Published : 03 Nov 2024 07:11 AM
Last Updated : 03 Nov 2024 07:11 AM
செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால் பல துறைகளில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுகின்றன. கல்வித் துறையும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆக்கபூர்வமாகச் செயல்பட முடியும், அதேநேரம் எதிர்மறையான விளைவுகளையும் மாணவர்கள் சந்திக்க நேரிடும். ஏ.ஐயின் இந்தத் தன்மையை இச்சூழலில் புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது. கல்வியைப் பொறுத்தவரை கற்பித்தலையும் கற்றலையும் ஏ.ஐ எளிதாக்கும் என்பதால் இதிலுள்ள சாதக பாதகங்களையும் அறிந்திருத்தல் நல்லது.
தொழில்நுட்பத்தைச் சார்ந்திருத்தல்
சில ஆண்டுகளுக்கு முன்பு, ஏதாவது ஒரு தலைப்பின்கீழ் இணையத்தில் தகவல்களைத் திரட்ட வேண்டுமென்றால் ‘கூகுள்’ தேடுபொறியில் தேடுவதுதான் பலரது வழக்கமாக இருந்தது. இன்றும் கூகுள் தேடுபொறியைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறையவில்லை என்றாலும் ‘சாட்-ஜிபிடி’யிடம் தகவல்களைக் கேட்கப் பயனர்கள் பழகிவிட்டனர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் சாட்-ஜிபிடியிடம் கேள்வி-பதில் முறையில் பாடங்களைப் படிப்பதோடு சந்தேகங்களைக் கேட்டு அறிகின்றனர்.
ஆனால், சாட்-ஜிபிடி சொல்வதெல்லாம் உண்மையா எனக் கேட்டால் ‘இல்லை’ என்பதுதான் தற்போதைய நிலை. ஏனென்றால், சாட்-ஜிபிடியில் தகவல்கள் உள்ளீடு செய்வதும் கற்றல் முறையைப் போலவே நடைபெற்றுவருகிறது. எது சரி, தவறு எனத் தன்னளவில் பிரித்துப் பார்க்கத் தெரியாத சாட்-ஜிபிடி தொழில்நுட்பம், உள்ளிடப்பட்ட தகவல், தரவுகளின் அடிப்படையில் பதில்களைச் சொல்வதால் சாட்-ஜிபிடியை மட்டுமே சார்ந்திருப்பது கல்வி கற்கும் மாணவர்களுக்கு உகந்ததல்ல.
ஏ.ஐ தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை ‘பிராம்ப்ட்’ சரியாக இருக்க வேண்டியதும் அவசியம். அதாவது ஏ.ஐயிடம் உரையாடல் நடத்த மனிதர்கள் பதிவிடும் உள்ளீடுகள் ‘பிராம்ப்ட்’ என்றழைக்கப்படுகின்றன. பாடம் தொடர்பாக சாட்-ஜிபிடியிடம் கேள்விகளை அடுக்கும் மாணவர்கள், சரியான ‘பிராம்ப்ட்’களைப் பதிவிட வேண்டியது அவசியம். சரியான கேள்விக்குத்தான் சரியான பதிலை அளிக்குமே தவிர கேள்வி தெளிவாக இல்லையென்றால் சரியான பதிலும் கிடைக்காது என்பதை மாணவர்கள் நினைவில்கொள்ள வேண்டும்.
உதாரணத்துக்கு, ‘ரேடியோவைக் கண்டுபிடித்தது யார்?’ என்கிற கேள்விக்கு ‘மார்கோனி’ என ஆரம்பத்தில் ஏ.ஐ பதிலளித்தது. பல கட்ட தகவல் சேர்ப்புக்குப் பின்பு தற்போது, ‘பல ஆண்டுகால ஆராய்ச்சிகளுக்குப் பிறகு ரேடியோ கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விஞ்ஞானிகள் ரேடியோ கண்டுபிடிப்புக்குப் பங்களித்தவர்கள்’ என விரிவான பதிலைத் தருகிறது. ஒருவேளை கேள்வியின் சாராம்சம், ‘ரேடியோ எப்படி, எப்போது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் வரலாறு என்ன?’ என்றிருந்தால் பார்த்த மாத்திரத்தில் விரிவான பதிலை ஏ.ஐ வழங்கியிருக்குமே? எனினும், ஏ.ஐயின் மொழி நாளுக்குநாள் மேம்படுத்தப்பட்டுவருகிறது, மாற்றங்கள் சேர்க்கப்பட்டுவருகின்றன.
அனைவருக்கும் கல்வி
இது போல பல தலைப்புகளின்கீழ் ஏ.ஐ தன்னைக் காலப்போக்கில் மெருகேற்றிக் கொண்டே வருவதால், தற்சமயம் முழுமையாக ஏ.ஐ தொழில்நுட்பத்தை மட்டும் மாணவர்கள் சார்ந்திருப்பது ஏற்புடையதாக இருக்காது. எனினும், தொழில்நுட்பத்தின் பங்கால் எங்கும் எப்போதும் கல்வி என்பது சாத்தியமாகியுள்ளது. கரோனா போன்ற பெருந்தொற்றுக் காலம், இயற்கைப் பேரிடர், போர் போன்ற அசாதாரணச் சூழல்களின்போது இணையதளம், ஏ.ஐ வழிக் கல்வி என்பது மிகவும் பயனுள்ளதாக அமையும். பல தலைமுறைகளாகப் பொருளாதாரத்தில் பலம் வாய்ந்த குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு மட்டும் தகவல் சேகரிப்பு என்பது எளிதாக இருந்தது. இந்த நிலையை மாற்றி மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய சூழலைச் சேர்ந்த மாணவர்களுக்கும் சமூகத் தடையின்றி இணையத்தின் வழியே தகவல் பரிமாற்றத்தை வழங்கிடப் புது வாசல்களை ஏ.ஐ தொழில்நுட்பம் திறந்து வைத்திருக்கிறது.
விரிவான விளக்கங்கள், ஒளிப்படத்துடன் கூடிய விளக்கக் காட்சிகள், உரையாடல் போன்றதொரு தகவல் பகிர்வு போன்றவை ஏ.ஐ கல்வியின் சிறப்பம்சங்கள். ஒரு தலைப்பைப் பற்றிப் பேசத் தொடங்கி அடுத்தடுத்த தலைப்புகளைத் தேடத் தூண்டுவதால் கற்றல் மீதான மாணவர்களின் ஈடுபாடு அதிகரிப்பது ஆரோக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. ஒரு கட்டுரையை எழுத வேண்டும் என்கிறபோது தகவல், தரவு ஆகியவற்றைத் திரட்ட ஏ.ஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம். உங்களது கட்டுரையை மேம்படுத்த உதவும் ஏ.ஐ, ஒரு கருவிதானே தவிர, முழுக் கட்டுரையையும் அதனிடம் எழுதி வாங்குவது முறையல்ல. அது உங்களுடைய படைப்பாக இருக்காது; வேறொருவர் அல்லது வேறொன்றின் படைப்பாக மாறிவிடும். ஏ.ஐயிடம் ஒரு கட்டுரையைக் கேட்பதில் இருக்கும் இன்னொரு சிக்கல், அந்தக் கட்டுரையை எழுதித்தரக் கேட்கும் அனைவருக்கும் ஏ.ஐ ஒரே பதிலை வழங்கும். இதனால் ‘தனித்துவம்’ என்பது இந்தக் கட்டுரைகளில் இருக்காது. எனவே, இணையதளத்தையும் ஏ.ஐயையும் தகவல் திரட்டும் கருவியாக மட்டுமே பயன்படுத்துவது நல்லது.
ஏ.ஐ தொழில்நுட்பங்களில் ‘சாட்-ஜிபிடி’ பரவலாக அறியப்பட்டிருந்தாலும், ஓவியங்கள் வரைய ‘ஓபன் ஆர்ட் ஏ.ஐ’, ஒளிப்படங்களை உருவாக்க ‘டால் ஈ-3’, ஆராய்ச்சிகள் தொடர்பான தகவல் களஞ்சியமாக ‘கூகுள் ஜெமினி’, ‘சாட் பிடிஎஃப்’ போன்றவற்றையும் பயன்படுத்தி மாணவர்கள் பயன்பெறலாம். பெரும்பாலான ஏ.ஐ தொழில்நுட்பங்களின் செயலிகளைப் பதிவிறக்கம் செய்து கட்டணமின்றிப் பயன்படுத்தலாம். சில காலம் பயன்படுத்தியதற்குப் பிறகு, ஏ.ஐயின் சேவையைத் தொடர்ந்து பெறக் கட்டணம் செலுத்த வேண்டியும் இருக்கலாம். பயன்பாட்டுக்கு ஏற்ப மாணவர்கள் இச்சேவைகளைத் தேர்வுசெய்யலாம்.
என்ன செய்யலாம்?
ஏ.ஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் மாணவர்கள் பொறுப்போடு பயன்படுத்த வேண்டும் என்பதை ஆசிரியரும் பெற்றோரும் அவ்வப்போது நினைவூட்ட வேண்டியது அவசியம். அதுமட்டுமன்றி, மாணவர்கள் பயன்படுத்தும் ஏ.ஐ தளம் பாதுகாப்பானதா, தனி மனிதத் தகவல்களைத் திரட்ட நம்பகமான தளமா என்பதை உறுதிசெய்ய வேண்டும். ஏ.ஐ கற்பிக்கும் தகவல்களைச் சரிபார்ப்பதையும் தொழில்நுட்பத்தை மட்டுமே சார்ந்திருக்காமல் ஆசிரியரோடு, சக மாணவர்களோடு உரை யாடலை வலுப்படுத்துவதையும் மாணவர்கள் நினைவில்கொள்ள வேண்டும். தேவையான நேரத்தில் ஏ.ஐ தொழில்நுட்பத்தோடு நட்போடு இருப்பதும் தேவையில்லாதபோது விலகி இருப்பதும் மாணவர்களின் கைகளிலேதான் உள்ளது!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT