Published : 13 Oct 2024 07:29 AM
Last Updated : 13 Oct 2024 07:29 AM

வெளிநாட்டில் படிக்க கல்வி உதவித்தொகை

திறன்மிக்க வெளிநாட்டு மாணவர்களை ஊக்குவிக்கவும் அவர்கள் முதுநிலைப் படிப்பைப் படிக்கவும் ‘எராஸ்மஸ் முண்டஸ்’ என்கிற கல்வி உதவித்தொகையை (Erasmus Mundus Joint Masters) ஐரோப்பிய ஒன்றியம் வழங்குகிறது.

மாணவர்கள் முதுநிலைப் படிப்பைப்படிக்கும்போது மூன்று வெவ்வேறு நாடுகளில் உள்ள மூன்று பல்கலைக் கழகங்களுக்குச் சென்று படிக்கும் வாய்ப்பை இந்த உதவித்தொகை வழங்குகிறது. நீங்கள் தேர்ந்தெடுத்த முதுநிலைப் படிப்பைப் படித்து முடித்தவுடன், படித்த பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்று உங்களுக்கான இணைவு-முதுநிலைப் பட்டத்தை (Joint Masters) வழங்கும். அல்லது பல்கலைக்கழகங்கள் தனித்தனியாக இரண்டு முதுகலைப் பட்டங்களைக்கூட வழங்கும். உங்களுக்கு எந்த வகையில் பட்டம் வழங்கப்பட வேண்டும் என்பதை முதுநிலைப் படிப்பில் சேரும்போது நீங்களே தீர்மானிக்கலாம்.

கலை, அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் உள்பட 200க்கும் மேற்பட்ட முதுகலைப் படிப்புகள் இத்திட்டத்தின் மூலம் ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள நூற்றுக்கணக்கான பல்கலைக்கழகங்கள் மூலம் வழங்கப்படுகின்றன. எந்தப் படிப்பை எந்தெந்த நாட்டில் உள்ள பல்கலைக் கழகங்கள் இணைந்து வழங்குகின்றன என்பதை https://www.eacea.ec.europa.eu/scholarships/erasmus-mundus-catalogue_en என்கிற இணையதளம் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

பல்கலைக்கழகத்துக்குச் செலுத்த வேண்டிய கட்டணம், விசா, பயணம், தங்கிப் படிப்பதற்கான செலவு இந்தக் கல்வி உதவித்தொகையில் வழங்கப்படுகிறது. மாணவர்கள் உலகின் எந்த நாட்டிலிருந்து வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். நீங்கள் விண்ணப்பித்த முதுநிலைப் படிப்பைத் தொடங்குவதற்குமுன், ஏதேனும்அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தி லிருந்து இளநிலைப் பட்டத்தைப் பெற்றிருக்க வேண்டும்.

இத்திட்டத்தில் இணைவு பெற்றுள்ள பல்கலைக்கழகங்கள் பொதுவாக அக்டோபர் முதல் ஜனவரி மாதத்துக்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில் மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன. இந்த உதவித்தொகையின் மூலம் பல்கலைக்கழகங்களில் கிடைக்கும் அனுபவம், மாணவர்கள் எதிர்காலத்தில் நல்ல நிறுவனத்தில் வேலைவாய்ப்பைப் பெறவும் ஆராய்ச்சி தொடர்பான படிப்புகளைத் தொடரவும் உதவும்.

கட்டுரையாளர், அறிவியலாளர்,

University of Twente (The Netherlands), Harvard Medical School (USA).

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x