Last Updated : 01 Feb, 2022 10:47 AM

3  

Published : 01 Feb 2022 10:47 AM
Last Updated : 01 Feb 2022 10:47 AM

சித்தா, ஆயுர்வேதம் மூலமும் மருத்துவர் ஆகலாம்!

மருத்துவம் என்பது பெருங்கடல் என்றால், அலோபதி என்பது அதில் கலக்கும் ஒரு நதி மட்டுமே. இதற்கு மாறாக மருத்துவம் என்றாலே, அது அலோபதி மட்டும்தான் என்பதே பொதுவான புரிதலாக இருக்கின்றது. இந்தியாவில் சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட பல மருத்துவ முறைகள் மக்களைப் பல நூற்றாண்டுகளாகக் காப்பாற்றி வந்துள்ளன. அலோபதி போன்று அந்தப் படிப்புகளும் கற்பிக்கப்படுகின்றன.

சித்த மருத்துவம்

தமிழர்களின் வளமிக்க கலாச்சாரத்திலிருந்து உருவாக்கப்பட்ட பாரம்பரிய சிகிச்சை முறை இது. ஆரோக்கியமான உடலே ஆரோக்கியமான உள்ளத்தை உருவாக்கும் என்பது சித்த மருத்துவத்தின் அடிப்படை. உடலை வலுப்படுத்துவதன் மூலம் ஆன்மாவை வலுப்படுத்தலாம் என நம்பப்படும் முறைகளையும் மருந்துகளையும் சித்தர்கள் உருவாக்கினர். இது சித்த மருத்துவ முறை என்றழைக்கப் படுகிறது. பொதுவாக, சித்த மருத்துவத்தின் அடிப்படைக் கருத்துக்களுக்கும் ஆயுர்வேதத்தின் அடிப்படைக் கருத்துகளுக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது.

என்னென்ன படிப்புகள் உள்ளன?

l BSMS - Bachelor of Siddha Medicine and Surgery

l BAMS - Bachelor of Ayurvedic Medicine and Surgery

l BNYS - Bachelor of Naturopathy and Yogic Sciences

l BUMS - Bachelor of Unani Medicine and Surgery

யார் படிக்க முடியும்?

சித்தா - ஆயுர்வேதப் படிப்பிற்குப் பொதுப்பிரிவினர் இயற்பியல், வேதியியல், உயிரியல் / தாவரவியல் - விலங்கியல் பாடங்களில் 50 சதவிகித மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். மற்ற பிரிவினர், மேற்கண்ட பாடங்களில் 40 சதவிகித மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இந்தப் படிப்புகளுக்கான சேர்க்கைக்கு எம்.பி.பி.எஸ். மருத்துவப் படிப்புக்கான சேர்க்கைக்குப் பின்னர் கலந்தாய்வு நடத்தப்படும். இது குறித்த அறிவிப்பைத் தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் வெளியிடும். கடந்த ஆண்டு முதல் நீட் தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண் பெற்றவர்களே இந்தப் படிப்புக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு, https://tnhealth.tn.gov.in/, www.tnmedicalselection.org ஆகிய இணையத்தளங்களைப் பார்க்கலாம்.

எங்கே படிக்கலாம்?

சித்த மருத்துவ முறை இந்திய மருத்துவ அறிவியலின் ஒரு பகுதி. அதைப் பயிற்றுவிக்கும் அங்கீகரிக்கப்பட்ட சித்த மருத்துவக் கல்லூரிகள், அரசுப் பல்கலைக் கழகங்களின்கீழ் இயங்குகின்றன,

1. அரசு சித்த மருத்துவக் கல்லூரி, பாளையங்கோட்டை (BSMS) - 100 இடங்கள்

2. அரசு சித்த மருத்துவக் கல்லூரி, சென்னை (BSMS) - 60 இடங்கள்

3. அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி கோட்டாறு, நாகர்கோவில் (BAMS)- 60 இடங்கள்

4. அரசு யுனானி மருத்துவக் கல்லூரி, சென்னை - BUMS - 60 இடங்கள்

5. அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி, திருமங்கலம், மதுரை - 50 இடங்கள்

6. ஐந்து கல்லூரிகளிலும் மொத்த இடங்கள் 330. இதில் 50 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கானவை. தமிழ்நாட்டில் தனியார் சித்த மருத்துவக் கல்லூரிகள் 25 உள்ளன.

படிப்புக்கான கட்டணங்கள்

l அரசுக் கல்லூரியில் கட்டணம் ரூ. 5000

l அரசு ஒதுக்கீட்டில் சுயநிதிக் கல்லூரியில் சேர்பவர் களுக்குக் கட்டணம் ரூ. 10,000

l சுயநிதிக் கல்லூரியில் அரசு நிர்ணயித்துள்ள கல்விக்கட்டணம் ரூ. 1,25,000

வேலை வாய்ப்பு

தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து அரசு மருத்துவ மனைகளிலும் சித்தா பிரிவு உள்ளது. இதனால், சித்த மருத்துவம் படித்து அரசு மருத்துவமனையில் குறிப்பிட்ட காலம் பயிற்சி பெற்றால், அரசு மருத்துவர்களாக நியமிக்கப்படும் வாய்ப்பு அதிகம் உண்டு. அரசுப் பணியில், சித்த மருத்துவர்களுக்கான சம்பளம் அலோபதி மருத்துவர்களின் சம்பளத்துக்கு இணையானது. தனியார் மருத்துவமனைகளிலும் சித்த மருத்துவர்களுக்கான தேவை இன்றைய காலகட்டத்தில் அதிகமாக உள்ளது. இவை தவிர தனியாகவும் மருத்துவ மையம் தொடங்கலாம். அலோபதிக்கு மாற்றாகத் திகழும் இந்தப் படிப்புகளைப் படிப்பது, மாணவர்களின் மருத்துவக் கனவை மட்டும் நிறைவேற்றுவதில்லை, நல்ல வேலையையும் கைநிறைய சம்பளத்தையும், முக்கியமாக நிறைவான வாழ்க்கையையும் உறுதி செய்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x