Published : 05 Nov 2019 11:44 AM
Last Updated : 05 Nov 2019 11:44 AM
டாக்டர் ஆர். கார்த்திகேயன்
என்றும் இல்லாத அளவுக்கு சிக்கலாகிவரும் ஓர் அமைப்பு நம் திருமண அமைப்பு. மண வாழ்க்கை மிகுந்த மன உளைச்சல் தரும் விஷயமாகி வருகிறது. ஐம்பதைக் கடந்தவர்கள் யாரிடம் பேசினாலும் நிச்சயம் அவர்கள் இந்த கருத்தைச் சொல்வார்கள். “முன்னெல்லாம் கல்யாணம் பண்ணி வெச்சா நம்ம வேலை முடிஞ்சிடும். இப்ப கல்யாணம் பண்ணி வெச்சாலும், எப்படிச் சேர்ந்து வாழ்வாங்களோங்கற பயம் இருந்துட்டே இருக்கு.”
மணமுறிவுகள் அதிகமாகி வருகின்றன. விவாகரத்து செய்யாவிட்டாலும் மோசமான திருமண வாழ்க்கை வாழ்பவர்கள் பலர். இன்னொரு புதிய போக்கு உருவாகி வருகிறது. “எனக்கு கல்யாணமே வேண்டாம். தனியாக வாழ்கிறேன்” என்று திருமணத்தையே நிராகரிக்கும் போக்கு. ஒரு தந்தை இன்னொரு பரிமாணத்துடன் வந்தார்.
“என் பொண்ணு அமெரிக்காவில இருக்கா. எம்.ஐ.டி.ல படிச்சவ. அதனால ஐ.வி. லீக் பிசினஸ் ஸ்கூல்ல படிச்ச இந்தியன்தான் வேணும்னா. இதில்லாம ஆறு கண்டிஷன் போட்டாள். ஒருத்தன்கூட கிடைக்கல. நாப்பது வயசானவுடன் இப்ப சொல்றா, யாராயிருந்தாலும் ஓகே. ஜாதகம் மட்டும் பாருங்கன்னு. இப்ப வர்ற ஆளெல்லாம் டைவர்சி அல்லது விடோயர்தான். கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணியிருந்தா நல்ல வரன் வந்தப்பவே முடிச்சிருக்கலாம்.”
விரியும் எல்லை
வேலைக்குப் போனவுடன் கல்யாணம் என்ற சமூக நியதி மெல்ல மெல்ல மாறி சொந்தமாக ஒரு வண்டி, அபார்ட்மெண்ட் என்று செட்டில் ஆனவுடன்தான் திருமணம் எனும் போதே வயது கூடிப்போகிறது. நிலைமை உயரஉயர எதிர்பார்ப்புகள் எகிற ஆரம்பிக்கின்றன. இதனால் திருமணங்கள் தடைபடுகின்றன அல்லது உடைகின்றன!
சொந்த விருப்பு வெறுப்புகள் தவறா என்ன? மாப்பிள்ளை முகத்தைக்கூடப் பார்க்காமல் கட்டிக்கொண்டு கஷ்டமோ நஷ்டமோ சேர்ந்து வாழ வேண்டும் என்ற நியதி இன்று இல்லை. பல வகையில் இது தனிமனித விடுதலையையும் மீட்சியையும் தந்திருந்தாலும், திருமணம் எனும் அமைப்பு மிகுந்த சிக்கலான விஷயமாக மாறி வருவது உண்மை.
இதற்கு முக்கியக் காரணம் திருமணம் என்பது இன்றைக்கு குடும்ப நிகழ்வாக இல்லாமல் தனிமனித ஏற்பாடாக மாறிவிட்டதுதான். “அவன் இஷ்டம். இதுக்கு மேல எதுவும் சொல்ல முடியாது” என்று பெற்றோர்கள் மெல்ல பின்வாங்குவது தெரிகிறது.
வாழ்க்கையில் மட்டுமல்ல; திருமணம் என்னும் ஒரு நிகழ்விலும் ஆயிரம் எதிர்பார்ப்புகள். சக்திக்கு மீறிய செலவு செய்து தம்பதி இசைந்து, மகிழ்ந்து வாழவில்லை என்றால், அவர்களுக்கும் சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்கும் எவ்வளவு வலி? எல்லா கொடுமைகளையும் அநீதிகளையும் சகித்துக்கொண்டு வாழ வேண்டாம். ஆனால் சின்ன உரசல்களைக்கூட சரி செய்துகொள்ளத் தெரியாமல் முறித்துக்கொண்டு போவது எத்தனை பெரிய அவலம்?
எதிர்பாப்புகள், ஏமாற்றங்கள்
திருமணம் என்றில்லை எல்லா உறவுகளிலும் ஏமாற்றம் வருவதற்குப் பெரும் காரணம் எதிர்பார்ப்புகள் பொய்த்துப் போவதுதான். தான் எதிர்பார்க்கும் அனைத்து எதிர்பார்ப்புகளுடனும் ஒரு மானிடப் பிறவி இந்த பூமியில் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிகக் குறைவு என்பது புரிய வேண்டும். சட்டை அல்லது ரவிக்கை தைப்பதுபோல் அளவு எடுத்து தைத்து கொடுக்கப்படும் பொருள் அல்ல திருமணம். எவ்வளவு தேர்வு செய்தாலும் 100% மேட்சிங் கிடைக்காது. அதேபோல்தான் உங்கள் வாழ்க்கைத் துணை எதிர்பார்க்கிற 100% மேட்சிங்கும் நீங்கள் இல்லை.
எல்லா காலத்திலும் நம் எதிர்பார்ப்புகளை நாம் நியாயப்படுத்துவோம். அவை மிகவும் அத்தியாவசியமானவை என்று சண்டையிடுவோம். பொருளாதார வளர்ச்சி, தொழில்நுட்பம், மின்னணு ஊடகங்கள் எல்லாம் வந்தபின், நம் எதிர்பார்ப்புகள் ஆயிரம் மடங்கு பெருகிவிட்டதை நாம் உணர்வதே இல்லை. அதேபோல எதிராளி கொள்ளும் எதிர்பார்ப்புகளால் நாம் எப்படி உருசிதைந்து போகிறோம் என்றும் உணர்வதே இல்லை. இதனால் திருமண நிகழ்வும் சரி, அமைப்பும் சரி பெரும் அலுப்பைத் தருகின்றன.
தயார்ப்படுத்துதல் என்பது என்ன?
திருமணத்துக்கு தயாராதல் என்பது வீட்டை சரிசெய்து ஷோ செய்வது அல்ல. வரப்போகும் பந்தத்துக்கு தன்னை தயார்செய்துகொள்வது. பல மேலை நாடுகளில் இதற்குக் கவுன்சலிங் போகிறார்கள். கையில் இருக்கும் ‘ஆப்’பை தட்டினால் அரை மணி நேரத்தில் எதுவும் வீடு தேடி வரும் என்ற மனப்பான்மை இன்றைய 20 வயசுக்காரர்களை பெரிதும் பலவீனப்படுத்தி விட்டது. தன் கணவனோ மனைவியோ தான் சொல்வதை அரை மணி நேரத்தில் செய்யப்போவதில்லை என்று அறியும் போதே, ஆட்டம் காண ஆரம்பிக்கிறது அந்த உறவு. “பிடிக்கலையாம். அதான் பிரிஞ்சிட்டாங்களாம்!” என்று சொல்வதற்கு மேல் இதில் இடமில்லாமல் போய்விட்டது.
பொறுமையாக இருந்தால் சரியாகும் என்ற பழைய அறிவுரை போதாது. அடிப்படை மாற்றம் நிகழ வேண்டிய இடம் திருமணம் பற்றிய எண்ணங்கள், எதிர்பார்ப்புகளில்தான். உங்கள் வாழ்க்கைத் துணை பற்றிய எல்லா எதிர்பார்ப்பையும் முழுமையாகப் பட்டியலிடுங்கள்.
அதேபோல் உங்கள் மேல் உங்கள் வாழ்க்கைத் துணை கொண்ட எதிர்பார்ப்புகள் என்னவாக இருக்கும் என யூகித்துப் பட்டியல் இடுங்கள். பட்டியலை பரிமாறிக்கொள்ளுங்கள். இது பிரச்சினையை தீர்க்காது. ஆனால், பிரச்சினை எங்கு என்று புரியத் தொடங்கும். எங்கு, எப்படி உறவை சரிசெய்வது என்பதை அடுத்த அத்தியாயத்தில் ஆழமாகப் பார்க்கலாம். மோசமான பையனோ அல்லது ஒரு மோசமான பெண்ணோ இருக்க வேண்டிய அவசியமில்லை - ஒரு மோசமான திருமணத்துக்கு!
கட்டுரையாளர் தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT