவில் குன்றிப்போயின. இதன் விளைவாக விளைநிலங்கள் உப்பளங்களாகவும், மீன் வளர்ப்புக் குட்டைகளாகவும் மாற்றப்பட்டுவிட்டன.

1980-களில் சுமார் 5,00,000க்கும் மேற்பட்ட வலசைப் பறவைகளுக்குப் புகலிடமாகத் திகழ்ந்தது இப்பகுதி. ஆனால், நாளடைவில் ஏற்பட்ட வாழிடச் சீர்கேட்டினால் சுமார் 1,00,000க்கும் குறைவான வரத்துப் பறவைகளே (Migratory Birds) இப்பகுதிகளுக்கு வந்து செல்கின்றன. முப்பது ஆண்டுகளுக்கு முன் இங்கு வந்து சென்ற பல பறவை இனங்கள், தற்போது இங்கே வருவதில்லை.

கோடியக்கரை பறவைகளுக்கு மட்டுமல்ல வெளிமான், புள்ளிமான், நரி முதலிய பாலூட்டிகளுக்கும், பலவித அரிய தாவரங்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த வாழிடம். முத்துப்பேட்டை, அதிராமபட்டினம் பகுதிகளில் உள்ள சதுப்பு நிலங்கள் (Great Vedaranyam Swamp), அலையாத்திக் காடுகள் ஆகியவற்றையும் கோடியக்கரை காட்டுயிர் சரணாலயத்துடன் இணைத்து தேசியப் பூங்காவாக (National Park) அங்கீகரித்துப் பேணுவது பற்றி அரசு சிந்திக்க வேண்டும்.

பாதுகாக்க

இந்தப் பகுதிகளின் எல்லையிலிருந்து 10 கி.மீ. சுற்றுப் பகுதியில் சூழலியல் கெடாமல் இருக்கப் பெரிய தொழிற்சாலைகள், பெரிய கட்டுமானங்கள் எதையும் புதிதாக ஏற்படுத்தாமல் சூழல் காப்பு மண்டலமாக (Eco-sensitive zone) அறிவிக்கப்பட வேண்டும். இப்பகுதிகளுக்கு வரும் நன்னீர் ஓடைகளின் இயல்பான நீர்வரத்தை மீட்டெடுப்பதும், இப்பகுதியை மாசடையச் செய்யும் தொழிற்சாலைகள் அதிகரிக்காமலும், ஏற்கெனவே இருக்கும் தொழிற்சாலைகளின் கழிவால் கோடியக்கரை பகுதியின் சூழலியல் பாதிக்கப்படாத வகையில் சரியான முறையில் அப்புறப்படுத்தவும், சிறந்த கழிவு மேலாண்மை திட்டங்களைக் கடைபிடிப்பதும் அவசியம். மிக முக்கியமாக இப்பகுதிகளில் பறவைகளைக் கள்ள வேட்டையாடுவது தெரியவந்தால், அதை ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

விருந்தாளிப் பறவைகளுக்கு நாம் செய்ய வேண்டிய முக்கியமான உதவி, கோடியக்கரை போன்ற ‘தாப்பு'கள் மேலும் சீரழியாமல் பார்த்துக்கொள்வதுதான். நம்மைத் தேடிவரும் விருந்தினரை நல்ல முறையில் உபசரிப்பதுதானே நம் பண்பாடு?

கட்டுரையாளர், காட்டுயிர் ஆராய்ச்சியாளர்

தொடர்புக்கு: jegan@ncf-india.org

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x