Published : 15 Dec 2020 09:27 AM
Last Updated : 15 Dec 2020 09:27 AM
தொகுப்பு: மிது
டிச. 2: இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் 12 ஆயிரம் ரன்களை மிக விரைவாக (251 போட்டிகளில்) எட்டி சச்சின் டெண்டுல்கரின் முந்தைய சாதனையை முறியடித்தார்.
டிச. 3: கடந்த 30 ஆண்டுகளில் முதன்முறையாக இந்தியாவிடமிருந்து சீனா அரிசியை இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளது. உலகில் அதிக அரிசி ஏற்றுமதி செய்யும் நாடு இந்தியா; அரிசியை அதிகம் இறக்குமதி செய்யும் நாடு சீனா.
டிச. 3: ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்ட இறைச்சியை விற்பனைக்கு அனுமதிக்கும் முதல் நாடு என்ற பெருமையை சிங்கப்பூர் பெற்றது. கோழிகளைக் கொல்லாமல் விலங்கு செல்களிலிருந்து இந்த இறைச்சி உருவாக்கப்பட்டுள்ளது.
டிச. 4: உத்தராகாண்ட் மாநிலம் கலாதுங்கி - நைனிடால் நெடுஞ்சாலையின் குறுக்கே முதன்முறையாக சுற்றுச்சூழலுக்கு இணக்கமான பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பாலமானது மூங்கில், புல், கயிறு போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது.
டிச. 4: சாதி அடிப்படையில் பெயர்களைக் கொண்ட அனைத்துக் குடியிருப்புகளையும் மறு பெயரிடக் கோரும் திட்டத்துக்கு மகாராஷ்டிர அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதன்படி சாதி பெயரில் உள்ள தெருக்களின் பெயர் மாற்றப்படும்.
டிச. 4: சென்னை உயர் நீதிமன்றத்தில் முதன்முறையாக கணவன் - மனைவியான முரளிசங்கர், தமிழ்ச்செல்வி ஆகியோர் நீதிபதிகளாகப் பொறுப்பேற்றனர். இதற்கு முன்பு பஞ்சாப்-ஹரியானா உயர் நீதிமன்ற நீதிபதிகளாக கணவன் மனைவியான விவேக் பூரி-அர்ச்சனா பூரி ஆகியோர் பொறுப்பேற்றுள்ளனர்.
டிச. 5: நாள்தோறும் 156 சாலை விபத்துகளுடன் தேசியத் தரவரிசையில் தமிழகம் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது. தேசியக் குற்ற ஆவணக் காப்பக தரவுகளிலிருந்து இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.
டிச. 10: புதிய நாடாளுமன்றக் கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் 900 முதல் 1,200 எம்.பி.க்கள் வரை உட்காரலாம். இந்தத் திட்டத்தின் மதிப்பு ரூ.971 கோடி. 75-வது சுதந்திர தினம் கொண்டாடுவதற்குள் கட்டி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT