Published : 15 Apr 2022 11:31 AM Last Updated : 15 Apr 2022 11:31 AM
லியனார்டோ டாவின்சி: மகத்தான ஓவியர்
உலகப் புகழ்பெற்ற ஓவியர் லியனார்டோ டாவின்சியின் பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றிய அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய தகவல்களின் தொகுப்பு-
இத்தாலியின் டஸ்கானி பிராந்தியத்தில், வின்சி குடியிருப்புப் பகுதியில் உள்ள அன்சியானோ என்ற கிராமத்தில் லியனார்டோ டாவின்சி 1452 ஏப்ரல் 15 அன்று பிறந்தார். தந்தையுடன் ஃபிளாரன்ஸ் நகருக்கு 1465இல் குடிபெயர்ந்தார். வெர்ரோசியோ என்ற ஓவியரிடம் பயிற்சி பெற்றார்.
வெர்ரோசியோவின் ‘கிறிஸ்துவின் ஞானஸ்நானம்’ (Baptism of Christ) ஓவியத்தில் தோன்றும் தேவதையை லியனார்டோ வரைந்தார். பிறகு அவர் வரைந்த ‘அர்னோ பள்ளத்தாக்கு ஓவிய’மே லியனார்டோவின் முதல் ஓவியமாகக் கருதப்படுகிறது.
மிலன் பகுதியை ஆண்டுவந்த பிரபு (Duke) லுடோவிகோ ஸ்ஃபோர்ஸவின் கீழ் பொறியாளர், கட்டிடக் கலை நிபுணர், சிற்பி, ஓவியராகப் பணியாற்றினார். பின்னர் ஆறாம் அலெக்ஸாண்டரின் மகன் சீசர் போர்கியாவிடம் ராணுவ கட்டுமான நிபுணராகவும் பொறியாளராகவும் பணியில் இருந்தார். ஃபிரெஞ்சு அரசர் 12ஆம் லூயி, ஒன்றாம் ஃபாங்காய்ஸ் ஆகியோரின் கீழும் லியனார்டோ பணிபுரிந்துள்ளார்.
மனித உடல்களின் அங்கங்களைக் குறிப்பதன் மூலம் மனிதனுக்கும் இயற்கைக்கும் உள்ள உறவைப் புலப்படுத்தும் ‘விட்ருவியன் மனித ஓவியம்’ அவர் வரைந்ததே. வாழ்நாள் முழுவதும் அவர் வரைந்த ஓவியங்கள் பலவும் இன்று நாம் பயன்படுத்தும் பறக்கும் இயந்திரம், கால்குலேட்டர், டாங்க், பாரசூட் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கான தொடக்காலக் கருத்துருக்களாக அமைந்துள்ளன. ஓவியத்தில் மட்டுமல்லாமல் அறிவியல் ஆராய்ச்சியிலும் லியனார்டோ தொடர்ந்து கவனம் செலுத்தினார்.
பல பரீட்சார்த்த நுட்பங்களை உள்ளடக்கிய யேசுநாதரும் சீடர்களும் தோன்றிய ‘கடைசி இரவு விருந்து’ (Last Supper) சுவரோவியத்தை 1495இல் வரைந்தார். புகழ்பெற்ற ‘மோனலிசா’ ஓவியம் 1503இல் வரையப்பட்டது. ‘ஞானஸ்நானம் செய்விக்கும் புனித ஜான்’ (St John The Baptist) ஓவியமே அவர் கடைசியாக வரைந்த ஓவியம் என்று கருதப்படுகிறது.
1519 மே 2இல் லியனார்டோ காலமானார்.
லியனார்டோவின் புகழ்பெற்ற சில ஓவியங்கள்
‘மோனலிசா’ (Mona Lisa)
‘மடோனா’ (Madonnahttps://en.wikipedia.org/wiki/Leonardo_da_Vinci#cite_note-66)
‘கடைசி இரவு விருந்து’ (Last Supper)
‘மேகியின் வழிபாடு’ (Adoration of the Magi)
‘பாறைகளின் கன்னி’ (Virgin of the Rocks)
‘ஞானஸ்நானம் செய்விக்கும் புனித ஜான்’ (St John The Baptist)
‘குழந்தையைத் தாங்கிய புனித ஆன்’ (Virgin and Child with St Anne)
WRITE A COMMENT