Published : 20 Apr 2021 03:14 AM
Last Updated : 20 Apr 2021 03:14 AM
ஒரு சிறிய குடிசை வீட்டின் ஒளிப்படத்துடன் முகநூல் பக்கங்களில் கடந்த வாரம் பகிரப்பட்ட குறிப்பு, அந்த வாரத்தின் தலைப்புச் செய்திகளில் ஒன்றாக மாறியது. கேரளத்தின் காசர்கோடு மாவட்டத்திலுள்ள ஒரு மலைக் கிராமமான பணத்தூரில் உள்ள சிறிய குடிசைதான், அந்த ஒளிப்படத்தில் இடம்பெற்றிருந்தது.
அதைப் பகிர்ந்திருந்தவர் ரஞ்சித் பணத்தூர் என்கிற முகநூல் பதிவாளர். ஏப்ரல் ஒன்பதாம் தேதிக்கு முன்புவரை சினிமா நட்சத்திரம் போலவோ, அரசியல் பிரமுகர் போலவே ரஞ்சித் அறியப்பட்டிருக்கவில்லை. இப்போது அவர் கேரளம் மட்டுமல்லாமல், மாநில எல்லை தாண்டிய நம்பிக்கை நட்சத்திரமாகியிருக்கிறார்.
ரஞ்சித் ராமச்சந்திரன் என்கிற அந்த 28 வயது இளைஞர் முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்த வார்த்தைகள் இவை: “இந்த வீட்டில்தான் நான் பிறந்தேன். இங்குதான் வளர்ந்தேன். இங்குதான் வாழ்கிறேன். நான் ஒன்றை மகிழ்ச்சியுடன் சொல்லட்டுமா? இந்த வீட்டில் ஒரு ஐ.ஐ.எம். பேராசிரியர் உருவெடுத்திருக்கிறார்” - இந்த இடுகைதான் அந்த வாரத்தின் வைரல்.
42 ஆயிரத்துக்கும் அதிகமான விருப்பக்குறிகள், 12 ஆயிரத்துக்கும் கூடுதலான பகிர்வுகளும் எண்ண முடியாத அளவுக்கும் அந்த இடுகை பார்க்கப்பட்டிருந்தது. இந்த இடுகை, ரஞ்சித்தே எதிர்பார்க்காத அளவுக்குப் பலரையும் எட்டியது. தொலைக்காட்சிகள், பத்திரிகைகள், இணையப் பத்திரிகைகள் அந்தச் சிறிய கிராமத்தின் குடிசை வீட்டுக்குப் படையெடுத்தன. ஓடும், பிளாஸ்டிக் கூரையும் கொண்ட சிமெண்ட் பூசப்படாத அந்த வீடு, அந்த வாரம் விருந்தினர்களால் நிரம்பியது.
இந்தியாவின் சிறந்த நிறுவனங்களில் ஒன்றான ராஞ்சி இந்திய மேலாண்மை நிறுவனத்தில் (Indian Institute of Management, Ranchi) துணைப் பேராசிரியர் பணிக்கு ரஞ்சித் ராமச்சந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அடிப்படை வசதிகள்கூட இல்லாத பின்னணியில் வளர்ந்த அவர் தன் கனவை நனவாக்கியுள்ளார்.
“வெள்ளத்தில் சிக்கிக்கொண்டவனாகத்தான் நான் இருந்தேன். ஆனால், நான் ஒதுங்கிய கரைகள் அழகுற இருந்தன” எனத் தன் வெற்றியைப் பற்றி பகிர்ந்துகொள்கிறார். கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் துணைப் பேராசிரியர் பணிக்கான நான்கு பணியிடங்களுக்கான தேர்வில், ரஞ்சித் நான்காம் இடம்பிடித்தார். ஆனால், மூன்று பணியிடங்கள் நிரப்பப்பட்ட பிறகும் இவருக்குப் பணியாணை வழங்கப்படவில்லை. அதைக் குறித்து முறையிட்டும் பதில் இல்லை. அதையே நம்பிக் கவலைப்பட்டுக் கொண்டிருக்காமல், தன் அடுத்த முயற்சியை ரஞ்சித் தொடர்ந்தார்.
தடைகள் நிறைந்த பயணம்
நடக்காவு அரசுப் பள்ளியில் ரஞ்சித் பள்ளிக் கல்வி முடித்துள்ளார். பிறகு ராஜாபுரம் புனித பையஸ் கல்லூரியில் இளங்கலை பொருளியல் படித்துள்ளார். இந்தக் காலகட்டத்தில்தான் பணத்தூர் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் இரவு நேரக் காவலராக அவர் பணிபுரிந்துள்ளார். ரஞ்சித்தின் அப்பா, தையல்காரர். அம்மா, நூறு நாள் ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் வேலைக்குச் செல்பவர். ரஞ்சித்தைத் தவிர, மேலும் மூன்று பிள்ளைகள் அவர்களுக்கு. ரஞ்சித்தின் கல்லூரிக் கல்விக்கு அவர்களால் செலவு செய்ய இயலவில்லை. அதனால், இரவில் காவலர் பணி, பகலில் படிப்பு என விழிப்புடன் இருந்திருக்கிறர் ரஞ்சித்.
இளங்கலையில் அதிக மதிப்பெண்ணுடன் வெற்றிபெற்ற அவர், காசர்கோடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்புக்குச் சேர்ந்துள்ளார். அங்கு அவரது பேராசிரியர் ஷியாம் பிரசாத், ரஞ்சித் ஆய்வு நடத்த ஊக்கமளித்துள்ளார். அதுவரை ஆய்வு மேற்கொள்ளும் எண்ணம் ரஞ்சித்துக்கு இருந்திருக்கவில்லை. முதுகலையிலும் அதிக மதிப்பெண் எடுத்ததால், முனைவர் பட்ட ஆய்வுக்குச் சென்னை ஐ.ஐ.டி.யில் ரஞ்சித்துக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அங்கே படிப்பது அவருக்கு அவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை. ரஞ்சித்துக்குப் படிப்பு எப்போதுமே பிரச்சினையில்லை.
ஆனால், ஆங்கிலவழித் தொடர்பு பிரச்சினையாக இருந்தது. ஒரு கட்டத்தில் ஆய்வுப் படிப்பிலிருந்து விலகிவிடவும் தீர்மானித்துள்ளார். அவருடைய ஆய்வு வழிகாட்டி சுபாஷிடம் அதை தெரிவித்தபோது, அந்த முடிவை அவர் எதிர்த்துள்ளார். ரஞ்சித்துக்கு நம்பிக்கையளித்துள்ளார். அதனால் முயன்று படித்து, ரஞ்சித் முனைவர் ஆனார். ஜெர்மனி, ஜப்பான் பல்கலைக்கழங்களில் தன் ஆய்வுக்கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளார். இரு மாதங்களுக்கு முன்புதான் பெங்களூரு கிறிஸ்ட் பல்கலைக்கழகத்தில் துணைப் பேராசிரியராக வேலைக்குச் சேர்ந்தார் ரஞ்சித்.
கனவு காணுங்கள்
தன் முகநூல் பதிவு இவ்வளவு வைரல் ஆகும் எனத் தான் எதிர்பார்க்கவில்லை என ரஞ்சித் கூறியிருக்கிறார். “என் கஷ்டத்தைச் செல்வதல்ல என் நோக்கம். இதன் மூலம் சிலருக்காவது ஊக்கம் கிடைக்கும் என நம்பினேன். ஆனால், பலர் இதனால் ஊக்கம் பெற்றுள்ளனர். உண்மையில் அது பெருமகிழ்ச்சி அளிக்கிறது” என்கிறார் ரஞ்சித்.
கேரள நிதி அமைச்சர் தோமஸ் ஐஸக், ரஞ்சித்தின் பதிவைத் தன் முகநூல் பக்கத்தில் பகிர்ந்து, “தன் வாழ்க்கையைத் தலைகீழாக மாற்றிக்கொண்டுள்ளது மட்டுமல்லாமல், மற்றவர்களுக்கு நல்ல உதாரணமாகவும் இவர் ஆகியுள்ளார்” எனப் பாராட்டியுள்ளார். ‘ஒருவேளை தலைக்கு மேலே பெயர்ந்து விழக்கூடிய கூரை இருக்கலாம். சுற்றிலும் இடிந்து விழக்கூடிய சுவர்கள் இருக்கலாம். ஆனால், ஆகாயம் உயரத்துக்குக் கனவு காணுங்கள். ஒருநாள் நீங்களும் அந்தக் கனவுகளின் சிறகில் ஏறி வெற்றியை அடை முடியும்’ எனத் தன் முகநூல் குறிப்பில் ரஞ்சித் கூறியுள்ளார். இது வெற்றிக்குப் போராடும் இளைஞர்கள் மனத்தில் அவசியம் இருத்த வேண்டிய படிப்பினை.
‘ஒருவேளை தலைக்கு மேலே பெயர்ந்து விழக்கூடிய கூரை இருக்கலாம். சுற்றிலும் இடிந்து விழக்கூடிய சுவர்கள் இருக்கலாம். ஆனால், ஆகாயம் உயரத்துக்குக் கனவு காணுங்கள். ஒருநாள் நீங்களும் அந்தக் கனவுகளின் சிறகில் ஏறி வெற்றியை அடை முடியும்’ எனத் தன் முகநூல் குறிப்பில் ரஞ்சித் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT