Published : 27 Nov 2024 06:07 AM
Last Updated : 27 Nov 2024 06:07 AM
இயற்கை வளங்களுள் காடுகளும் அவற்றைச் சார்ந்த பகுதிகளும் முக்கியமானவை. வனம் - வனவிலங்குகள் பாதுகாப்பு, மாசற்ற சுற்றுப்புறத்தை உருவாக்கும். இப்பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் உத்வேகத்தைத் தற்கால இளைஞர்கள் மத்தியில் அதிகமாகக் காண முடிகிறது. அப்படிப்பட்ட இளைஞர்கள் இந்திய வன சேவை (IFS) தேர்வில் வென்றால் மாவட்ட, மாநில, மத்திய அளவில் முக்கிய அதிகாரிகளாகப் பணியாற்றும் வாய்ப்பைப் பெறலாம். ஐ.எஃப்.எஸ். தேர்வை மத்தியப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆண்டுதோறும் நடத்துகிறது. 2025ஆம் ஆண்டுக்கான தேர்வு அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
தகுதி: பொது வயது வரம்பு 21 முதல் 32 வரை. இதர பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் சாதியினர்/பழங்குடியினர் ஆகியோருக்கு முறையே 3 வருடங்கள், 5 வருடங்கள் வயது வரம்பில் தளர்வு உண்டு. அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் வனவியல், கணிதம், தாவரவியல், வேதியியல், புவியியல், இயற்பியல், புள்ளியியல், விலங்கியல், வேளாண்மை, விலங்குகள் அல்லது கால்நடை அறிவியல், பொறியியல் என ஏதாவது ஒரு பாடத்தில் இளங்கலைப் பட்டம் அல்லது மேற்கூறிய பட்டப் படிப்புகளுக்குச் சமமான தகுதியைப் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பப் படிவத்தை upsconline.nic.in என்கிற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
தேர்வு முறை: ஐ.எஃப்.எஸ். தேர்வானது முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என மூன்று நிலைகளைக் கொண்டது. முதல் நிலைத் தேர்வானது குடிமைப் பணிகளுக்காக (ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ்.,) நடத்தப்படும் பொதுத் தேர்வு ஆகும். முதல்நிலைத் தேர்வில் இரண்டு தாள்கள் (GS1, CSAT) உள்ளன. ஒவ்வொரு தாளும் 200 மதிப்பெண்கள் கொண்டது. அனைத்துக் கேள்விகளும் கொள்குறி வினா-விடை வகையைச் சார்ந்தவை.
GS1இல் 100 வினாக்களும் (ஒவ்வொரு வினாவிற்கும் 2 மதிப்பெண்) CSATஇல் 80 வினாக்களும் (ஒவ்வொரு வினாவிற்கும் 2.5 மதிப்பெண்) தொகுக்கப்பட்டிருக்கும். தவறான விடை ஒவ்வொன்றிற்கும் அவ்வினாவிற்கான மதிப்பெண்ணின் மூன்றில் ஒரு பங்கு குறைக்கப்படும். விடையளிக்காத வினாவிற்கு மதிப்பெண் வழங்கப்பட மாட்டாது.
தகுதிக்கான CSAT தாளில் குறைந்தபட்சம் 33% மதிப்பெண் பெற்றிருந்தால்தான் GS1 தாள் மதிப்பீடு செய்யப்படும். முதல்நிலைத் தேர்வின் GS1 மதிப்பெண் அடிப்படையில் முதன்மைத் தேர்வுக்காகத் தரவரிசைப் பட்டியலை யு.பி.எஸ்.சி. தயார் செய்யும். முதல்நிலைத் தேர்வுக்கான வினாத்தாள்கள் ஆங்கிலம், இந்தி மொழிகளில் மட்டுமே இருக்கும்.
பாடத்திட்டம்: GS1 - இந்திய, சர்வதேச முக்கிய நடப்புச் செய்திகள், இந்திய வரலாறு, தேசிய விடுதலை இயக்கம், இந்தியா, உலகப் புவியியல், அரசியல், பொருளாதாரம், சுற்றுச்சூழல் ஆகியவற்றைப் பற்றி விரிவான அறிவு எதிர்பார்க்கப்படுகிறது.
CSAT - தர்க்கரீதியான பகுத்தறிவு, பகுப்பாய்வுத் திறன், முடிவெடுக்கும் திறன், அடிப்படை எண் திறன் ஆகியவற்றைச் சோதிக்கிறது. இந்தக் கேள்வித்தாளில் ஆங்கில அறிவு, கணிதம், அறிவுக்கூர்மை சார்ந்த வினாக்களும் அடங்கியிருக்கும்.
ஐ.எஃப்.எஸ் முதல்நிலைத் தேர்வு பொதுவாக மே மாதத்தில் நடைபெறும். ஆர்வமுள்ள தேர்வர்கள் அனைவரும் இத்தேர்வுக்கு விண்ணப்பித்து முந்தைய தேர்வு வினாத்தாள்களைச் சேகரித்து, அவற்றை ஆராய்ந்து அதற்கேற்றாற் போல் தேர்வுக்குத் தயாராகலாம்.
- கட்டுரையாளர், போட்டித் தேர்வு பயிற்சியாளர், குளோபல் விக்கிமாஸ்டர்; success.gg@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT