Last Updated : 11 Dec, 2024 06:06 AM

 

Published : 11 Dec 2024 06:06 AM
Last Updated : 11 Dec 2024 06:06 AM

‘நெட்வொர்க்கிங்’க்கு உதவும் ‘இன்டர்ன்ஷிப்’ | இதோ வேலை!

‘இன்டர்ன்ஷிப்' என்பது நேரடியான வேலை வாய்ப்பு அல்ல. பெரும்பாலும் கல்விக் காலத்தின் இறுதிப் பகுதியாக இந்தத் பணியிடப்பயிற்சி என்பது பாடத்திட்டத்தில் பரிந்துரைக்கப்படுகிறது. பாடங்களைப் படித்துத் தகவல்களை அறிவது வேறு. அவற்றை நடைமுறையில் கொண்டு வருவது வேறு. அப்படி ஒரு வாய்ப்பைப் ‘பணியிடப் பயிற்சி’ வழங்குகிறது.

துறைசார் பயிற்சி: இதை ‘ஏதோ ஒருநிறுவனத்தில் குறுகிய காலம் பயிற்சிக்குச் சென்றுவர வேண்டும், அவ்வளவே’ என்று மாணவர்கள் கருதக் கூடாது. பணியிடப்பயிற்சி மேற்கொள்வதால் பல நன்மைகள் உள்ளன. நீங்கள் வருங்காலத்தில் எந்தத் துறையில் பணிபுரிய விரும்புகிறீர்களோ, அதே துறையைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தில் ‘பணியிடப்பயிற்சி’க்குச் செல்ல வேண்டும்.

அந்தத் துறையைப் பற்றி நீங்கள் கொண்டிருக்கும் கனவுக்கும் நடைமுறையில் அங்கு பணியாற்றுவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கலாம். இதனால், அந்தத் துறை உங்களுக்குப் பிடிக்காமல் போகலாம். சுதாரித்துக்கொண்டு மாற்றுப் பாதையைத் தேர்ந்தெடுக்க ‘பணியிடப்பயிற்சி’ உதவுகிறது.

பயிற்சி தொடங்கும்போது அந்த நிறுவனத்துக்கு நீங்கள் ஒரு புதுமுகம். சில நாள்களோ மாதங்களோ எனக் குறுகிய காலம்தான் அங்கு இருக்கப்போகிறீர்கள். என்றாலும் உங்களை வழிநடத்த துறைசார் நிபுணர்கள் இருப்பார்கள். அவர்கள் உங்களைச் சரியாக வழி நடத்தலாம். உங்கள் சந்தேகங்களை எல்லாம் கேட்டுத் தெளிவு பெற இது ஒரு பொன்னான வாய்ப்பு. உங்கள் பணியைப் பற்றிய கருத்துகளைக் கேட்டுச் சரிசெய்து, திறன்களை மெருகேற்றிக் கொள்ளலாம்.

‘நெட்வொர்க்கிங்’ தெரியுமா? - பயிற்சி காலத்தின்போது நிறுவனத்தில் உள்ள, அதுவரை உங்களுக்கு அறிமுகம் இல்லாத புதிய தொழில்சார் வல்லுநர்கள், ஆளுமைகளுடன் நீங்கள் ஏற்படுத்திக் கொள்ளும் தொடர்பு பின்னாளில் உங்களுக்குச் சாதகமாக அமையக்கூடும். இதை ‘நெட்வொர்க்கிங்’ என்பார்கள். இந்தத் தொடர்புகளைச் சாமர்த்தியமாகப் பயன்படுத்திக் கொண்டால் படிப்பு முடிந்த பிறகு அவர்களை அணுகுவது எளிதாக இருக்கும். அவர்கள் பணியாற்றும் நிறுவனத்தில் உருவாகும் பணிகளுக்கும் அல்லது பிற நிறுவனங்களில் உள்ள காலிப்பணியிடங்களுக்கும் உங்களை அவர்கள் சிபாரிசு செய்யக்கூடும்.

பணியிடப் பண்பாடு (workplace culture) குறித்து இந்தக் காலக்கட்டத்தில் உங்களுக்குத் தெளிவு உண் டாகும். ஒவ்வொரு நிறுவனத் துக்கும் ஒவ்வொரு விதமான தனித்தன்மை இருக்கும். உங்களது வேலையை மட்டும் கவனிக்கும் நிறுவனங்கள், வேறு சிலவற்றில் குழுவோடு செயல்படுவதற்கு முக்கியத் துவம் அளிக்கக்கூடும்.

சிலவற்றில் பணியிட வேலைகளைவிட ஒழுக்கக் கட்டுப்பாடுகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படும். சக ஊழியர்களோடு பேச, அரட்டை அடிக்க, காலம் தாழ்த்தி அலுவலகத்துக்கு வர அனுமதிக்கும் பணியிடங்களும் உண்டு. இப்படி ஒரு நிறுவனத்தின் பண்பாடு குறித்து இந்தப் பயிற்சிக் காலத்தில் அறியலாம். இதுவொரு நல்ல அனுபவமாக இருக்கும்.

பயிற்சி அனுபவம்: பணியிடப்பயிற்சியின்போது நீங்கள் பல்வேறு பிரிவுகளுக்கு மாற்றப்படலாம். அப்போது பல விஷயங்களை நீங்கள் புதிதாக அறிந்துகொள்ள முடியும். தவிர, உங்களது தகவல்தொடர்பு ஆற்றல் பெருகும். கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு வேறு வேலைகளுக்கு விண்ணப்பிக்கும்போது உங்களுடைய பணியிடப்பயிற்சி அனுபவங்களைக் கட்டாயம் குறிப்பிட வேண்டும். பயிற்சி அனுபவத்துக்கெனத் தனி மதிப்பு உண்டு. இதனால், உங்களுக்கு எளிதாக வேலையும் கிடைக்கலாம்.

இப்போதெல்லாம் காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும்போது உங்களுக்குத் தெரிந்த சிலரது விவரங்களையும் நிறுவனங்கள் கேட்கின்றன. இதை ‘reference’ என்பார்கள். அதாவது நீங்கள் எப்படிப்பட்டவர் என்பது குறித்து அந்த நபர்களிடம் விசாரிக்கப்படும்.

அது திருப்திகரமாக அமைந்தால் உங்களுக்கு வேலை உண்டு. இல்லையெனில் வேலை இல்லாமல் போகக்கூடும். பணியிடப்பயிற்சி காலக்கட்டத்தில் அந்த நிறுவனத்தில் யாருடைய நம்பிக்கையை நீங்கள் பெறுகிறீர் களோ, அவர்களை இப்படி ‘reference’ ஆகக் குறிப்பிடலாம். இது போன்று பல நன்மைகள் நிறைந்த பணியிடப்பயிற்சிக் காலத்தை நீங்கள் முனைப்போடும் புத்திசாலித்தனத்தோடும் பயன்படுத்திக் கொள்வது உங்கள் வருங்காலத்துக்கு நல்லது.

- aruncharanya@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x