Published : 18 Feb 2020 11:14 AM
Last Updated : 18 Feb 2020 11:14 AM
தொகுப்பு: கனி
பிப். 11: டெல்லியில் 70 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில், 62 இடங்களில் வெற்றிபெற்று ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்தது. பா.ஜ.க. 8 இடங்களில் வெற்றிபெற்றது. காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியிலும் வெற்றிபெறவில்லை. ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் தொடர்ந்து மூன்றாம் முறையாக டெல்லி முதல்வராகப் (பிப். 16 அன்று) பதவியேற்றுள்ளார்.
குற்றப்பின்னணியை வெளியிடுங்கள்
பிப். 13: அரசியலில் குற்றப் பின்னணி கொண்டவர்களின் பங்களிப்பு இருக்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் மீது குற்ற வழக்குகள் ஏதாவது நிலுவையில் இருந்தால், அவற்றைப் பற்றிய தகவல்களைத் தங்கள் அதிகாரபூர்வ இணையதளத்தில் கட்சிகள் வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதிய நிதிச் செயலர்
பிப்.13: தேபாஷிஷ் பண்டா, புதிய நிதிச் செயலாளராக மத்திய நியமனக் குழுவால் நியமிக்கப்பட்டுள்ளார். நிதிச் செயலராக இருந்த ராஜிவ் குமார் ஓய்வுபெறுவதால் புதிய செயலராக தேபாஷிஷ் பண்டா நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரிட்டனின் புதிய நிதியமைச்சர்
பிப்.13: பிரிட்டனின் புதிய நிதி அமைச்சராக ரிஷி சுனக் பெயரை அறிவித்துள்ளார் அந்நாட்டுப் பிரதமர் போரிஸ் ஜான்சன். சஜித் ஜாவித் ராஜினாமா செய்ததால், புதிய நிதியமைச்சராக ரிஷி சுனக் நியமிக்கப் பட்டுள்ளார். இவர் இன்ஃபோசிஸ் இணை நிறுவனர்களில் ஒருவரான நாராயண மூர்த்தியின் மருமகன்.
போர்ச்சுகல் அதிபர் வருகை
பிப்.14: போர்ச்சுகல் அதிபர் மார்செலோ ரெபலோ டிசோசா அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு மூன்று நாட்கள் வருகைதந்தார். இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைப்பின் பேரில் இந்தியாவுக்கு வருகை தந்திருக்கும் அவர், பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறார்.
தமிழக பட்ஜெட் தாக்கல்
பிப். 14: தமிழ்நாடு அரசின் 2020-21 நிதியாண்டுக்கான மாநில பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தாக்கல்செய்தார். அவர் தாக்கல் செய்திருக்கும் பத்தாம் பட்ஜெட் இது. 2018-19 நிதியாண்டில், 8.17 சதவீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி, 2019-20-ல், 7.27 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில், பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ. 34,181 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
தகுதிநீக்க வழக்கு முடிவு
பிப்.14: ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் 2017-ல் தமிழக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசுக்கு எதிராக வாக்களித்ததால், அவர்களைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென்று திமுக உச்ச நீதிமன்றத்தை அணுகியிருந்தது. தகுதிநீக்கம் தொடர்பான இந்த வழக்கில், அவைத்தலைவர் தனபால் முடிவெடுக்கலாம் என்று தெரிவித்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கை முடித்துவைத்தது.
திட்டமிடப்பட்டிருக்கும் செயற்கைக்கோள்கள்
பிப். 15: 2019-20-ம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில், பூமியைக் கண்காணிக்கும் 10 செயற்கைக் கோள்களை 2020-21-ம் ஆண்டில் விண்ணில் செலுத்தவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் முதல் செயற்கைக்கோளாக ‘ஜிசாட்-1’ இடம் பெற்றுள்ளது.
18 தகவல் தொடர்ப்பு செயற்கைக் கோள்கள், 19 தேசிய பூமி கண்காணிக்கும் செயற்கைக்கோள்கள், 8 கடல் கண்காணிக்கும் செயற்கைக் கோள்கள் தற்போது சேவையில் இருப்பதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment