Published : 10 Dec 2019 11:38 AM
Last Updated : 10 Dec 2019 11:38 AM

மனசு போல வாழ்க்கை 25: மாறுமா நம் மனம்?

டாக்டர். ஆர். கார்த்திகேயன்

மனத்தின் செயல்பாடுகளைக் கவனிப்பதும் தியானம்தான். மனத்தைச் சற்றுத் தள்ளியிருந்து பார்க்கத் தொடங்கினால் தெளிவு பிறக்கும். மனத்தைத் தள்ளியிருந்து பார்ப்பது எது என்ற கேள்வி வரும். மனத்தை மீறிய சக்தி ஒன்று இருப்பது புலப்படும். மனம் விளையாடும் ஆட்டங்களைச் சற்று விருப்பு வெறுப்பு இல்லாமல் நோக்கும்போது மனத்தின் தீவிரத்தன்மை அற்றுப் போகும். மனத்தைத் தாண்டிய விசாரம் ஏற்படும். அது வாழ்க்கை பற்றிய பல கேள்விகளை உருவாக்கும். பல பதில் களைக் கொடுக்கும். நம் வாழ்வு பற்றிய ஒரு தத்துவப் பார்வையை அளிக்கும். இந்த உற்று நோக்குதலால் மனத்தின் எல்லா எண்ணங்களையும் செயல்களையும் எளிமையாக வகைப் படுத்த முடியும்.

ஒரு அந்நியனைப் பார்ப்பது போன்று நம்மை நாமே பார்க்க முடிவது ஒரு பெரிய சாதனை. பிறரைப் பார்த்துக் கேட்கும் கேள்விகளை நாமே நம்மைக் கேட்டுக்கொள்ள முடியும். சுய விமர்சனத்தை வலியில்லாமல் வைக்க முடியும். “எல்லோரையும் குறைகூறுவதே உன் வேலையாகத் தெரிகிறது. எந்த நல்ல விஷயமும் உன் கண்ணில் படுவதில்லை, ஏன்? எந்தச் சூழலிலும் ஒரு திருப்தி இல்லை. ஏதோ ஒரு வருத்தமும் குறையையும் மட்டுமே உணர்கிறாயே? என்னதான் வேண்டும் உனக்கு? எதைச் செய்தால் உனக்கு நிம்மதி?” என்று மனத்தோடு பேசலாம்.

மனத்தின் இரைச்சலை மவுனமாகக் கவனித்தால், அதன் வழிமுறைகள் புரியும். நம் கடந்த காலத்தை நோக்கினால் பலருக்கு வருத்தம், கோபம், இயலாமை, குற்ற உணர்வு எனப் பல விஷயங்கள் இருக்கலாம். எல்லாம் நம் மனத்தின் கடந்தகாலச் செயல்பாடுகள் என்று புரிந்துகொண்டால், அதை மாற்றி அமைக்க முடியும்.

செக்கு மாடுபோல் செய்ததையே திரும்பத் திரும்பச் செய்யும் குணம் கொண்டது மனது. அதனால்தான் தவறுகளில்கூடப் பழைய வற்றையே செய்யும். மனத்தின் செயல்பாடுகளைக் கண்டுகொள்ளுதல் மிக எளிது. இதனால்தான் முதுமையடைந்தாலும் ஒரே வகை தவறுகளைத்தான் திரும்பத் திரும்பச் செய்கிறோம்.

இருபது வயதில் கடன் தொல்லைகளால் அலைக்கழிக்கப்பட்டவர்கள், ஐம்பதிலும் பெரும்பாலும் வேறு கடன் பிரச்சினைகளில் மாட்டிக்கொண்டுள்ளதைப் பார்க்க முடிகிறது. பொய்யும் பித்தலாட்டமுமாக வாழும் ஏமாற்றுப் பேர்வழிகள் வீரியம் குறைந்தாலும், புதிய முறைகளில் ஏமாற்றும் காரியங்களைத்தான் செய்வார்கள். அம்மாவிடம் கோபித்துக்கொண்டு ஆண்டுக் கணக்கில் பேசாமல் இருந்த இளைஞன், முதுமையில் மகனிடம் கோபித்துக்கொண்டு பேசாமல் இருப்பான்.

வாழ்க்கை ஒரு ஸ்கிரிப்ட்

எப்படி ஒரு திரைப்படம் ஒரு வகை ஊகிப்புத்தன்மையுடன் செயல்படுகிறதோ, அப்படித்தான் நம் வாழ்க்கையும். திரைப்படங்களில் காமெடி, ஆக்ஷன், சென்டிமெண்ட், காதல் என்று பல வகைகள் உண்டு. அந்த வரையறைக்குள், அதற்கேற்பத்தான் கதை செல்லும்.

கூடுமானவரை ஓர் இயக்குநரின் படைப்பு ஒரே தன்மை கொண்டதாகத்தான் இருக்கும். எடுத்துக்காட்டுக்கு, கவுதம் மேனன் படம் என்றால் வாய்ஸ் ஓவரில் ஒரு காதல் கதை, பாலா படம் என்றால் விளிம்பு நிலை மனிதர்களின் ஓலம், ஹரி படம் என்றால் அசுர வேகத்தில் ஒரு ஆக்ஷன் படம், சுந்தர்.சி படம் என்றால் காமெடியும் கிளாமரும் கொடிகட்டிப் பறக்கும்.

இதுபோல் நம் வாழ்க்கையும்கூட ஊகிக்கக்கூடிய ஒரு ஸ்க்ரிப்ட்தான். அதன் பொது அம்சம் பிடிபட வேண்டும். குடும்பத்துக்குத் தன் முழு வாழ்க்கையையும் மிச்சம் வைக்காமல் தியாகம்செய்தல் ஒரு ஸ்க்ரிப்ட். ஒவ்வொரு காதலாகக் கலந்து, உடைந்து, மீண்டு பிறகு அடுத்த காதல் எனச் செல்லும் வாழ்க்கை எனும் ஒரு ஸ்க்ரிப்ட்.

கட்சி, பொதுப்பணி, போராட்டம், வெளி வாழ்க்கை என்று சொந்த வாழ்க்கை என்ற ஒன்றே இல்லாமல் ஒரு ஸ்கிரிப்ட். எந்தப் பொறுப்பும், வேலையும் இல்லாமல் பிறர் தயவில் வாழ்வது ஒரு ஸ்கிரிப்ட். ஒவ்வொருவர் வாழ்க்கையும் பல கலவைகள் கலந்த கதை என்றாலும், சில பொது அம்சங்கள் இருக்கும். அவை என்ன என்று பாருங்கள். அவற்றைக் கண்டுபிடிக்க மனத்தைக் கவனித்தல் அவசியம்.

முடிவுகளின் கூட்டுத் தொகுப்பு நம் வாழ்க்கை என்பது நம் மனம் கடந்த காலத்தில் எடுத்த முடிவுகளின் கூட்டுத்தொகுப்பே. பல விஷயங்கள் நமக்கு நேர்ந்திருந்தாலும், ஒவ்வொரு கட்டத்திலும் நம் மனம் எடுக்கும் முடிவுதான் முக்கியத் திருப்பம் தருகிறது. “அர்த்த ஜாமத்தில நெருக்கடின்னு பணம் வேணும்னு கேட்டு வந்த மச்சானுக்கு வட்டிக்குப் பணம் வாங்கிக் கொடுத்தேன்.

இன்னைக்கு வரைக்கும் வரலை. கொடுத்தத கேக்க போய் சண்டையில பேச்சுவார்த்தைதான் நின்னுச்சு. எல்லா இடத்திலயும் கடைசியில கெட்ட பேருதான் மிச்சம்” என்று கதை சொல்லும் மனத்தை உற்றுநோக்குங்கள். “இல்லை என்று சொல்லத் தைரியம் இல்லாம கொடுத்தியா அல்லது உதவ வேணும்னு கொடுத்தியா?” என்று ஒரு கேள்வி கேளுங்கள். “இரண்டும்தான்” என்று சொல்லி மெல்ல உண்மையைச் சொல்லும் மனம். “எப்படி வச்சிகிட்டே இல்லைன்னு சொல்ல முடியும்? ரொம்ப நெருங்கிய உறவாச்சே”.

“சரி, அப்ப நெருங்கின உறவுகளில்தான் அதிக சிரமங்களா?”. இப்போது எல்லா நெருங்கிய உறவுகளிலும் பட்ட வலிகளை நினைத்துப் பட்டியல் போடும். சுயபச்சாதாபமும், எதிராளி மீது கொள்ளும் கோபத்துக்கு ஆதாரம் உள்ளதைப் பேசும் தைரியமும் நேர்மையும் இல்லாததுதான் பிரச்சினை என்று புலப்படும். இப்படி ஒரு விசாரணை நடத்துவது நல்லது.

மனம் தன் நாடகத்தன்மையைக் கண்டுகொள்ளும். அடுத்த முறை அதே சூழலில் பழைய பாணியில் இல்லாமல் புதிதாகச் செய்வது குறித்து யோசிக்க முயலும். நம் கர்ம வினைகளைக் களைவது என்பது கண்ணுக்குத் தெரியாத கடவுளின் வேலை அல்ல. அது நம் முயற்சிகளில் உள்ளது. மனத்தை மாற்ற மனத்தைக் கவனியுங்கள். மனம் மாறும். வாழ்க்கையும் மாறும்.

கட்டுரையாளர் தொடர்புக்கு:
gemba.karthikeyan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x