Published : 12 Nov 2019 11:10 AM
Last Updated : 12 Nov 2019 11:10 AM
டாக்டர் ஆர். கார்த்திகேயன்
ஒவ்வொரு உறவும் ஒரு பொறுப்பு. அது சொந்தமோ நட்போ எதுவாக இருந்தாலும் சரி. அதற்கும் பராமரிப்புப் பணிகள் அவசியம். உறவின் அடிப்படையில் சில உரிமைகள், கடமைகள், எதிர்பார்ப்புகள் உள்ளன. அவை பரஸ்பரமானவை. உறவுகள் நீடிக்க அவற்றை பேணிக்காப்பது அத்தியாவசியம். எது எப்படி இருந்தாலும் சகித்துக்கொண்டு அன்பு செலுத்துவது பெற்றோர்களால் மட்டும்தான் சாத்தியம். மற்ற அனைத்து உறவுகளிலும் தொடர் உழைப்பு அதிமுக்கியம். இந்த அடிப்படை விதிகள் மறக்கப்படும்போது, விரிசல் தோன்றுவது இயற்கை.
உணர்வின் விசை
உலகம் முழுவதும் நம் வீட்டுக்குள் வராத காலத்தில், குடும்ப வாழ்க்கை அதிகம் சிக்கல்படவில்லை. `இதுதான் வாழ்க்கை’ என்று எதையும் ஏற்றுக்கொண்டு வாழும் பக்குவம் இயல்பாகவே வந்துவிடுகிறது. இன்று உலகில் உள்ள அனைத்தும் நம் கைக்குள் வர, ஒவ்வொருவரும் ஒரு தனி உலகமாக இயங்கத் தொடங்க, ஒவ்வொரு உறவும் பெரும் சுமையாக மாறிவருகிறது.
நம் உணர்வுகளின் விசை, இப்போது நம்மிடம் இல்லை. அது நொடிக்கு நூறு வகையாக மாறுவதற்கான அத்தனை தூண்டல்களும் இன்று நம் கைப்பேசிக்குள்ளேயே உண்டு. ஆனாலும் இவற்றைப் பற்றி சற்றும் யோசிக்காமல் எதிராளியை மட்டும் குற்றம் சொல்கிறோம். பையன் வீட்டில் பெண்ணைக் குற்றம் சொல்வதும், பெண் வீட்டில் பையனைக் குற்றம் சொல்வதுமாக இது முடிகிறது.
ஏமாற்றங்களைப் பழக்காத பெற்றோர்
எதிர்பார்ப்புகள் பொய்க்கும் சூழல்களை இன்றைய பெற்றோர் குழந்தைகளுக்குத் தருவதே இல்லை. பிள்ளைகள் ஏமாற்றம் அடையவே கூடாது என்று பார்த்துப் பார்த்து வளர்ப்பதுதான் சிறந்தது என்று தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. `இல்லை’ என்று சொல்லாமல் குழந்தைகளை வளர்ப்பதே குறிக்கோளாகக் கொண்டிருக்கிறார்கள். இதனால் குழந்தைகள் மன அளவில் கடுமையாக பலவீனப்படுகிறார்கள் என்பதைப் பெற்றோர் உணர்வதேயில்லை.
நிராகரிப்பும், பற்றாக்குறையும், நெருக்கடியும் மனத்தை எப்படி உறுதிப்படுத்துகின்றன என்பதை அறியவிடுவதே இல்லை. அதையும் தாண்டி வரும் துன்பத்தை பெற்றோர்களே ஓடிவந்து துடைத்துவிடுகிறார்கள். பிரச்சினைகளை எதிர்கொள்ளும்போது ஏற்படும் உணர்வு மாற்றங்கள் மனத்தை எப்படிப் பக்குவப்படுத்தும் என்பது தெரியாமல், ஒரு சந்ததி வளர்ந்துவருகிறது. இந்த இளம் சந்ததி சந்திக்கும் முதல் அமிலச் சோதனை திருமண உறவுதான்.
எதிர்பார்ப்புகளின் நிறங்கள் மாறியிருக்கலாம். அது வளர்ந்த சூழலுக்கு ஏற்ப வேறுபடலாம். ஆனால், அதன் செயல்பாடுகள் ஒன்றே. பொய்க்கும் எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்தைத் தரும். ஏமாற்றம் கோபத்தை கொடுக்கும். கோபம் எதிராளியைக் காயப்படுத்தும். காயப்பட்ட எதிராளி காயப்படுத்துவார். இப்போது எதிர்பார்ப்புகள் பற்றி பேச்சு இருக்காது. எதிராளியின் மோசமான கோபமும் அது தந்த காயங்களுமே மனதில் நிற்கும். மிகுந்த அன்பும், புரிதலும், நிதானமும் இருந்தால் இந்த குறைகளும் சண்டைகளும் பின்னுக்குத் தள்ளப்பட்டு, அங்கு உறவு பாதுகாக்கப்படுகிறது. இல்லாவிட்டால், வீங்கிப் போன அகந்தை வேலையை காட்டத் தொடங்கிவிடும்.
எதிர்பார்ப்புகளைக் குறையுங்கள்
அப்போது `நான் யார் தெரியுமா?’ என அகந்தை வீரிட்டு எழும். `உன்னை என்ன செய்கிறேன் பார்! என எதிராளியை தாக்கிப் பார்க்கும். உறவுக்குள் வீர விளையாட்டுக்கள் ஆடும். எல்லா நல்ல உள்நோக்கங்களும் நற்செயல்களாக முடிவதில்லை.
இப்படிச் சொன்னால் இன்னமும் சரியாக இருக்கும். மோசமான முடிவுகள்கூட நல்ல நோக்கத்துடன் எடுக்கப்பட்டவையே. தற்காப்பு, தன்மானம் போன்றவை நல்ல நோக்கங்கள்தான். ஆனால் பயம் - கோபத்துடன் எடுக்கப்படும் முடிவுகள் பெரும்பாலும் தவறாகத்தான் இருக்கும். வாழ்வதும் பிரிவதும் அவரவர் உரிமை. இதில் சரி, தவறு என்று எதுவுமில்லை. ஆனால் தவறான மனநிலையில் எடுக்கப்படும் பல முடிவுகளுக்கு நாம் பிற்காலத்தில் வருத்தப்படுவோம்.
எல்லாமே எதிர்பார்ப்புகள் செய்யும் வேலை என்றால், அவற்றை தட்டித் தரம் பார்த்து அவ்வப்போது சரிசெய்வது முக்கியம்தானே? முக்கியமாக எதிர்பார்ப்புகளை குறைத்தல் மிகுந்த மனவலிமையைக் கொடுக்கும். அதனால் இந்த `அபர்மேஷன்’ நல்லது.
‘என் மனைவி மேல் உள்ள அனைத்து எதிர்பார்ப்புகளையும் நிபந்தனையின்றி விடுவிக்கிறேன்.’ ‘மனைவி’ என்ற இடத்தில் ‘கணவர்’, ‘அப்பா’, ‘அம்மா’ என்று யாரிடம் உறவுச்சிக்கல் இருக்கிறதோ, அவர் பெயரை இட்டுப் பயிற்சிசெய்யுங்கள். எந்த எதிர்பார்ப்புமே இல்லையென்றால் எப்படி சரியாகும் என்று கேட்கலாம். இதை சில நூறு முறை ஜபிப்பதால் நீங்கள் துறவியாகி விடப்போவதில்லை. ஆனால், சில அழுத்தமான எதிர்பார்ப்புகளை சற்று அசைத்துப் பார்க்கப் போகிறீர்கள். அது தரும் மாறுதல்கள் உங்களுக்கும் சம்பந்தப்பட்டவருக்கும் நிவாரணம் தரும்.
இதைச் செய்யும்போது இன்னொரு முக்கிய விஷயம் புலப்படும். நீங்கள் பிறரிடம் வைக்கும் எதிர்பார்ப்புகள் அனைத்தும் நீங்கள் உங்கள் மேல் கொண்டுள்ள எதிர்பார்ப்புகளின் பிம்பங்களே. அதனால் உங்களை நீங்கள் செழுமைப்படுத்த, இன்னொரு வாக்கியத்தையும் சேர்த்துக்கொள்ளலாம். `நான் என் மேலுள்ள அனைத்து எதிர்பார்ப்புகளையும் நிபந்தனையின்றி விடுவித்து விடுதலை பெறுகிறேன்’.
எதிர்பார்ப்பு எனும் இரைச்சல்
ஆட்டக்காரன் கூட்டத்தின் கூக்குரல்களையும் எதிர்பார்ப்புகளையும் நினைத்தால் இயல்பாக விளையாட முடியாது. கூட்டத்தின் எதிர்பார்ப்புகளை பூர்த்திசெய்ய வேண்டும் என்பதும் ஒரு சுய எதிர்பார்ப்புதான். அவர்கள் கூச்சலிடாமல் இருந்தால்தான் நன்றாக விளையாட முடியும் என்பதும் அவர்கள் மேல் உள்ள எதிர்பார்ப்பு. இவை அனைத்தையும் முழுமையாக வெளியேற்றி, வரும் பந்தில் மட்டும் மனத்தை வைத்தால்தான் சிக்ஸர் அடிக்க முடியும். உள்ளும் புறமும் உள்ள இரைச்சலை நீக்கிப் பந்தில் கவனம் வையுங்கள். உங்கள் உறவு விளையாட்டின் பந்து எது? அன்புதான்!
கட்டுரையாளர் தொடர்புக்கு:
gemba.karthikeyan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT