Published : 07 Apr 2020 08:39 AM
Last Updated : 07 Apr 2020 08:39 AM
தொகுப்பு: கனி
மார்ச் 27: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால், தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டுள்ள போரிஸ் ஜான்சன், வீட்டிலிருந்தே பணிகளை மேற்கொள்ளத் திட்டமிட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார். பிரதமர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டதால், அவருடன் தொடர்பில் இருந்த பிரிட்டன் அமைச்சரவையைச் சேர்ந்த அனைவருக்கும் கரோனா தொற்றுப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒலிம்பிக்: புதிய தேதிகள்
மார்ச் 30: கரோனா நோய்த்தொற்று காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள், 2021 ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெறும் என்று சர்வதேச ஒலிம்பிக் குழுவும், ஜப்பானிய ஒலிம்பிக் ஒருங்கிணைப்பாளர்களும் இணைந்து அறிவித்துள்ளார்கள். 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தேர்வான தடகள வீரர்களின் தேர்ச்சி 2021 ஒலிம்பிக் போட்டிகளுக்குப் பொருந்தும் என்று சர்வதேச ஒலிம்பிக் குழு தெரிவித்துள்ளது.
நாசாவின் ‘சன்ரைஸ்’ திட்டம்
மார்ச் 30: சூரிய ஒளியலை அளவீட்டு விண் பரிசோதனைத் (Sun Radio Interferometer Space Experiment - SUNRISE) திட்டத்தை நாசா அறிவித்துள்ளது. சூரியத் துகள் ராட்சத புயல்களை சூரியன் எப்படி உருவாக்குகிறது என்பதை ஆய்வுசெய்வதற்காக இந்தத் திட்டத்தை நாசா அறிவித்துள்ளது.
உலகின் மோசமான நெருக்கடி
மார்ச் 31: ‘கோவிட்19’ நோய்த்தொற்று, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, உலக மக்கள் எதிர்கொண்டுள்ள மோசமான நெருக்கடி என்று ஐ.நா. தலைவர் அந்தோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார். கரோனா வைரஸ் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு உலக நாடுகள் இன்னும் வலிமையான, மேம்படுத்தப்பட்ட வழிமுறைகளைக் கையாள வேண்டும் என்று அவர் கோரிக்கைவிடுத்துள்ளார்.
சுகாதார நெருக்கடியாக மட்டும் அணுகாமல், அரசியல் வேறுபாடுகளை மறந்து மனித நெருக்கடியாகப் புரிந்துகொண்டு உலக நாடுகள் கரோனாவை எதிர்த்துப் போராட வேண்டுமென்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஜி20 நிதி அமைச்சர்கள் மாநாடு
மார்ச் 31: சவூதி அரேபியா தலைமை வகித்த ‘ஜி20’ உலக நிதி அமைச்சர்களின் மெய்நிகர் (Virtual) மாநாடு நடைபெற்றது. இந்தியா சார்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டார். கரோனா காரணமாக முதன்முறையாக மெய்நிகர் வடிவில் நடைபெற்ற இந்த மாநாட்டில், ஜி20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் தொடர்ந்து உரையாடுவதென முடிவெடுக்கப்பட்டுள்ளது. ‘கோவிட்-19’ காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பின்னடைவுகளை எதிர்கொள்வதற்கான ‘ஜி20 செயல் திட்ட’த்தை உருவாக்கும் பணியை நிதி அமைச்சர்கள் தொடங்கியுள்ளார்கள்.
1.1 கோடிப் பேர் ஏழைகளாவார்கள்
மார்ச் 31: ‘கோவிட்-19’ பரவல் காரணமாக கிழக்காசிய-பசிபிக் பகுதிகளில், 1.1 கோடி பேர் ஏழைகளாவார்கள் என்று உலக வங்கி அறிவித்துள்ளது. இந்தக் கரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகில் 12,74,265 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 69,471 பேர் உயிரிழந்துள்ளர். நோய்த்தொற்றிலிருந்து 2,64,834 பேர் மீண்டுள்ளனர். கிழக்காசிய-பசிபிக் பகுதிகளில் வளர்ச்சி 2.1 சதவீதமாகக் குறையும் என்றும் உலக வங்கி கணித்துள்ளது. சுகாதாரத் துறையில் அதிக முதலீடுகளைச் செய்வதற்கு உலக வங்கி பரிந்துரைத்துள்ளது.
விம்பிள்டன் போட்டி ரத்து
ஏப்.1: லண்டனில் ஜூன் 29 முதல் ஜூலை 12 வரை நடைபெற இருந்த விம்பிள்டன் போட்டி கரோனா தொற்றுப் பரவல் காரணமாக ரத்துசெய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1877 முதல் ஆண்டுதோறும் நடைபெற்றுவரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இப்போதுதான் ரத்து செய்யப்படுகின்றன. அடுத்து, 2021 ஜூன் 28 முதல் ஜூலை 11 வரை இந்தப் போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT