Published : 24 Dec 2024 02:04 PM
Last Updated : 24 Dec 2024 02:04 PM
டிச.17: ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப பரிந்துரைக்கப்பட்டது.
டிச.17: கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து 69 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளும்படி செய்தது.
டிச.17: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த ஈவிகேஸ் இளங்கோவன் மரணமடைந்ததைத் தொடர்ந்து அத்தொகுதி காலியாக இருப்பதாக சட்டமன்ற செயலகம் அறிவித்தது.
டிச.18: சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவித்தார். 38 வயதான அஸ்வின் 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 537 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
டிச.19: அம்பேத்கர் குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியது தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் ஆளுங்கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் 2 பாஜக உறுப்பினர்கள் காயமடைந்தனர். இதுதொடர்பாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
டிச.19: நெல்லையில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளைக் கேரள அரசே அகற்ற வேண்டும் என்று பசுமைத் தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு உத்தரவிட்டது.
டிச.19: தமிழ்நாட்டில் கொட்டப்படும் கேரள மருத்துவக் கழிவை அகற்றும் செலவை கேரள மாசுக் கட்டுப்பாடு வாரியத்திடம் தமிழக மாசுக் கட்டுப்பாடு வாரியம் வசூலிக்க வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
டிச.19: 2025இல் பாகிஸ்தானில் நடைபெறும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா விளையாடும் போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறாது என்று ஐசிசி அறிவித்தது.
டிச.19: 2024ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது வரலாற்று ஆய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதி எழுதிய ‘திருநெல்வேலியும் எழுச்சியும் வ.உ.சி.யும் 1908’ என்கிற ஆய்வு நூலுக்கு அறிவிக்கப்பட்டது.
டிச.19: மும்பை கேட்வே ஆஃப் இந்தியாவிலிருந்து எலிபெண்டா தீவுக்கு சென்ற சுற்றுலா படகு மீது கடற்படை படகு மோதி ஏற்பட்ட விபத்தில் 13 பயணிகள் உயிரிழந்தனர்.
டிச.20: ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் டேங்கர் லாரி விபத்துக்குள்ளாகி சமையல் காஸ் வெளியேறியதில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.
டிச.20: முப்படை தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் குன்னூர் அருகே விபத்துக்குள்ளானதற்கு மனித தவறே காரணம் என்று நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. 2021இல் பிபின் ராவத் உள்பட 14 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தனர்.
டிச.20: ஹரியாணா முன்னாள் முதல்வரும் இந்திய லோக் தளம் கட்சியின் தலைவருமான ஓம் பிரகாஷ் சவுதாலா (89) உடல்நலக் குறைவால் குருகிராமில் காலமானார். இவர் ஹரியாணா முதல்வராக 5 முறை பதவி வகித்தவர்.
டிச.20: ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவை நாடாளுமன்றக் கூட்டுக் குழுவுக்கு (ஜேசிபி) அனுப்ப மக்களவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
டிச.21: 43 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பிரதமர் நரேந்திர மோடி குவைத் நாட்டுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டார்.
டிச.21: வார்டு மறுவரையறை, இட ஒதுக்கீடு முடிந்த பிறகு 27 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பாணை வெளியாகும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு உத்தரவாதம் அளித்தது.
டிச.22: முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் 179 நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டதற்கான அரசாணையைத் தமிழ்நாடு அரசு வெளியிட்டது.
டிச.23: பள்ளிகளில் 5 மற்றும் 8ஆம் வகுப்புகளில் கட்டாய தேர்ச்சி முறையை மத்திய கல்வித் துறை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டது. தமிழ்நாட்டில் இந்த அறிவிப்பு பின்பற்றப்படாது என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்தார்.
டிச.23: தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியனை நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டார்.
தொகுப்பு: மிது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT