Published : 11 May 2021 03:11 AM
Last Updated : 11 May 2021 03:11 AM
தாமோதரனின் கதையை அறியாதவர்கள், ஆயிரக்கணக்கானோரைப் போல் அவரும் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார் அவ்வளவுதானே என்று சாதாரணமாகக் கடந்து போய்விட முடியும். ஆனால், அவருடைய கதையைத் தெரிந்துகொண்டால், அவருடைய முனைவர் பட்டம் குறித்து வியப்படையாமல் இருப்பது கடினம். அவர் முனைவர் படிப்பைப் படித்ததன் நோக்கம், ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட தலைப்பு – பின்னணி, அதனால் கிடைக்கப்போகும் பயன் ஆகியவற்றைத் தெரிந்துகொண்டால் தாமோதரன் மீது பெருமதிப்பு உருவாவதைத் தவிர்க்க முடியாது.
குழந்தைத் தொழிலாளர்
கள்ளக்குறிச்சி அருகேயுள்ள கச்சிராயப்பாளையத்தில் விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு மூத்த மகனாகப் பிறந்தவர் தாமோதரன் முனியன். ஐந்தாம் வகுப்பிலிருந்தே வேலைக்குச் செல்லத் தொடங்கிவிட்டார். காலையில் வயலுக்குச் சென்று வேலை பார்த்துவிட்டு ஓடையில் குளித்துவிட்டு அங்கிருந்து பள்ளிக்கூடம்; பள்ளி முடிந்தவுடன் மீண்டும் வயலில் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்குச் செல்வதே அன்றாட வழக்கம்.
தாமோதரன் அரசு வேலைக்குச் சென்று குடும்பத்தை வறுமையிலிருந்து மீட்க வேண்டும் என்பது அவருடைய தந்தையின் கனவாக இருந்தது. ஆனால், பத்தாம் வகுப்பு இறுதித் தேர்வில் கணிதத்தில் தேர்ச்சிபெறத் தவறிய தாமு, அவமானம் தாங்காமல் நண்பர்கள் சிலருடன் ரயிலேறினார். பதின்ம வயதில் கேரளத்தில் ஆலுவா என்னும் ஊரில் செங்கல் சூளையில் பணியாற்றினார். மழைக் காலத்தில் சொந்த கிராமத்துக்கு வந்து வயலில் வேலை செய்தார். கேரளத்தில் பள்ளி செல்லும் குழந்தைகளையும் தன்னுடன் படித்தவர்கள் கல்வியைத் தொடர்வதையும் பார்த்துத் தானும் தொடர்ந்து படிக்க வேண்டுமென்ற விருப்பம் அவருக்குத் துளிர்த்தது.
மீண்டும் கல்வி
மீண்டும் பத்தாம் வகுப்புத் தேர்வை எதிர்கொண்டும் வெற்றி கிடைக்கவில்லை. மேலும், இரண்டு முயற்சிகளுக்குப் பிறகே பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். தாயின் ஊக்குவிப்பால் 12ஆம் வகுப்பில் தேறினார். பட்டப்படிப்பில் சேருவதா, வேண்டாமா என்று யோசித்துக்கொண்டிருந்த நேரத்தில் அவருடைய தாய் காலமாகிவிட்டார். தந்தையும் நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்தார். குடும்பப் பொறுப்பை அவருடைய தம்பி சுமக்க முன்வந்ததை அடுத்து, சென்னை புதுக் கல்லூரியில் இளநிலை தாவரவியல் பட்டப்படிப்பில் தாமு சேர்ந்தார்.
கல்லூரிப் பருவத்தில் கற்பிக்கும் பணி
கல்லூரி மாணவர் விடுதியில் தங்குவதற்கு உரிய வசதி இல்லாததால், தரமணியில் நண்பர்களுடன் ஓர் அறையில் தங்கினார். அப்போது எய்டு இந்தியா (AID India) தொண்டு நிறுவனத்தின் தன்னார்வலர்கள் அருகில் இருந்த குடிசைப் பகுதி சிறார்களுக்குக் கல்வி கற்பித்துவந்தனர். அந்த அமைப்பை நடத்திவந்த பாலாஜி சம்பத்தின் ஊக்குவிப்பால் தாமுவும் இந்தக் கல்விப் பணியில் தன்னை இணைத்துக்கொண்டார். காலையில் கல்லூரிப் படிப்பும் மாலையில் குடிசைவாழ் குழந்தைகளுக்குப் பாடம் கற்பிப்பதும் தாமுவின் வழக்கமானது. இதற்கான பாடத்திட்டம், கற்பித்தல் முறைகளை வடிவமைப்பதில் அவர் பங்களித்தார்.
