Published : 29 Oct 2019 01:21 PM
Last Updated : 29 Oct 2019 01:21 PM
கோபால்
ஆகஸ்ட் 15 இந்திய விடுதலை நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்திய ஒன்றியத்தின் மத்திய ஆட்சிப் பகுதியாக விளங்கும் புதுச்சேரி இந்தியாவின் ஓர் அங்கம் என்ற வகையில் ஆகஸ்ட் 15-ஐ சுதந்திர நாளாகக் கொண்டாடுகிறது. என்றாலும் இன்று புதுச்சேரி என்று அறியப்படும் பகுதியின் விடுதலை வரலாறு முற்றிலும் வேறானது. 18ஆம் நூற்றாண்டில் பாண்டிச்சேரி (புதுச்சேரியின் பழைய பெயர்), மாஹே, ஏனாம், காரைக்கால், சந்திர நாகூர் ஆகிய பகுதிகள் ஃபிரெஞ்சு அரசின் ஆளுகையின்கீழ் வந்தன.
1850-களில் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி முடிவுக்கு வந்து இந்தியாவில் பிரிட்டன் பேரரசின் ஆட்சி நிறுவப்பட்டபோது , ஃபிரெஞ்சு ஆளுகைக்கு உட்பட்டிருந்த பகுதிகள் அதன் வசமே நீடித்தன. 18-ம் நூற்றாண்டிலிருந்தே பாண்டிச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஃபிரெஞ்சு ஆட்சியிலிருந்து விடுதலை வேண்டிப் போராட்டங்கள் நடைபெற்றுவந்தன.
இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி அகன்ற பிறகு ஃபிரான்ஸ் ஆண்டு வந்த பகுதிகளும், இந்திய ஒன்றியத்துடன் இணைக்கப்படுவதற்கான போராட்டங்கள் தொடங்கின.
இது தொடர்பாக அங்கு பொதுவாக்கெடுப்பு நடத்த இந்திய, ஃபிரெஞ்சு அரசுகளுக்கு இடையே 1948-ல் ஒப்பந்தம் நிறைவேறியது. அதன்படி சந்திர நாகூர் பகுதியில் நடத்தப்பட்ட பொதுவாக்கெடுப்பில் 97% மக்கள் இந்தியாவுடன் இணைய விருப்பம் தெரிவித்தனர். தொடர்ச்சியாக 1954-ல் மேற்கு வங்கத்தின் ஒரு பகுதியாக அது இணைக்கப்பட்டது.
பாண்டிச்சேரியிலும் வாக்கெடுப்பு
1954 அக்டோபர் 18 அன்று கீழூர் என்ற கிராமத்தில் ஃபிரெஞ்சு அரசு வாக்கெடுப்பு நடத்தியது. அதில் பாண்டிச்சேரி, மாஹே, ஏனாம், காரைக்கால் ஆகிய பகுதிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் 178 பேர் வாக்களித்தனர். 170 பேர் இந்திய ஒன்றியத்துடன் இணைய வேண்டும் என்று தெரிவித்தனர். இதையடுத்து அக்டோபர் 21 அன்று இந்த நான்கு பகுதிகளின் முழு அதிகாரத்தை இந்திய அரசுக்கு மாற்றும் ஒப்பந்தத்தில் ஃபிரெஞ்சு அரசு கையெழுத்திட்டது.
நவம்பர் 1 அன்று இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது. ஆனால், இது நடந்து கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளுக்குப் பிறகுதான் இந்திய, ஃபிரெஞ்சு நாடாளுமன்றங்கள் இந்த ஒப்பந்தத்தை அங்கீகரித்தன. 1962 ஆகஸ்ட் 16 அன்று இந்த நான்கு பகுதிகளும் இந்தியாவுடன் அதிகாரபூர்வமாக இணைந்தன. 1963-ல் புதுச்சேரி இந்தியாவின் மத்திய ஆட்சிப் பகுதியானது. புதுச்சேரி (பாண்டிச்சேரி), மாஹே, ஏனாம், காரைக்கால் ஆகியவை அதன் மாவட்டங்கள் ஆகின. 2014 முதல் நவம்பர் 1ஐ புதுச்சேரி அரசு விடுதலை நாளாகக் (Liberation Day) கொண்டாடிவருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT