Published : 28 Dec 2021 12:12 PM
Last Updated : 28 Dec 2021 12:12 PM
கரோனா பெருந்தொற்றின் கொடூரமான இரண்டாம் அலையிலிருந்து விடுபட்டு நிம்மதியடைவதற்குள் ஒமைக்ரான் வேற்றுருவம் விடுக்கும் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. பெருந்தொற்றின் முதல் இரண்டு அலைகளால் முடங்கிய கல்வி வழங்கல் இனிமேலும் தடைபட்டுவிடக் கூடாது என்பது அனைவருடைய அக்கறையாக இருக்கிறது. இப்படியாக அச்சமும் நம்பிக்கையும் நிறைந்த 2021ஆம் ஆண்டில் கல்வித் துறை சார்ந்த முக்கியமான நிகழ்வுகளைத் திரும்பிப் பார்க்கலாம்.
தொடரும் தொலைவுக் கல்வி
2020 இறுதியில் கல்லூரிகளும் அதன் தொடர்ச்சியாக உயர்நிலை வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகளும் திறக்கப்பட்டன. பெருந்தொற்றை அனைவரும் மறந்துவிட்டது போன்ற சூழலில் திடீரென்று வந்தது கரோனா இரண்டாம் அலை. இதனால், இந்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் மீண்டும் கல்வி நிலையங்கள் மூடப்பட்டன. கடந்த ஆண்டைவிட மிகக் கொடிய விளைவுகளை ஏற்படுத்திய இரண்டாம் அலையின் காரணமாக இந்த ஆண்டிலும் குறிப்பிடத்தக்க அளவு இணையவழிக் கல்வியிலேயே கடந்தது.
இரண்டாம் அலையின் தாக்கம் குறையத் தொடங்கிய பிறகு செப்டம்பரில் தமிழ்நாட்டில் கல்லூரிகளும் உயர்நிலை வகுப்புகளுக்குப் பள்ளிகளும் மீண்டும் திறக்கப்பட்டன. அதுவும் தீவிரமான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளோடு. ஆசிரியர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி, ஒரு வகுப்பறையில் அதிகபட்சம் 20 மாணவர்களுடன் தனிநபர் இடைவெளியைக் கடைபிடிப்பது உள்ளிட்ட தீவிரமான கட்டுப்பாடுகள் பின்பற்றப்பட்டன. நவம்பர் 1 முதல் தொடக்க, நடுநிலை வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டன. 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்கள் 19 மாதங்களுக்குப் பிறகு பள்ளி வாழ்க்கையைத் தொடங்கினர்.
நீட் விலக்கு - வருமா, வராதா?
2021 தேர்தலில் வென்று திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தமிழ்நாட்டில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வுசெய்து அறிக்கை அளிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் ஒன்பது பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டும் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு கிடைக்கவில்லை. மேலும், நீட் தேர்வு அச்சத்தின் காரணமாக நான்கு மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர்.
இதனால், அடுத்த கல்வியாண்டிலாவது நீட் தேர்வுக்கு விலக்கு பெற்றுத் தந்தாக வேண்டும் என்பதற்கான சமூக, அரசியல் அழுத்தம் தமிழ்நாடு அரசுக்குப் பன்மடங்கு அதிகிரித்துள்ளது. ஏ.கே.ராஜன் குழு செப்டம்பரில் வெளியிட்ட அறிக்கை நீட் தேர்வுக்குப் பின் தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் கிராமப்புற, ஏழை மாணவர்கள் எண்ணிக்கை கடுமையாகச் சரிந்திருப்பது உள்பட நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டியதற்கான பல்வேறு காரணங்களை விரிவாக விளக்கியிருந்தது.
தொழிற்கல்வியில் இட ஒதுக்கீடு
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரி சேர்க்கையில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஆண்டு ஆட்சி மாற்றத்துக்குப் பின் பொறியியல், சட்டம், வேளாண்மை, கால்நடை மருத்துவம் உள்ளிட்ட இதர தொழிற்கல்விப் படிப்புகளிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது.
தமிழ்நாட்டில் புதிய கல்லூரிகள்
தமிழ்நாட்டில் கிராமப்புற மாணவர்களின் கல்வி வாய்ப்புகளை அதிகரிப்பதற்காக அறநிலையத் துறை சார்பாக பத்து புதிய கலை - அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து சென்னை, நாமக்கல், திண்டுக்கல், தூத்துக்குடி மாவட்டங்களில் நான்கு புதிய கல்லூரிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஆனால், அறநிலையத் துறையின் நிதி, கோயில் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்று கல்லூரி தொடங்கும் முடிவை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் மேலும் புதிய கல்லூரிகளைத் தொடங்குவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது. மேலும், ஏற்கெனவே தொடங்கப்பட்ட கல்லூரிகளில் இந்து மதம் தொடர்பான ஒரு கல்வி வகுப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இது நீங்கலாக, புதிதாக மூன்று வேளாண் கல்லூரிகள், சென்னைக்கு அருகில் இந்தியாவிலேயே முதன்முறையாக சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் ஆகியவை அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
மாணவர்களை தேடிச் செல்லும் கல்வி
கரோனா பெருந்தொற்றின் காரணமாக மாணவர்கள் கல்வி கற்பதில் ஏற்பட்ட இடைவெளியை நிரப்பும் நோக்கில் ‘இல்லம் தேடிக் கல்வி’ என்னும் திட்டத்தை தமிழ்நாடு அரசு படிப்படியாக செயல்படுத்தத் தொடங்கியது. தேர்ந்தெடுக்கப்பட்ட தன்னார்வலர்கள் மாலை நேரங்களில் மாணவர்கள் வசிக்கும் பகுதிகளுக்குச் சென்று கல்வி கற்பிக்கும் இந்தத் திட்டம் பரவலான வரவேற்பையும் தீவிரமான விமர்சனங்களையும் எதிர்கொண்டது.
இந்தத் திட்டத்தின் மூலம் சாதி, மத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கல்வி புகட்டும் போர்வையில் தமது மதவாத, சாதிய கருத்துகளை மாணவர்கள் மனங்களில் திணிக்கும் அபாயம் இருப்பதாக கல்வித் துறை செயற்பாட்டாளர்கள் அச்சம் தெரிவித்தனர். ஆனால், முறையான சோதனைகளுக்குப் பிறகே தன்னார்வலர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர் என்றும் அவர்களின் பணி தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்படும் என்றும் முதல்வர் விளக்கம் அளித்தார்.
மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீடு
அனைத்திந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்படும் மருத்துவ இளநிலை, முதுநிலை கல்வியிடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீதம், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான 10 சதவீதம் இடஒதுக்கீட்டை 2021-22 கல்வியாண்டிலிருந்து அமல்படுத்தப்போவதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. அனைத்திந்திய தொகுப்பில் 2007 முதல் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி பட்டியல் சாதி, பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டுவருகிறது.
மத்திய அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கைப்படி இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடும் பின்பற்றப்பட வேண்டும் என்று பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டிருந்த நிலையில் மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் இதர பிற்படுத்தப்பட்ட, பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவுகளைச் சேர்ந்த 5,550 மாணவர்கள் பயன்பெறுவர் என்று கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT