பொற்பனைக்கோட்டையின் வேர்களைத் தேடிச் செல்லும் பேராசிரியர்
கீழடி, ஆதிச்சநல்லூர் வரிசையில் அண்மையில் கவனம் பெற்றிருப்பது பொற்பனைக்கோட்டை. ட்விட்டர் ஸ்பேசஸ் தளத்தில் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் இரண்டு பேராசிரியர்கள் பொற்பனைக்கோட்டையின் வரலாறு குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சியை அண்மையில் நடத்தினார்கள். நிகழ்வில் அனந்தராம கிருஷ்ணன் எழுப்பிய கேள்விகளுக்கு இனியன் இளவழகன் அளித்த பதில்கள், காலவோட்டத்தில் புதைந்துபோன தொன்மையான வரலாற்றின் மீது பாய்ச்சப்பட்ட ஒளிக்கீற்றாக மின்னின.
பொற்பனைக்கோட்டை குறித்து முனைவர் இனியன் அளித்த விளக்கம்:
வரலாறு
“வரலாற்றுச் சிறப்புமிக்க கோவில்களுக்கும், தமிழ்நாட்டு வரலாற்றிலும் தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்றது புதுக்கோட்டை மாவட்டம். புதுக்கோட்டைக்குக் கிழக்கே 6 கி.மீ. தொலைவில் உள்ளது பொற்பனைக்கோட்டை. இதன் சுற்றளவு இரண்டரை கிலோ மீட்டர். கோட்டையின் கிழக்குப் பகுதியில் பெரியவாரிக் கரையில் பழமைவாய்ந்த கீழக்கோட்டை ஆதி முனீஸ்வரர் ஆலயம், மேற்குப் பகுதியில் மேலக்கோட்டை முனீஸ்வரர் ஆலயம், வடக்குப் பகுதியில் காளியம்மன் ஆலயம், தெற்கே ஐயனார் ஆலயம் ஆகியவை உள்ளன.
2012 ஆம் ஆண்டு இந்தக் கோட்டையில் உள்ள குளக்கரையில் முக்கோண வடிவிலான பழந்தமிழ் கல்வெட்டுடன் கூடிய நடுகல் கண்டறியப்பட்டது. இந்நடுகல் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தொல்லியல், கல்வெட்டியல் துறையிடம் உள்ளது. இந்தத் தமிழி கல்வெட்டில் ‘ஆடு, மாடு பிடிக்க வந்தவர்களை எதிர்த்துப் போராடி மடிந்த போர் வீரனி’ன் பெயர் எழுதப்பட்டுள்ளது. கோட்டைச் சுவருக்கு வெளியே சற்றுத் தொலைவிலுள்ள பாறைப் பகுதியில் வட்டமாகவும், நீளமாகவும் நூற்றுக்கு மேற்பட்ட சுடுமண் வார்ப்புக் குழாய்கள், உருக்குக் கலன்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவை அக்காலத்தில் இரும்பை உருக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம், இவை 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்டவையாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
ஒரே கொத்தளம்
பொற்பனைக்கோட்டையின் வடக்குச் சுவரின் மேற்புறத்தில் கொத்தளம் எனப்படும் சங்க காலச் சுவர் அமைப்பு இன்றுவரை உள்ளது. கொத்தளம் எனப்படும் கோட்டை கட்டுமான அமைப்பு, தமிழ்நாட்டிலேயே இங்கு மட்டும்தான் கண்டறியப்பட்டுள்ளது. கோட்டைக்குள் பழைய அரண்மனை இருந்ததற்கான சுவடுகளும் இருப்பதாகக் கருதப்படுகிறது. அரண்மனைக்கு அருகில் பொய்கைக்குளம் எனப்படும் நீராவிக் குளம் உள்ளது. இதன் மையத்திலிருந்து சிறிது தூரத்தில், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆயுதங்கள் செய்யப்படும் இரும்பு உருக்கு ஆலையும், பாறையில் செதுக்கப்பட்ட குழியும் காணப்படுகின்றன. அது சென்னாக்குழி என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
நீதிமன்ற அனுமதி
சில ஆண்டுகளுக்கு முன் புதுக்கோட்டை தொல்லியல் கழகத்தினர், இவ்விடத்தில் ஆய்வு மேற்கொண்டு பானை, ஓடுகள், பழமையான கட்டுமானம் இருப்பதைக் கண்டறிந்து அகழாய்வு நடத்த வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அகழாய்வு செய்வதற்கான ஆணையை நீதிமன்றம் வழங்கியது. இந்த நிலையில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் சார்பாகப் பொற்பனைக்கோட்டையை ஆய்வு நடத்த அனுமதி கேட்டிருந்தேன். என்னை இயக்குநராகக்கொண்டு அகழாய்வு நடத்த மத்திய தொல்லியல் துறை அனுமதி அளித்துள்ளது.
வரலாற்றுச் சான்று
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பார்த்தசாரதியின் வழிகாட்டுதலில் இந்த அகழாய்வை நடத்திவருகிறேன். எத்தனை எத்தனையோ சிறப்புகள் இக்கோட்டையின் மண்ணில் சிதறிக்கிடக்கின்றன. இந்த அகழாய்வில் கீழடி அளவுக்கு மிகப்பெரிய வரலாறு புதைந்துகிடக்கும் என எதிர்பார்க்கிறேன். அந்த வரலாற்றின் பெருமைமிகு சான்றுகளாக பொற்பனைக்கோட்டை வெளிவரும் என்று நம்புகிறேன்”.
