Published : 23 Feb 2023 04:05 PM
Last Updated : 23 Feb 2023 04:05 PM
இந்தியாவில் ஆறு முதல் 14 வயதுவரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் இலவசக் கட்டாய கல்வி என்பதை உரிமை ஆக்கியது கல்வி உரிமைச் சட்டம் (ஆர்டிஈ) 2009. அன்றைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் அமல்படுத்தப்பட்ட இந்தச் சட்டத்தின்படி நாடு முழுவதும் உள்ள தனியார் பள்ளிகள் அனைத்தும் தொடக்க வகுப்புகளில் (மழலையர் வகுப்புகள், ஒன்றாம் வகுப்பு) 25% இருக்கைகளை பொருளாதாரத்திலும் சமூகரீதியாகவும் பின்தங்கிய பிரிவினருக்கும் ஒதுக்க வேண்டும். அவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசு முழுமையாகச் செலுத்திவிடும்.
ஒவ்வொரு கல்வி ஆண்டு தொடங்கும் முன்பாக இந்தப் பிரிவின் கீழ் மாணவர்களைச் சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் பெறப்படும். ரூ.2 லட்சத்துக்குக் குறைவான ஆண்டு வருமான கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் இந்த இருக்கைகளுக்கு விண்ணப்பிக்கலாம். இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் சமூகரீதியாகப் பின்தங்கியவர்களுக்கான இருக்கைகளுக்கு விண்ணப்பிக்கலாம். மாற்றுத் திறனாளிக் குழந்தைகள், தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகள், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டோரின் குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
தமிழ்நாட்டில் 9,000 தனியார் பள்ளிகளில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் இருக்கைகள் ஆர்டிஈ ஒதுக்கீட்டின் கீழ் வருவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. 2023-24 கல்வியாண்டில் ஆர்டிஐ சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி., ஒன்றாம் வகுப்புகளில் குழந்தைகளைச் சேர்ப்பதற்கு 2023 மார்ச் 20 முதல் ஏப்ரல் 20வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆர்டிஈ இட ஒதுக்கீட்டின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசு இன்னும் செலுத்தவில்லை என்றும் அந்த நிலுவைத் தொகைய அரசு செலுத்தாவிட்டால் வருகிற கல்வியாண்டில் 25% இடங்களை ஏழை மாணவர்களுக்கு ஒதுக்க முடியாது என்றும் தனியார் பள்ளிச் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு இதற்கான நடவடிக்கையை விரைந்து எடுத்து கல்வி உரிமைச் சட்டம் முழுமையாகவும் தொடர்ச்சியாகவும் கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT