Published : 19 Nov 2019 11:47 AM
Last Updated : 19 Nov 2019 11:47 AM
நாடு விடுதலை அடைந்து 72 ஆண்டுகள் நிறைவடைந்த பிறகும் இந்தியாவில் சாதிரீதியாகவும் மதரீதியாகவும் பாலினரீதியாகவும் ஒடுக்கப்படுபவர்களின் துன்பங்கள் தீர்ந்தபாடில்லை. இருந்தாலும் இந்தக் காலக்கட்டத்தில் ஒடுக்கப்பட்ட சமூகப் பிரிவினருக்கு கல்வி, வேலைவாய்ப்பு, கண்ணியமான வாழ்க்கை ஆகியவற்றை உறுதிப்படுத்தும் சட்டங்களும் திட்டங்களும் நிறைவேறியிருக்கின்றன.
இவற்றுக்கு முக்கியக் காரணம் 1950-ல் இந்தியா குடியரசானபோது ஏற்றுக் கொள்ளப்பட்ட அரசியல் சாசனம். சட்டமேதை பி.ஆர்.அம்பேத்கர் தலைமையிலான குழுவால் வடிவமைக்கப்பட்ட அரசியல் சாசனம் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய விழுமியங்களை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது. அனைத்து இந்தியர்களுக்கும் இவற்றை கிடைக்கச் செய்வதே, அதன் அடிப்படை இலக்காக இருந்தது.
அரசியல் சாசனத்தின் இந்த இலக்கு நிறைவேற கடந்த 70 ஆண்டுகளில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் நமது ஆட்சியாளர்களுக்கு எவ்வளவு பங்கிருக்கிறதோ, அதே அளவு பங்கு அரசு அதிகாரிகளுக்கும் உண்டு.
அப்படிப்பட்ட அரசு அதிகாரிகளில் ஒருவர் பி.எஸ்.கிருஷ்ணன். 2019 நவம்பர் 10 அன்று காலமான அவர் பழங்குடியினர், பட்டியல் சாதியினர், பிற்படுத்தப்பட்டோர், பெண்கள், மதச் சிறுபான்மையினர் ஆகியோருக்கு மறுக்கப்பட்ட உரிமைகளைப் பெற்றுத் தருவதற்காகவே தீவிரமாக உழைத்தவர். அரசியல் சாசனத்தை மக்கள் நலப் பார்வையில் அணுகியவர். மக்களை நோக்கி அரசை அழைத்துச் சென்றவர். இந்த அணுகுமுறையின் மூலம் பல உரிமைகளையும் நன்மைகளையும் பெற்றுத் தந்தார்.
உறுதியான சாதி எதிர்ப்பு
1932-ல் கேரளத்தின் திருவனந்தபுரத்தில் பிறந்தவரான கிருஷ்ணன் அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நிலவிய முற்போக்குச் சிந்தனைகளால் ஈர்க்கப் பட்டார். சாதியமைப்பு மீதான அம்பேத்கரின் கடுமையான விமர்சனங்கள் கிருஷ்ணனின் தந்தை வழியாக அவரை வந்தடைந்தன. கார்ல் மார்க்ஸ், காந்தி, அய்யன்காளி, நாராயணகுரு ஆகியோரின் சிந்தனைகளும் அவருடைய சமூகநீதிப் பார்வைக்கு வலுசேர்த்தன. இறக்கும்வரை தான் பிறந்த சாதியை யாரிடமும் எந்தத் தருணத்திலும் தெரிவிக்காமல் இருந்தார். சாதியைக் கடப்பதில் அவர் காட்டிய மனஉறுதிக்கு ஓர் எடுத்துக்காட்டு இது.
1956-ல் ஐ.ஏ.எஸ். அதிகாரியான கிருஷ்ணன், முதலில் ஆந்திரப் பிரதேச அரசில் மாவட்ட ஆட்சியர் உட்பட பல்வேறு பதவிகளையும், பிறகு மத்திய அரசில் பல முக்கியப் பதவிகளையும் வகித்துள்ளார். சமூகநீதியை உறுதிசெய்யும் பல சட்டங்கள். சட்டத் திருத்தங்கள், திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றக் காரணமாக இருந்தார். பட்டியல் சாதியினருக்கான சிறப்புக்கூறுத் திட்டம், பட்டியல் சாதியினர் - பழங்குடியினருக்கான சிறப்புக்கூறுத் திட்டம், மண்டல் கமிஷன் பரிந்துரையை வி.பி. சிங் அரசை ஏற்கச்செய்து பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை அறிவிக்கச் செய்தது, மனிதக் கழிவகற்றுவோருக்கான தடுப்புச் சட்டம் இயற்றியது உள்பட மத்திய அரசில் நடைபெற்ற சமூகநீதி தொடர்பான பல செயல்பாடுகளில் முக்கியப் பங்காற்றினார்.
முன்னுதாரணப் போராளி
1990-ல் பணி ஓய்வு பெற்றுவிட்டாலும் பல அரசு, அரசுசாரா அமைப்புகளுடன் இணைந்து சமூக சமத்துவத்துக்காகவும் சமூக நீதியை நிலைநாட்டவும் அயராது உழைத்துக்கொண்டிருந்தார். தேசியப் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் உறுப்பினர்-செயலர், தேசிய பட்டியல் சாதியினர் -பழங்குடியினர் ஆணைய உறுப்பினர், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கெளரவ ஆலோசகராக இருந்துள்ளார்.
இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து வரும்போதெல்லாம், அதற்கெதிரான சட்டப் போராட்டங்களில் இட ஒதுக்கீட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் ஆதாரபூர்வமான ஆவணங்களை உருவாக்குவதில் ஓர் இளைஞருக்கான வேகத்துடனும் தீவிரத்துடனும் பணியாற்றினார். பல அரசு, அரசுசாரா அமைப்புகளுடன் இணைந்து சமூகநீதி சார்ந்த பணிகளை தன்னார்வத்துடன் மேற்கொண்டார். ‘தலித் அறிக்கை’, ‘இந்தியாவை ஆற்றல்படுத்துவதற்காக தலித்துகளை ஆற்றல்படுத்துதல்’, ‘சமூக நீதிக்கான அறப்போர்’ உள்ளிட்ட பல நூல்களை எழுதியிருக்கிறார். நீதிபதி கிருஷ்ணய்யர் விருது, அம்பேத்கர் சுடர் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.
அரசு இயந்திரத்துக்குள்ளும் வெளியேயும் மக்கள் நலன் சார்ந்து இயங்குபவர்களும் சமூக சமத்துவத்துக்காகப் போராடுபவர்களும் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக வாழ்ந்து மறைந்தவர் பி.எஸ்.கிருஷ்ணன்.
- கோபால்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT