Published : 04 Jan 2023 07:02 PM
Last Updated : 04 Jan 2023 07:02 PM
தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் என்பதன் சுருக்கமே தாட்கோ. தமிழ்நாடு அரசு தாட்கோ மூலம் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினரின் வாழ்க்கை முன்னேற்றத்துக்காகப் பல்வேறு சுயவேலைவாய்ப்பு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் மாணவர்களுக்கு வழங்கப்படும் விவசாய ட்ரோன் கருவி பயிற்சிக்கான விண்ணப்பங்கள் இப்போது வரவேற்கப்படுவதாக அறிவித்துள்ளது.
ரூ. 61,100 மதிப்புள்ள இந்தப் பயிற்சி கட்டணத்தை தாட்கோ நிறுவனம் முழுமையாக ஏற்கிறது. 10 நாட்கள் வழங்கப்படும் இப்பயிற்சியில் பங்கெடுப்பவர்களுக்குத் தங்கும் இடம், உணவு ஆகியவை இலவசம். பயிற்சியை முழுமையாக நிறைவு செய்பவருக்கு அடுத்த 10 ஆண்டுகளுக்கான அங்கீகரிக்கப்பட்ட ட்ரோன் ரிமோட் பைலட் உரிமம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயத் துறையில் பூச்சி மருத்து தெளித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகிறது. ட்ரோன் பயன்பாடு அதிகமாக இருக்கும் இத்துறையில் நாள்தோறும் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை ட்ரோன் பைலட் பணியாளர்கள் வருமானம் ஈட்டலாம் எனத் தெரிகிறது. இதனால் பயிற்சி முடித்தவர்கள் சொந்தமாக அல்லது தாட்கோ நிறுவனத்தின் உதவியோடு ட்ரோன் கருவியை வாங்கிப் பயன்படுத்தலாம். தாட்கோவின் தொழில்முனைவோர் திட்டத்தின் கீழ் வங்கிக் கடனுதவி வழங்கப்படுகிறது. திட்டத் தொகையில் 30 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 2.25 லட்சம், இதில் எது குறைவோ அதை மானியமாகப் பெற்ற மீதமுள்ள தொகையை வங்கிக் கடனாக பெற்று ட்ரோன் கருவியை வாங்கிப் பயன்படுத்தலாம்.
இதற்கான விண்ணப்பம் எங்கு கிடைக்கும்?
ஆதி திராவிடர், பழங்குடியின பிரிவைச் சேர்ந்த மாணவ, மாணவிகள், திருநங்கைகள் இந்தப் பயிற்சியில் பங்கேற்கலாம். 18 முதல் 45 வயதுக்குட்பட்ட பத்தாம் வகுப்பு / ஐடிஐ / டிப்ளமோ / பட்டப்படிப்பு / பொறியியல் பட்டப்படிப்பு படித்தவர்கள் இப்பயிற்சிக்காக விண்ணப்பிக்கலாம். தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் மருத்துவ தகுதிச் சான்றிதழ், பாஸ்போர்ட் எனக் கேட்கப்பட்டுள்ள உரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். இதுகுறித்த விரிவான தகவல்களுக்கு, http://tahdco.com/apply-online.php என்கிற தளத்தைப் பார்க்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT