Published : 08 Jul 2014 10:01 AM
Last Updated : 08 Jul 2014 10:01 AM
நமது பாட்டன், முப்பாட்டன் காலத்தில் நேரில் பார்த்த பாரம்பரிய மரங்கள் எல்லாம், மழை வளம் இல்லாமல் அழிந்துவரும் அரிய வகை மரங்கள் பட்டியலில் இடம்பிடித்து வருவதாக அரசு அறிவித்து வருகிறது. இந்த நிலையில் திண்டுக்கல் அருகே மாணவர்களின் உதவியுடன் இலவசமாக மரக்கன்றுகளை வழங்கி வருகிறார் ஒரு பள்ளி ஆசிரியர். அவரது முயற்சியைப் பாராட்டித் தமிழக அரசு ‘சுற்றுச்சூழல் செயல் வீரர்', ‘சாதனையாளர்' விருதுகளை வழங்கியுள்ளது. மத்திய அரசு ‘பசுமை மனிதர்' என்ற விருது வழங்கிக் கௌரவித்துள்ளது.
செலவில்லா நர்சரி
திண்டுக்கல் அருகேயுள்ள பட்டிவீரன்பட்டியில் உள்ள என்.எஸ்.வி.வி. ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தேசியப் பசுமைப் படை ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் கே.பி. ரவீந்திரன்தான் அவர். தேசியப் பசுமைப் படை மாணவர்கள் மூலம், பள்ளியிலே 2 ஏக்கரில் நர்சரி அமைத்து, பள்ளி வளாகத்தில் உள்ள மரங்களின் விதைகளைச் சேகரித்து, எந்தச் செலவும் இல்லாமல் மரக்கன்றுகளை உற்பத்தி செய்கிறார். இந்த மரக்கன்றுகளை வனத்துறை, அரசு அலுவலகங்கள், மற்ற பள்ளிகள், கல்லூரிகள், சுற்றுவட்டார 50 கிராம மக்களுக்கு இலவசமாக வழங்கிவருகிறார்.
இவர்களது நர்சரியில் தேசியப் பசுமைப் படை மாணவர்கள் மூலம் தினசரி 200 முதல் 300 புதிய மரக்கன்றுகள் உருவாகின்றன. மாதம் 8,000 மரக்கன்றுகள் வரை இலவசமாக வழங்குகிறார்கள். இந்த மரக்கன்றுகளை உருவாக்க ஒரு பைசாகூட செலவு செய்யப்படுவதில்லை. நர்சரி அமைக்கத் தேவையான நிலத்தையும் தண்ணீரையும் பள்ளி நிர்வாகம் வழங்கியுள்ளது.
20 லட்சம் கன்றுகள்
"எங்கள் பள்ளி வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வேம்பு, பூவரசு, மயில் கொன்றை, சரக்கொன்றை, நாவல், தூங்குமூஞ்சி மரம், நாகை உள்ளிட்ட 11 வகை மரங்கள் உள்ளன. பள்ளியில் உள்ள மரங்களில் இருந்து விழும் ஒரு விதையைக்கூடக் குப்பைக்குப் போகவிடாமல் எடுத்து, காய வைத்துப் பதப்படுத்தி மரக்கன்றுகளை உருவாக்குகிறோம்.
பிளாஸ்டிக்கையும் ஒரு வகையில் ஒழித்து வருகிறோம். மரக்கன்றுகளை வளர்க்கப் பிளாஸ்டிக் பைகள் தேவைப்படுகின்றன. அதற்கு பழைய பிளாஸ்டிக் பாக்கெட்டுகளை மீண்டும் பயன்படுத்துகிறோம்" என்கிறார் ரவீந்திரன்.
கடந்த 15 ஆண்டுகளில் இதுவரை 20 லட்சம் மரக்கன்றுகளை இவர்கள் உருவாக்கி இருக்கிறார்கள். திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை 10 லட்சம் மரங்கள் நட்டு வளர்க்க இவர்கள் காரணமாக இருந்துள்ளனர். திண்டுக்கல் டி.ஐ.ஜி. அலுவலகத்தில் ஒரே நேரத்தில் 1,500 மரக்கன்றுகளை நட்டிருக்கிறார்கள். திண்டுக்கல் நீதிமன்றம், மதுரை காந்தி மியூசியம், மதுரை வேளாண்மைப் பல்கலைக்கழகம், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏராளமான பள்ளிகள், கல்லூரிகளில் இவர்கள் வழங்கிய மரக்கன்றுகள் தற்போது மரங்களாக வளர்ந்து நிற்கின்றன.
காடு காப்போம்
“நாடு சுதந்திரம் பெற்றபோது நமது நாட்டில் 60 சதவீதம் காடு இருந்தது. தற்போது வெறும் 22 சதவீதம் காடு மட்டுமே இருக்கிறது. நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு காட்டு வளம் இருந்தால் மட்டுமே சராசரி மழையளவுக்கு உத்தரவாதம் உண்டு. தற்போது மழையளவு குறைந்திருப்பதற்குக் காடுகள் குறைந்ததும் ஒரு காரணம்.
நாங்கள் 15 ஆண்டுகளாக இந்தப் பணியைச் செய்து வருகிறோம். ஒரு மரக்கன்றைத் தினசரித் தண்ணீர் ஊற்றி 2 ஆண்டுகளுக்குப் பராமரித்தால், அந்தக் கன்று தானாகவே வளர்ந்துவிடும். நாம் அனைவரும் இதைப் பின்பற்றினால் விரைவிலேயே 33 சதவீதக் காடுகளை உருவாக்கலாம். மழை வளமும் பெறலாம்'' என்கிறார் இந்தப் பச்சை மனிதர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT