Published : 27 Dec 2022 02:06 PM
Last Updated : 27 Dec 2022 02:06 PM
மத்திய பழங்குடியினர் விவகாரத் துறை அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் பட்டியலின பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு உயர் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. இந்தியாவின் பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் எம்.பில், பி.எச்டி பயிலும் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகள் இந்த உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
அடுத்த கல்வி ஆண்டுக்கான விண்ணப்பங்கள் இப்போது வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆண்டுதோறும் 750 மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் இந்த உதவித் தொகை திட்டத்தில் மாற்றுத்திறனாளிகள், பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. உதவித்தொகை பெற விரும்புவோர் முதுகலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் எம்.பில் அல்லது பி.எச்டி படித்துக் கொண்டிருப்பவராக இருக்க வேண்டும். மாணவ மாணவிகள் இந்தப் படிப்பைப் படித்து முடிக்கும் வரை அவர்களுக்கான உதவித் தொகை வழங்கப்படுகிறது. எம்.பில் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ. 25,000 தொகையும், பி.எச்டி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் ரூ. 28,000 தொகையும் வழங்கப்படுகிறது.
நடப்பாண்டில் மட்டும் நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த இரண்டாயிரத்துக்கும் அதிகமான மாணவ மாணவிகள் இந்த உதவித் தொகையைப் பெற்றிருப்பதாகப் பழங்குடியின விவகாரத் துறை அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. இதற்காக ரூ. 62 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க வேண்டிய தளம்: https://fellowship.tribal.gov.in/
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 31, 2023
விண்ணப்பிக்க தேவையான சான்றிதழ்கள்: விண்ணப்பதாரரின் ஒளிப்படம், குடும்ப வருமானச் சான்றிதழ், பழங்குடியின அடையாள சான்றிதழ், முதுகலை பட்டப்படிப்பின் மதிப்பெண் சான்றிதழ், எம்.பில் அல்லது பி.எச்டி படிப்பில் இணைந்ததற்கான ஒப்புகைச் சான்றிதழ்.
எந்தெந்த கல்லூரிகள், பல்கலைக்கழகங்களைச் சேர்ந்தவர்கள் இந்த உதவித் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம், தேவையாண ஆவணங்கள், விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்பத்திற்கு பிறகு உதவித் தொகை பெறுவது தொடர்பான தகவல் என அனைத்து விவரங்களையும் https://scholarships.gov.in/ என்கிற இணையதளத்தில் பார்க்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT