Published : 15 Mar 2022 10:51 AM
Last Updated : 15 Mar 2022 10:51 AM
மார்ச் 6: மகளிர் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் ஆறாவது முறையாகப் பங்கேற்கும் முதல் வீராங்கனை என்கிற சிறப்பை இந்தியாவின் மிதாலி ராஜ் பெற்றார்.
மார்ச் 7: சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மத்திய அரசு வழங்கிய 2020-ஆம் ஆண்டுக்கான ‘மகளிர் சக்தி’ விருது நீலகிரியைச் சேர்ந்த கைவினைக்கலைஞர்கள் ஜெயமுத்து, தேஜம்மாளுக்கும் 2021-ஆம் ஆண்டுக்கான விருது மன நல மருத்துவ நிபுணர் தாரா ரங்கசாமிக்கும் வழங்கப்பட்டன.
மார்ச் 8: தமிழக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடுகள், இனி குடும்பத் தலைவிகளின் பெயரிலேயே வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
மார்ச் 9: குஜராத் ஜாம்நகரில் பாரம்பரிய மருந்துகளுக்கான உலக சுகாதார அமைப்பின் சர்வதேச மையத்தை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
மார்ச் 9: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
மார்ச் 10: ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் உத்தர பிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய நான்கு மாநிலங்களில் பாஜக ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டது. பஞ்சாபில் முதன் முறையாக ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது.
மார்ச் 10: இந்தியாவில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ நடத்தத் தேர்தல் ஆணையம் தயாராக இருப்பதாகத் தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா தெரிவித்தார்.
மார்ச் 11: இந்தியாவில் முதன் முறையாக முழுவதும் பெண்களால் நிர்வகிக்கப்படும் தொழிற் பூங்கா ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT