Published : 19 Mar 2025 06:06 AM
Last Updated : 19 Mar 2025 06:06 AM

வீட்டிலிருந்தபடியே சிகிச்சை நல்லதா? | மனதின் ஓசை 15

மனநலப் பாதிப்புக்கான சிகிச்சை பெறுவதைப் பற்றி வெளிப்படையாகப் பேசுவது இயல்பான விஷயமாகப் பார்க்கப்படுவதில்லை. மனநலம் சார்ந்த இந்தச் சமூகக் களங்கம், பாதிக்கப்பட்ட வருக்குத் தயக்கத்தை ஏற்படுத்துவது மட்டுமன்றி அவர் சிகிச்சை பெறுவதற்கும் தடையாக இருக்கிறது.

உடைக்கப்பட வேண்டிய மனத்தடை: கரோனா பெருந்தொற்றுப் பாதிப்பு ஏற்பட்டு 2020ஆம் ஆண்டுக்குப் பிறகு பள்ளி, கல்லூரி மாணவர்கள் தொடங்கிப் பெண்கள், பணியாளர்கள், முதியோர் எனப் பெரும்பாலானோருக்கு மனச்சோர்வு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இச்சூழலில் மனநலச் சிகிச்சைகள் அனைவருக்கும் கிடைப்ப தற்காக ‘Tele Psychiatry’ முறை உலக நாடுகளில் பரவலாக்கப்பட்டது. அதாவது, மனநலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர் மருத்துவரை நேரில் சந்திக்காமலேயே காணொளி மூலமாகவோ தொலைபேசி அழைப்பு வழியாகவோ தொடர்பு கொண்டு சிகிச்சை பெறும் சேவை.

கரோனா பெருந் தொற்று அதிகமாகப் பரவிய காலத்தில் மனநலச் சிகிச்சை பெறுவதற்கு இந்தச் சேவை பெறும் உதவியாக அமைந்தது. நேரில் சென்று மருத்துவரைச் சந்திக்கத் தயக்கம் உள்ளவரும் வீட்டில் அல்லது இருக்கும் இடத்தில் இருந்தே இச்சேவையைப் பெற முடியும் என்பதால், இதனால் நல்ல பலன் கிடைத்தது.

காணொளி அல்லது தொலைபேசி அழைப்பின் மூலம் இச்சேவையைப் பெற முடிவதால் பலர் மனநலச் சிகிச்சை சார்ந்த சமூகக் களங்கத்தை உடைத்து வெளிவந்தனர். சிகிச்சையைப் பெறுவதற்கான தடைக்கற்களாக இருக்கக்கூடிய மனத்தடையை இது போக்கும் என்பதால் ‘Tele Psychiatry’ சேவை கரோனாவுக்குப் பிந்தைய ஆண்டுகளில் இன்னும் பிரபலமடையத் தொடங்கியது.

சவால்கள் என்ன? - எந்தவொரு விஷயத்திலும் சாதக - பாதகம் இருக்கும் என்பதால் ‘Tele Psychiatry’ சேவைகளிலும் சிக்கல்கள் இல்லாமல் இல்லை. மருத்துவர் - பாதிக்கப்பட்டவர் இடையேயான மனநலப் பிரச்சினை சார்ந்த உரையாடல் முதலில் இடையூறு இல்லாமல் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

தொலைபேசி அழைப்புச் சேவை, இணையச் சேவை ஆகியவற்றில் இடையூறு இருந்தால் முழுமையான சிகிச்சையைப் பெறுவதில் சிக்கல் ஏற்படும். இவை அனைத்தையும் தாண்டி மருத்துவர் ஒருவரால் பாதிக்கப்பட்டவரை நேரில் பார்த்து ஆலோசனைகளை வழங்குவதை இச்சேவை ஈடுசெய்ய முடியாது.

மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவரோடு நேரடியாக உரையாடும் போது முகபாவங்கள், உடல் மொழிகள் ஆகியவற்றைக் கவனித்து மருத்துவரால் அவரைப் பற்றிய முழுமையான புரிதலுக்கு வர முடியும். ‘Tele psychiatry’ சேவையின்போது இது சவாலான விஷயம். கடந்த சில ஆண்டுகளாக இளம் வயதினர் மத்தியில் இந்த ‘Tele Psychiatry’ சேவை பிரபலமாகியுள்ளது.

கல்லூரிப் படிப்பில் உள்ளவர், வேலைக்குச் செல்பவர் ஆகியோர் மருத்துவர் நேரில் வரப் பரிந்துரைக்கும்போதும் ‘Tele Psychiatry’ சேவை வழியே சிகிச்சையைப் பெறவே விருப்பம் தெரிவிக்கின்றனர். சமூகக் களங்கத்தைக் களைந்து சிகிச்சையின் தொடக்கப் புள்ளியாக இச்சேவையை அணுகலாமே தவிர, முழுமையாகக் குணம் அடைய மருத்துவர் பரிந்துரையின்படி நேரில் செல்வதே நல்லது. காணொளி வழியாக ஆலோசனைகளைப் பெறுவதே போதுமானது என்கிற போக்கைத் தவிர்க்க வேண்டியது அவசியம்.

‘Tele Psychiatry’ சேவை எனும் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்திப் பயன் பெறலாம் என்றாலும், தவிர்க்க இயலாத சூழலில் தேவை ஏற்படும்போது மனநல மருத்துவரை நேரில் அணுகுவதால் கூடுதல் பலன்களைப் பெற முடியும்.

(தொடர்ந்து பேசுவோம்)

- addlifetoyearz@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x