Published : 24 Sep 2022 02:14 PM
Last Updated : 24 Sep 2022 02:14 PM
அரசு, அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதிக் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட்., பட்டப் படிப்பு மாணவ சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பப்பதிவு மற்றும் கலந்தாய்வுக்கான தேதிகளை தமிழ்நாடு கல்லூரிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
அதன்படி, இன்று முதல் (24.09.2022) அக்டோபர் 3ஆம் தேதி(03.10.2022) வரை பி.எட்., பட்டப் படிப்புக்கான விண்ணபங்களை இணையவழியில் சமர்ப்பிக்கலாம். அக்டோபர் 6ஆம் தேதி ரேங்க் பட்டியல் வெளியிடப்படும் எனவும் அக்டோபர் 12ஆம் தேதி கலந்தாய்வு தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பி.எட்., பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை தொடர்பான வழிகாட்டு நெறிமுகளை கல்லூரிக் கல்வித்துறை வெளியிட்டிருந்தது. அதில், அனைத்து வகைக் கல்லூரிகளிலும் பி.எட்., மாணவர் சேர்க்கையில் 69சதவீத இடஒதுக்கீடு கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பி.எட்., படிப்புக்கான மாணவர் சேர்க்கை இணையவழியில் மட்டுமே நடத்தப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு, அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பி.எட்., படிப்பில் சேர https://tngasaedu.in/ என்கிற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். சுயநிதிக் கல்லூரிகளைப் பொறுத்தவரை, அந்தந்த கல்லூரி இணையதளத்தில் விண்ணப்பங்களைப் பூர்த்திசெய்து சமர்ப்பிக்கலாம்.
இளங்கலை, முதுகலை அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான படிப்புகளில் தேர்ச்சிபெற்றவர்கள் பி.எட்., பட்டப்படிப்பில் சேரலாம். தமிழ், உருது, ஆங்கிலம், வரலாறு உள்ளிட்ட பத்துப் பாடப்பிரிவுகளுக்கு இளங்கலை பட்டத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ஹோம் சயின்ஸ், பொருளாதாரம், வணிகவியல் உள்ளிட்ட ஒன்பது பாடப்பிரிவுகளுக்கு முதுகலைப் பட்டத்தில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பி.எட்., பட்டப்படிப்பில் சேர விரும்புவர்கள் இளங்கலை பட்டப்படிப்பில் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டியது அவசியம். வகுப்புவாரியாகப் பட்டியலினத்தவர்கள்40 சதவீத மதிப்பெண், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் 43 சதவீத மதிப்பெண், பிற்படுத்தப்பட்ட பிரிவினர் 45 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு https://tngasaedu.in/ என்கிற இணையதளத்தைப் பாருங்கள்.
இது தொடர்பான சந்தேகங்களுக்கு : 044-28260098 ; 044-28271911 என்கிற எண்களைத் தொடர்புகொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT