Published : 26 May 2020 07:53 AM
Last Updated : 26 May 2020 07:53 AM
தொகுப்பு: கனி
பத்தாம் வகுப்புத் தேர்வு தள்ளிவைப்பு
மே.19: ஜூன் 1 முதல் ஜூன் 12 வரை நடைபெறுவதாக இருந்த பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் ஜூன் 15 முதல் ஜூன் 25 வரை நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 9.5 லட்சம் மாணவர்கள் இந்த ஆண்டு பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வை எழுதவிருக்கின்றனர். பதினொன்றாம் வகுப்புத் தேர்வு ஜூன் 16 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் இயங்கும் கேம்பிரிட்ஜ்
மே.20: பிரிட்டனின் புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் அடுத்த கல்வியாண்டு (ஜூன் 2021 வரை) முழுவதும் ஆன்லைனில் மட்டுமே விரிவுரைகள் நடைபெறும் என்று அறிவித்துள்ளது. கோவிட்-19 நோய்த்தொற்றின் காரணமாக மார்ச் மாதம் பிரிட்டனில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. வரும் செப்டம்பர் மாதம் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் புதிய கல்வியாண்டுக்கான வகுப்புகள் தொடங்குகின்றன.
பருவநிலை மாநாடு தள்ளிவைப்பு
மே.21: ஐ.நா.வின் 26-ம் பருவநிலை மாநாடு (COP26) பிரிட்டனின் கிளாஸ்கோவில் 2020, நவம்பரில் நடைபெறவிருந்தது. கோவிட்-19 நோய்த்தொற்றின் காரணமாக இந்த மாநாட்டைத் தள்ளிவைப்பதாக பிரிட்டன் கடந்த மாதம் அறிவித்தது. தற்போது, இந்த மாநாடு 2021-ம் ஆண்டு இறுதியில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உம்பன் புயல்: 86 பேர் பலி
மே.21: உம்பன் புயலால் மேற்கு வங்கத்தில் 86 பேர் பலியாகியுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. உம்பன் புயலால் மேற்கு வங்கம் மட்டுமல்லாமல் ஒடிஷாவும் பாதிக்கப்பட்டுள்ளது. இடைக்கால நிவாரணமாக மேற்கு வங்கத்துக்கு ரூ.1,000 கோடி, ஒடிஷாவுக்கு ரூ.500 கோடி நிதி வழங்குவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
6,61,000 பேர் இடம்பெயர்வு
மே.22: கோவிட்-19 நோய்த்தொற்றின் காரணமாக ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் மார்ச் 23 அன்று உலகளாவிய போர்நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தார். போர் பதற்றச் சூழல் நிலவும் 19 நாடுகளைச் சேர்ந்த 6,61,000 பேர் இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் வீடுகளை இழந்து இடம்பெயர்ந்திருப்பதாக நார்வே அகதிகள் குழு (NRC) அறிக்கையில் தெரிவித்துள்ளது.
55 லட்சம் பேர் பாதிப்பு
மே.25: உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 55,02,512 ஆக உயர்ந்திருக்கிறது. 3,46,761 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். 23,02,447 பேர் நோயிலிருந்து மீண்டிருக்கிறார்கள். இந்தியாவில் கரோனாவால் 1,38, 845 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 4021 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். 57,720 பேர் நோயிலிருந்து மீண்டிருக்கிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT