Published : 26 Mar 2025 06:14 AM
Last Updated : 26 Mar 2025 06:14 AM
மனநலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட ஒருவர் அல்லது அவரைப் பராமரிக்கும் குடும்பத் தினர், நண்பர்கள் ஆகியோருக்கு மனநலம் சார்ந்த சிகிச்சைக்கு மனநல மருத்துவரை அணுகுவதா அல்லது உளவியலாளரைச் சந்திப்பதா என்கிற குழப்பம் ஏற்படலாம்.
அறிவோம் தெளிவோம் மனநல மருத்துவர் (Psychiatrist) என்பவர் அடிப்படையில் மருத்து வத்தில் எம்பிபிஎஸ் பட்டம் பெற்று, மனநலத் துறையில் உயர்கல்வி பயின்று, முதுநிலைப் பட்டம் பெற்றவர்.
தமிழ்நாடு, இந்திய மருத்துவ கவுன்சில்களில் பதிவுசெய்திருப்பார். இவர் பாதிக்கப்பட்டவருக்கு ஆலோசனை வழங்குதல், ஆற்றுப்படுத்துதல் ஆகிய வற்றோடு உளவியல் சிகிச்சைகளையும், மனநல மருந்துகளையும் பரிந்துரைப்பார்.
உளவியலாளர் (Psychologist), மனநல ஆலோசகர் (Counsellor) ஆகியோர் உளவியல், மனநல சமூகப் பணியில் பயிற்சியும் பட்டமும் பெற்றவராக இருப்பர். இவர்கள் உளவியல் ஆலோசனைகளையும் (Therapy) பொதுவான மனநல அறிவுரைகளையும் மட்டும் வழங்கு வார்கள்; மருந்துகளைப் பரிந்துரைக்க மாட்டார்கள்.
உளவியலாளரும் மனநல ஆலோசகரும் அடிப் படையில் அறிவியலில் இளங் கலை அல்லது முதுகலைப் பட்டத்தையும், கூடுதலாக மனநலம் சார்ந்த கல்வியையும் பயிற்சியையும் பெற்றவராக இருப்பர். சிலர் முனைவர் பட்டம் பெற்றவர்களாக இருந்தாலும், அவர்கள் அடிப் படையில் மருத்துவர் அல்ல என்பதால் மனநல மருத்துவச் சிகிச்சையை வழங்க மாட்டார்கள்.
மனநலத் துறையில் பணியாற்று வதற்கெனத் தனியாகச் செவிலியர் இருப்பர் என்பது பலருக்கும் தெரியாத ஒரு விஷயம். மனநல செவிலியர் என்பவர் அடிப்படையில் செவிலியர் படிப்பில் பட்டம் பெற்று மனநல செவிலியர் சேவையில் கூடுதல் பயிற்சியும் பட்டமும் பெற்றவராக இருப்பர்.
மனநல மருத்துவ சேவை என்பது ஒரு குழு முயற்சியாகும். மனநல மருத்துவ சேவையில் மனநலம் பாதிக்கப்பட்டவர், அவரது குடும்பத்தினரின் பங்கும் மிக முக்கியம். மனநலப் பிரச்சினையால் மனவலியை அனுபவிப்பவரும் அவருடைய குடும்பத்தினரும் ‘அனுபவத்தின் அடிப்படையி லான நிபுணர்கள்' (Experts by Experience) என்கிற புரிதல் அவசியம்.
சேவைகள் யாவை? - அவசர சிகிச்சை வழங்கும் மருத்துவமனைகள், தீவிர சிகிச்சை வழங்கும் மையங்கள், புறநோயாளிகள் சேவை, உள் நோயாளிகள் சேவை, நீண்ட காலப் பராமரிப்பு சேவைகள், மறுவாழ்வு மையங்கள் என மனநல மருத்துவ சேவைகளை வழங்கும் இடங்களை வகைப்படுத்தலாம்.
இவை தவிர, போதை மீட்பு சிகிச்சை மையங்கள், ஆதரவற்றோருக்கான மனநல மையங் களும் இயங்குகின்றன. மனநலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட பெரும்பாலா னோருக்குப் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை வழங்குவதே போதுமானதாக இருக்கிறது. மனநலப் பிரச்சினையின் தன்மையைப் பொறுத்து சிலருக்கு உள்நோயாளியாகச் சிகிச்சையோ தீவிர சிகிச்சையோ தேவைப்படும்.
மனநல ஆற்றுப்படுத்துதல் (Counselling) என்பது தற்போது உள்ள பிரச்சினையைப் பாதிக்கப்பட்டவர் எப்படிப் புரிந்துகொண்டு கையாளலாம் என்பதற்கான அறிவியல் பூர்வமான ஒரு வழிகாட்டுதல் முறை. 'சைக்கோ தெரபி' (Psycho Therapy) முறையில் பாதிக்கப்பட்ட ஒருவரது தற்கால உளவியல் சிக்கலுக்குக் கடந்தகால வாழ்க்கையில் நடந்த பிரச்சினைகள் காரணமாக அமைந்திருக்கக்கூடும் என்பதன் அடிப்படையில் அதனை ஆய்வு செய்து சிகிச்சை வழங்கப்படும்.
அறிவுரை களோ, ‘இதைச் செய்யுங்கள், அதைச் செய்யுங்கள்' என்கிற வழிகாட்டுதல்களோ இதில் இடம்பெறாது. ‘காக்னிடிவ் பிஹேவியர் தெரபி’ (Cognitive Behaviour Therapy) முறையில் ஒருவரின் சிந்தனைத் திறனில் உள்ள சிக்கல்களைப் பற்றிய புரிதலை அவருக்கு ஏற்படுத்தி, அதைத் திருத்தி அமைக்க உதவுவதாகும்.
அனைத்து வகையான மனநலப் பிரச்சினைகளுக்கும் மனநல ‘கவுன்சிலிங்’ ஒன்றே தீர்வு என்று முன் தீர்மானித்துவிடக் கூடாது. ஒருவருக்கு மனதளவில் உளவியல் நெருக்கடி ஏற்படும்போது குடும்பத்தினர் அல்லது நண்பர்களோடு பகிர்ந்து, அவர்களின் உதவியோடு மனநல மருத்துவர் அல்லது உளவியலாளரைச் சந்திக்க வேண்டும்.
பிரச்சினையைப் பொறுத்து அவருக்கு வழி காட்டுதலும் சிகிச்சையும் வழங்கப்படும். ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்படும் மனக்கவலை, மனச்சிதைவு பிரச்சினைகளைத் தகுந்த சிகிச்சைகள் மூலம் குணப் படுத்த முடியும்.
(தொடர்ந்து பேசுவோம்)
- addlifetoyearz@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment