Published : 08 Sep 2020 09:33 AM
Last Updated : 08 Sep 2020 09:33 AM
ஆக. 30: சர்வதேச சதுரங்கக் கூட்டமைப்பின் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு இந்தியா முதன்முறையாக முன்னேறியது. இறுதிப் போட்டியில் இந்தியாவும் ரஷ்யாவும் மோதின. ஆனால், இந்திய வீரர்களுக்கு இணைய இணைப்பு சரியாகக் கிடைக்காததால் போட்டியில் முழுமையாகப் பங்கேற்க முடியாமல் போனது. இதனால், இந்தியா - ரஷ்யா என இரு அணிகளும் கூட்டாக வென்றதாக அறிவிக்கப்பட்டது.
ஆக. 30: கர்நாடக மாநிலம் பெங்களூவில் நெலமங்கலாவிலிருந்து சோலாப்பூர் அருகேயுள்ள பலே என்ற ஊர்வரை தென்மேற்கு ரயில்வே சார்பில் ரோ-ரோ சேவை தொடங்கப்பட்டது. இந்திய ரயில்வேயில் தனியாரால் நிர்வகிக்கப்படும் ரோ-ரோ ரயில் சேவை இது மட்டுமே. ரோ-ரோ சேவை என்பது திறந்த ரயில் பெட்டிகளில் மற்ற வாகனங்களை எடுத்து செல்வது.
ஆக. 31: இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி (84) காலமானார். மூளை அறுவை சிகிச்சைக்காக டெல்லி ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அவருக்குக் கரோனா இருப்பது உறுதியானது. இரு வாரங்களாக கோமாவில் இருந்த பிரணாப், சிகிச்சை பலனின்றி காலமானார். நாட்டின் 13-வது குடியரசுத் தலைவராக 2012-17 வரை இருந்தவர். அதற்கு முன்பு நிதி, வெளியுறவு, பாதுகாப்பு ஆகிய துறைகளில் மத்திய அமைச்சராகப் பணியாற்றியவர். கடந்த ஆண்டு பாரத் ரத்னா விருது பெற்றிருந்தார்.
செப். 1: தமிழகத்தில் கரோனா வைரஸால் முடக்கப்பட்டிருந்த பேருந்து சேவை 5 மாதங்களுக்கு (161 நாட்கள்) பிறகு மீண்டும் செயல்படத் தொடங்கியது. இதேபோல் கோயில்கள், வணிக வளாகங்களும் திறக்கப்பட்டன. ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் கடைபிடிக்கப்பட்ட முழு ஊரடங்கும் ரத்துசெய்யப்பட்டது.
செப். 2: முதுநிலை மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவ மாணவர்களுக்கு மாநில அரசுகள் சிறப்பு இடஒதுக்கீடு வழங்கலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இடஒதுக்கீடு தரும் விவகாரத்தில் இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு அதிகாரம் இல்லை என்றும் மாநிலங்களே சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
செப். 3: மேற்கு வங்கத்தின் துர்காபூரில் உலகின் மிகப் பெரிய சூரிய ஒளி மரத்தை சி.எஸ்.ஐ.ஆர்.-சி.எம்.இ.ஆர்.ஐ. இணைந்து உருவாக்கியுள்ளன. மத்திய அறிவியல் - தொழில்நுட்பத் துறையின்கீழ் இந்த சூரிய ஒளி மரம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மரம் ஓராண்டில் 10 முதல் 12 டன்வரை கார்பன் உமிழ்வைக் குறைக்கும் திறன் கொண்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment