Last Updated : 01 Sep, 2024 07:04 AM

1  

Published : 01 Sep 2024 07:04 AM
Last Updated : 01 Sep 2024 07:04 AM

கல்வித்துறையில் ஏஐ: கவலையளிக்கும் போக்கா?

பள்ளி மாணவர்களின் கட்டுரைகளைத் திருத்தி, மதிப்பெண் அளிக்க ஆசிரியர்கள் ஏஐ சேவையைப் பயன்படுத்துவது தொடர்பாக அமெரிக்க நாளிதழான ‘வால்ஸ்டிரீட் ஜர்ன’லில் ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது. சாரா ராண்டசோ என்பவர் இந்தக் கட்டுரையை எழுதியுள்ளார். மாணவர்கள் ஏஐ சேவையைக் குறுக்குவழியாகப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கும் நிலையில், ஆசிரியர்கள் கட்டுரைகளைத் திருத்த ஏஐ மதிப்பீட்டுச் சேவையைப் பயன்படுத்தத் தொடங்கியிருப்பதால் கல்விச் சூழலில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் பற்றி அந்தக் கட்டுரையில் விவாதிக்கப்பட்டுள்ளது.

மாறிவரும் சூழல்

மாணவர்கள் எழுதும் கட்டுரைகள்உள்ளிட்ட ஆக்கங்களைத் திருத்தி, மதிப்பெண் அளிக்கும் திறன் கொண்ட ஏஐ சேவைகள் ஏற்கெனவே கல்வி நிறுவனங்களில் பயன்படுத்தப்படுகின்றன. வருங்காலத்தில் இவை இன்னும் பரவலா கலாம். விடைத்தாள்களை ஏஐ சேவை திருத்தி மதிப்பெண் அளிக்கும்போது, ஆசிரியர்களின் சுமை குறைந்து மாணவர்களுக்குக் கற்பிப்பதில் அவர்கள் அதிகக் கவனம் செலுத்தலாம் எனக் கல்வித் துறையில் ஏஐக்கு ஆதரவாகக் குரல்கள் ஒலிக்கின்றன.

ஆனால், இதனால் எழும் பிரச்சினை களைத்தான் இந்தக் கட்டுரை சுட்டிக்காட்டியிருக்கிறது. ஏஐ மென்பொருள், ஆசிரியர்களைவிடக் கறாராகத் திருத்தி, குறைவான மதிப்பெண் அளிப்பதாகவும், சில நேரம் ஏஐ அளிக்கும் எதிர்வினை மிகவும் கடுமையாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏஐ மென்பொருளின் விமர்சனம், மாணவர்களின் பிஞ்சு உள்ளத்தைப் பாதிக்கும் வகையில் இருப்பதாக ஆசிரியர் ஒருவர் கூறியுள்ளார்.

இயந்திரங்கள் புரிந்துகொள்ளுமா?

கட்டுரைகளைத் திருத்தும் ஆசிரியர்கள், மாணவர்கள் தங்கள் எழுத்துகளை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் கருத்துத் தெரிவிக்கின்றனர். ஆனால், அந்தப் பரிவும் புரிதலும் ஏஐ மென்பொருளின் இயந்திர அணுகுமுறையில் இல்லை என்பது பெருங்குறையாக அமைகிறது. இது போன்ற சேவை கண்டுபிடிக்கப்பட்டதே வன்முறை எனக் குறிப்பிட்டுள்ள ஓர் ஆசிரியர், “ஒருவரைச் சிறந்த எழுத்தாளராக உருவாக்கும் மனித அம்சத்தை இயந்திரங்கள் எப்படிப் புரிந்துகொள்ளும்?” எனக் கேள்வி எழுப்புகிறார்.

ஏஐ நிறுவனங்கள் இந்த விமர்சனங்களுக்கு அளித்துள்ள பதில் இரண்டு விதமாக இருக்கிறது. ஒன்று, இந்தச் சேவைகள் ஆசிரியர்களுக்கு மாற்று அல்ல என்பது; ஆசிரியர்கள் இந்தச் சேவைகளைப் பயன்படுத்தினாலும் இறுதி முடிவை அவர்கள் மேற்கொள்ளலாம், ஏஐ விமர்சனங்களையும் மிதமாக்கிக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளன. இன்னொரு கருத்து, ஏஐ சேவைகள் இந்த அனுபவத்தில் இருந்து கற்றுக்கொண்டு மேலும் மேம்படும் எனத் தெரிவித்துள்ளன. ஏஐ சேவைகள் கற்றுக்கொண்டு மேம்படும் என்பது உண்மைதான் என்றாலும், வருங்காலத்தில் மாணவர்களின் ஆக்கங்களை இயந்திரங்கள் மதிப்பீடு செய்யும் நிலை பல்வேறு கேள்விகளை எழுப்பாமல் இல்லை.

விவாதம் அவசியம்

“எதிர்காலத்தில் பள்ளியிலும் கல்லூரி களிலும் மாணவர்கள் சிந்தித்துப் புரிந்துகொள்ளும் திறன் இல்லாமலேயே பட்டம் பெறத் தொடங்குவார்கள். மருத்துவர்கள் கணினியிடம் கேட்டு நோயாளிகளுக்கு மருந்து அளிப்பார்கள். எல்லாம் இயந்திரமயமாகும்” என ஒருவர் புலம்பியிருக்கிறார். இந்தக் கருத்துகளில் சில மிகையாக இருந்தாலும், கல்வித் துறை உள்ளிட்ட பல துறைகளில் ஏஐ சேவைகளின் தாக்கம் பற்றி விவாதிக்க வேண்டிய கட்டத்தில் நாம் இருப்பதை இவை உணர்த்துகின்றன.

மேற்கண்ட கட்டுரை குறிப்பிடுவதுபோல, ஆசிரியர்களைவிட ஏஐ சேவைகள் குறைவாக மதிப்பெண் அளித்து, கடுமையான விமர்சனங்களை அளிப்பதாக இருந்தால், மாணவர்களையும் அவர்களின் கற்கும் திறனையும் அது எந்த வகையில் பாதிக்கும் என்று யோசிக்க வேண்டும். இதன் பொருள், ஏஐ சேவைகளைப் பயன்படுத்தக் கூடாது என்பதல்ல. மாறாக, ஏஐ சேவையை உருவாக்கியது யார், அதன் நோக்கம் என்ன, அது எவ்வாறு செயல்படுகிறது என்பது போன்ற கேள்விகள் முக்கியமாகின்றன. எல்லாத் துறைகளிலும் ஏஐ சேவைகள் பயன்படுத்தப்படுவது தவிர்க்க இயலாதது. ஆனால், அதற்குத் தயாராக இருக்கிறோமா என்பது குறித்துச் சிந்திக்க வேண்டும்.

உதாரணமாக, ஏஐ மென்பொருள் மதிப் பெண்களை வழங்கும்போது எழக்கூடிய பிரச்சினைகளைப் பார்க்கலாம். முதலில், ஏஐ மென்பொருள் கொண்டு கட்டுரை திருத்தப்பட்டது எனத் தெரிவிப்பது ஆசிரியரின் கடமை ஆகிறது. அதே நேரத்தில், உங்கள் பிள்ளைக்கு இலக்கியம் வராது என்பதுபோல ஏஐ மென்பொருள் கருத்துத் தெரிவித்தால், அதைக் கேட்கும் பெற்றோர் மனம் எப்படி இருக்கும்? இது போன்ற கேள்விகளைத் தீவிரமாகப் பல தளங்களில் விவாதித்து, ஏஐ சேவைகளின் பயன்பாடு என்பது பயனுள்ளதாக அமைவதை உறுதிசெய்யத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

ஒவ்வொரு துறையிலும் ஏஐ பயன்பாடு இது போன்ற பல கேள்விகளை எழுப்புகிறது. இவற்றை அலட்சியம் செய்யாமல் விவாதிக்கவும் அதன் அடிப்படையில் அடுத்த நகர்வை மேற்கொள்ளவும் தயாராக வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x