இந்தப் பணியின் போதுதான் இருளர் சமூகக் குழந்தைகளின் அவல நிலையை தாமு அறிந்துகொண்டார். சென்னை உட்படத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வாழும் இருளர் சமூகத்தினரிடையே, கொடும் வறுமையின் காரணமாகக் குழந்தைகளின் பள்ளி இடைநிற்றல் அதிகமாக இருந்தது. பெண்கள் பூப்பெய்திய உடன் திருமணம் செய்துவைத்துவிடும் வழக்கமும் இருந்தது. தங்குவதற்கு வீடும் குடிப்பதற்கு நல்ல நீரும்கூட கிடைக்காத நிலையில், ஓரளவுக்கு மேல் அவர்கள் கல்வியைத் தொடர முடியாமல் போவதில் ஆச்சரியமில்லை. அதனால், எய்டு இந்தியா அமைப்பின் மூலம் 450 இருளர் குடும்பங்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டன.
கல்வியை மேம்படுத்துவதற்கான ஆய்வு
சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் பில்டிங் அருகில் வசித்த குடிசைப் பகுதியில் பள்ளி செல்லும் குழந்தைகளிடையே நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் தாமு பங்கேற்றார். அக்குழந்தைகள் கல்வியில் பெரிதும் பின்தங்கியிருப்பதை அறிந்துகொண்டார். 2013இல் சென்னைப் பல்கலைக்கழக மானுடவியல் துறையில் முனைவர் பட்டத்துக்குப் பதிவுசெய்தார். ‘கிராமப்புற, பழங்குடிக் குழந்தைகளின் கல்வி, கற்றல் விளைவுகள்’ என்னும் தலைப்பில் ஆய்வு மேற்கொண்டார். இதற்காக ஜவ்வாதுமலை, கல்வராயன் மலை உள்ளிட்ட பல பகுதிகளில் பள்ளிக் குழந்தைகளிடம் கற்றல் விளைவுகள் குறித்துக் களஆய்வு மேற்கொண்டார்.
தற்போது முனைவர் பட்டம் பெற்றுவிட்ட தாமோதரனின் முனைவர் பட்ட ஆய்வு கிராமப்புற, பழங்குடிக் குழந்தைகள் கல்வி - கற்றல் விளைவுகளை மேம்படுத்துவதற்கான தீர்வுகளைத் தருகிறது.
ஆய்வின் கண்டறிதல்கள்
இருளர் குழந்தைகளில் பெரும்பாலோரின் பெற்றோருக்குத் தம் பிள்ளைகள் எந்த வகுப்பில் படிக்கிறார்கள் என்பதுகூடத் தெரிவதில்லை. அவர்களின் குழந்தைகளோ புத்தகத்தில் உள்ளதைப் பார்த்துப் படிக்கவே திணறுவதுடன், மற்றவர்களுடன் தம்மை ஒப்பிட்டுப்பார்த்துத் தமக்கு படிப்பு வராது என்று முடிவுசெய்துவிடுகின்றனர். உணவு, உறைவிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் பள்ளிக்கு வரும் இந்தக் குழந்தைகள் பள்ளிக் கல்வியை நிறைவு செய்வது தொடங்கி வேலை கிடைத்து வாழ்க்கையில் நிலைபெறுவதுவரை அரசு, பொதுச் சமூகத்தின் தலையீடு அவசியமாகிறது.
தொடர் களப்பணி மூலமாகவும் முனைவர் பட்ட ஆய்வின் மூலமாகவும் தாமு கண்டறிந்திருப்பவை இவை. இந்தத் தீர்வுகளில் பங்களித்து, அந்த இலக்குகளை முன்னகர்த்த வேண்டியது நம் கைகளிலும்தான் இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT