Last Updated : 29 Sep, 2024 07:11 AM

2  

Published : 29 Sep 2024 07:11 AM
Last Updated : 29 Sep 2024 07:11 AM

மகிழ்ச்சியான கல்வி பகல் கனவல்ல

வகுப்பறைகள் யாருக்குச் சாதகமானவை என்கிற கேள்வி மிக முக்கியமானது. முறையான கல்வி, சத்தம் இல்லாமல் காலங்காலமாக என்ன வேலையைச் செய்து கொண்டிருக்கிறது என்று கல்வியாளர்கள், தத்துவ அறிஞர்கள் சொல்லியிருக்கின்றனர். ஏராளமான நவீன வசதிகள் வீடுகளுக்குள் வந்துவிட்டன. நடை, உடை, பாவனை என எல்லா விதங்களிலும் நவீனமாக மாறியிருக்கிறோம் அல்லது அப்படிச் சொல்லிக்கொள்கிறோம். ஆனால், சிந்தனையில் நாம் என்னவாக நாம் இருக்கிறோம்?

கடந்த நூற்றாண்டின் முற்பகுதியில் கல்வியாளர் ஜிஜுபாய் பதேகா என்பவரால் குஜராத்தி மொழியில் எழுதப்பட்ட ஒரு நூல், ‘பகல் கனவு’. சுய அனுபவங்களின் அடிப்படையில் அமைந்த கல்வியில் மாற்று முயற்சிகள் குறித்த புனைவு அது. நூலில் மாற்றுக் கல்வி பரிசோதனை முயற்சிகளில் ஆர்வமாக இருக்கும் லட்சுமிராம் எனும் ஆசிரியரிடம் மாற்றங்களை விரும்புகிற மனம் கொண்ட கல்வி அதிகாரி ஒருவர் தொடர்ந்து உரையாடுவார்.

ஆக்கப்பூர்வ உரையாடல்

ஓரிடத்தில் கல்வி அதிகாரி கேட்பார், “நாங்கள் நடத்தும் தேர்வுகள் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? புதிய கல்விக் கொள்கையாளர்கள் ஒட்டுமொத்தமாகத் தேர்வுகளையே எதிர்க்கிறார்கள். அது ஒரு தீமை என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், நாங்கள் கல்வித் துறையை நடத்தியாக வேண்டும். தேர்வுகளே இல்லையென்றால் ஆசிரியர்கள் சொல்லிக் கொடுக்காமலே போகக்கூடும். நேர்மையான ஓர் ஆசிரியர் சொல்லிக் கொடுத்தாலும், அவர் சரியாக சொல்லிக் கொடுத்திருக்கிறாரா என்று சோதனை செய்து பார்க்க, மாணவர்கள் பலன் அடைந்திருக்கிறார்களா என்று அறிய ஒரு கருவி தேவை. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?”

அதற்கு, “உங்கள் பிரச்சினை மிகவும் சரியானது. மாணவர்கள் பள்ளி செல்லும் வரையும் அவர்களுக்கு ஓர் ஆசிரியர் கற்றுக் கொடுக்கும் வரையும் தேர்வுகள் இருந்துதான் ஆக வேண்டும். ஆனால், கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற உள்ளார்வத்துடன் மாணவர்களும் கற்பித்தல் கலையை அறிந்த உற்சாகத்துடன் ஆசிரியர்களும் பள்ளிக்கு வருகிற ஒரு காலம் வரும். அப்போதுதான் தேர்வுகளைக் கைவிட முடியும்” என்று பதில் அளிக்கிறார் ஆசிரியர்.

தேர்வின் பயன்

லட்சுமிராம் மேலும் சில வழிமுறைகளையும் சொல்கிறார், “முதலாவதாக, மாணவனைப் பரீட்சித்துதான் ஆக வேண்டும் என்றால் அதை அவன் அடிக்கடி சந்திப்பது நல்லது. அதுவே பழக்கமாகிவிடுவதால் தேர்வு பயம், தேர்வுச் சுமை நீங்கிவிடும். இரண்டாவதாக, தேர்வு என்பது மாணவர்களின் தகுதியை நிர்ணயிப்பதாக அமையாமல், அவர்களின் பலவீனத்தைக் கண்டறியவும் முன்னேற்றம் குறைந்த மாணவர்களை எச்சரிக்கை செய்யவும் ஒரு சாதனமாகப் பயன்பட வேண்டும். மூன்றாவதாக, பாடத்தை நன்றாக அறிந்துவிட்டதாக உறுதியுடன் கூறும் மாணவர்களுக்குத் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். தங்கள் பலவீனங்களைத் தெரிந்துகொள்வதற்காக அவர்களாகவே தேர்வில் கலந்துகொள்ள முன்வர வேண்டும். அவ்வாறு தேர்வில் கலந்துகொள்ளாத வர்களுக்குத் தத்தம் குறைபாடுகள் தெரியாமல் போகும் வாய்ப்புள்ளது.

மேம்படுத்தும் ஆலோசனைகள்

பொருத்தமான தேர்வு முறைகள் சாத்தியப்படும் பாடங்களில் மட்டுமே தேர்வுகள் நடக்க வேண்டும். தேர்வுகளில் வினாக்களுக்கு விடை எழுதப் பாடப் புத்தகங்களை அனுமதிக்க வேண்டும். மாணவர் பாடப் புத்தகத்தை எப்படிப் பயன்படுத்துகிறார் என்பதே சோதனை முறையாகும். மேல் வகுப்புக்குச் செல்லத்தகுதியில்லை, மேல் வகுப்புக்குச் செல்லலாம் பலவீனமான பாடங்களில் முன்னேற்றம் காட்டுவதைப் பொறுத்து மேல் வகுப்புக்குச் செல்லலாம் எனத் தேர்வு முடிவுகளை மூன்று வகையாகப் பிரித்து வெளியிட வேண்டும். முதல் இடம், இரண்டாம் இடம் என்று மதிப்பெண் கொடுத்துத் தகுதி அளிக்கும் முறையை விட்டுவிட வேண்டும்” என்று சொல்வார் லட்சுமிராம். எவ்வளவு அற்புதமான ஆலோசனைகள்?

இந்நூல் குஜராத்தி மொழியில் வெளிவந்து 90 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்தியில் வெளிவந்து 35 ஆண்டுகளும் தமிழில் வந்து கால் நூற்றாண்டும் கடந்துவிட்டன. கல்வியில் இத்தகைய புரட்சி, குழந்தைகளின் முகத்தில் மலர்ச்சி ஏற்படுத்தும் மாற்றங்கள் நாட்டில் ஒருபோதும் நடக்கவே நடக்காது என்று உறுதிபடத் தெரிந்துதான் இந்நூலுக்குப் ‘பகல் கனவு’ (குஜராத்தியில் ‘திவசப்னா’ - அதே பொருள்தான்) என்று பெயர் இட்டாரா என்று தெரியவில்லை.

தொடக்க நிலை வகுப்புகளில் கதை, பாட்டு, விளையாட்டு, நாடகம் ஆகியவை குழந்தைகளின் திறன் வளர்ச்சியில் எவ்வாறெல்லாம் பங்களிக்கின்றன என்பதையும் அவர்கள் பெற்ற திறன்களை எவ்வாறெல்லாம் மிக எளிதாக மதிப்பீடு செய்ய முடியும் என்பதையும் மிக அழகாகச் சொல்லியிருப்பார். வாசிப்பதற்கு நிறைய புத்தகங்கள் வாங்கலாம். வகுப்பறை நூலகங்கள் உருவாக்கலாம். பாடப் புத்தகங்கள் எதற்கு என்பார் லட்சுமிராம். இதை வாசிக்கும் நமக்கு, இப்போது நடைமுறையில் இருக்கும் ‘வாசிப்பு இயக்கக் கதைகள் போதுமே, தனியே எதற்குப் பாடநூல்கள்?’ என்று தோன்றக்கூடும்.

மாற்றம் வேண்டும்

இவரது முயற்சிகளுக்கெல்லாம் தொடக்கத்தில் சக ஆசிரியர்களே எவ்வாறு முட்டுக்கட்டையாக விளங்குகின்றனர், பின் மாறுகின்றனர் என்பதை வாசிக்கும்போது அந்நூல் நேற்று முன் தினம் எழுதியது போலவே இருக்கிறது. முன்னுரையில் சொல்வதுபோல, ஆங்கிலேய அரசு, இளம் சிறார்களுக்குக் கற்றுத்தரும் ஆசிரியர்களைச் சோம்பலான, சக்தியற்ற கல்விமுறையை ஏற்றுக்கொள்ளச் செய்தது. கல்வி முறையின் விரிவாக்கம் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் கல்வியைக் கொண்டுசென்றது. ஆயினும் ஆசிரியர்களின் அக்கறையின்மையை லட்சக்கணக்கான குழந்தைகள் சகித்துக்கொள்ள வேண்டியிருந்தது என்கிற வரிகளில் மாற்றம் செய்ய வேண்டிய தேவையே இன்னும் எழவில்லை.

கற்பிக்கத் தோதான வகுப்பறைகள் வந்துவிட்டன. கண்காணிக்கத் தோதான வசதிகள் வந்துவிட்டன. ஆனால் குழந்தைகளின் மகிழ்ச்சியான கற்றலுக்கு தோதானஏற்பாடுகளை எந்த அளவுக்குச் செய்திருக் கிறோம்? வகுப்பறை, பாடநூல், கற்பித்தல், மதிப்பீடு, கற்றல் சுதந்திரம் என நிறைய யோசிக்க வேண்டியிக்கிறது. எழு, நட, ஓடு, பற என்கிறோம் குழந்தைகளை. ஆனால், நம் முயற்சிகளில் நாம் எழுந்து நிற்பதிலேயே பறந்துவிட்டதற்கான பரவசத்தை அடைந்துவிடுகிறோம். குழந்தைகளின் கற்றலை எப்போது மகிழ்சியானதாக மாற்றப்போகிறோம்?

- கட்டுரையாளர், ‘மாணவர் மனசு’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x