கல்வி - வேலை வழிகாட்டி
தாதாசாகிப் பால்கே 152: இந்தியத் திரையுலகின் தந்தை
தாதாசாகிப் பால்கே 152: இந்தியத் திரையுலகின் தந்தை
`இந்திய சினிமாவின் தந்தை' என்று கொண்டாடப்படும் தாதாசாகிப் பால்கேவின் 152ஆம் பிறந்தநாள் இன்று. அவர் குறித்து அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய தகவல்களின் தொகுப்பு:-
- 1870 ஏப்ரல் 30இல் அன்றைய பம்பாய் மகாணத்தின் நாசிக் அருகே பிறந்தார். அவருடைய இயற்பெயர் துண்டிராஜ் கோவிந்த் பால்கே. ஓவியம், அச்சுக்கலை, ஒளிப்படம், மேஜிக் எனப் பல கலைகளில் அதீத ஆர்வம் கொண்டிருந்தவர், அதையொட்டியே தனது தொழிலையும் வாழ்க்கையையும் அமைத்துக்கொண்டார்.
- ஒளிப்படம் எடுத்தால் வாழ்நாள் குறைந்துபோகும் என்ற மூடநம்பிக்கையால் அவருடைய ஒளிப்படத் தொழில் நலிவடைந்தபோதுதான், முழுநீளத் திரைப்படம் எடுப்பதற்கான முயற்சிகளைத் தன்னம்பிக்கையுடன் தொடங்கியிருந்தார்.
- 1910இல் பால்கே பார்த்த ‘தி லைஃப் ஆஃப் கிறைஸ்ட்’ என்ற பிரெஞ்சுத் திரைப்படம் அவர் மீது பெரும் தாக்கத்தைச் செலுத்தியது. அதே பாணியில் கிருஷ்ணரைப் பற்றி ஒரு திரைப்படத்தை எடுக்க அவர் தீர்மானித்தார்.
- திரைப்படத் தொழிலில் முழு மூச்சாக இறங்கினார். அதற்கென லண்டன் சென்று படக்கருவிகளை வாங்கிவந்தார். பணப்பற்றாக்குறை வரவே குறும்படம் ஒன்றை எடுத்து, அதைத் திரையிட்டுக் காட்டி செல்வந்தர்களிடம் நிதியுதவி பெற்றார்.
- படப்பிடிப்புக்கான நாள் நெருங்கிய தருணத்தில் பால்கே பார்த்த அரிச்சந்திரா நாடகம், அவருடைய முதல் சினிமாவின் கதையை மாற்றக் காரணமானது. கிருஷ்ணரைக் காத்திருப்பில் வைத்துவிட்டு ‘ராஜா ஹரிச்சந்திரா’வைக் கையிலெடுத்தார். அந்தப் படத்தின் நாயகியாக அக்கால வழக்கத்தின்படி ஆண் நடிகர் ஒருவரே நடித்தார். 1913இல் மௌனப்படமாக வெளியான ‘ராஜா ஹரிச்சந்திரா’ பெரும் வெற்றியடைந்தது. இதுவே இந்தியாவின் முதல் முழுநீளத் திரைப்படமாகக் கருதப்படுகிறது.
- அதே ஆண்டில் ‘மோகினி பஸ்மாசுர்’ படத்தின் மூலம் நாட்டின் முதல் நடிகைகளாக, தாய்-மகளான கமலா பாய் கோகலே, துர்காபாய் காமத் ஆகியோரை பால்கே அறிமுகப்படுத்தினார். கிருஷ்ணன் கதையை 1918இல் ‘கிருஷ்ண ஜென்மா’ என்கிற தலைப்பில் திரைப்படமாக எடுத்தார். ‘லங்கா தகன்’ படத்தில் ராமன், சீதை என இரண்டு வேடங்களில் ஒரே ஆணை நடிக்கவைத்து முதல் இரட்டை வேடச் சாதனைக்கும் காரணமானார்.
- திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை உருவாக்கியதுடன், புதியவர்களுக்கு வழிகாட்டுவதற்காக ‘திரைப்படங்கள் எப்படி உருவாகின்றன?’ என்பதை விளக்கும் வகையில், அந்தக் காலத்திலேயே ஓர் ஆவணப் படமும் எடுத்தார்.
- 15 ஆண்டுகளில் புகழ்பெற்ற பல திரைப்படங்களை உருவாக்கினார். 1937இல் வெளியான ‘கங்காவர்த்தன்’, பால்கே இயக்கிய கடைசித் திரைப்படம். அதுவே அவருடைய ஒரே பேசும் படம்.
- 1944இல் பால்கேயும் அவருடைய மனைவி சரஸ்வதிபாயும் மறைந்தார்கள். இந்திய சினிமாவின் வாழ்நாள் சாதனையாளர்களைக் கௌரவிக்கும் உயரிய விருது, பால்கேவின் பெயரில் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.
இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க': https://www.hindutamil.in/web-subscription
