Published : 31 Aug 2024 04:32 PM
Last Updated : 31 Aug 2024 04:32 PM
இணையத்தில் அண்மையில் அறிமுகமாகியிருக்கிறது செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் சார்ந்த 'ரியல் ஃபேக்' (Real fake) எனும் விளையாட்டு. இந்த விளையாட்டு என்ன செய்கிறது என்றால், உண்மையான ‘ஸ்டார்ட்-அப்’ நிறுவனங்களோடு, ஏஐ உருவாக்கிய போலி ‘ஸ்டார்ட்-அப்’ நிறுவனங்களைப் பட்டியலிட்டு, உண்மையான நிறுவனங்களைக் கண்டுபிடிக்க வைக்கிறது.
விளையாட்டைத் திறந்தவுடன் வரிசையாகக் காண்பிக்கப்படும் அட்டைகளில் இடம்பெறும் ‘ஸ்டார்ட்-அப்’ குறிப்புகளைப் படித்துவிட்டு, அந்த நிறுவனத்தின் உண்மைத்தன்மையைத் தீர்மானிக்க வேண்டும். உண்மை என நினைத்தால் இப்படி ஒரு தள்ளு, போலி என நினைத்தால் எதிர்த்திசையில் ஒரு தள்ளு தள்ள வேண்டும். அதாவது பிரபல ‘டேட்டிங்’ சேவையான ‘டிண்டர்’ பிரபலமாக்கிய ‘ஸ்வைப்’ பாணியில் இந்த விளையாட்டை விளையாட வேண்டும். விளையாட்டின் முடிவில் ‘ஸ்வைப் செய்ததில் எத்தனை சரி, தவறு எனத் தெரிந்து கொள்ளலாம்.
ஒரு நிறுவனம் தொடர்பான அறிமுகக் குறிப்புடன், அதன் விவரங்களும் அட்டையில் இடம்பெறுகின்றன. விளையாட்டின் ஆரம்ப நிலையில் நிறுவனங்களின் விவரங்களைப் படிக்கும்போது உண்மை எது, பொய் எது எனக் கண்டுபிடிக்க முடியாத அளவுக்குக் குழப்பம் ஏற்படலாம். உண்மை என நினைப்பவை போலியாகவும் போலி என நினைப்பவை உண்மையாகவும் இருக்கின்றன. இதனால் இந்த விளையாட்டு சுவாரசியமாகவும் சிந்திக்கவும் வைக்கிறது.
விளையாட்டில் பயன்படுத்தப்படும் உண்மையான நிறுவனங்களின் தகவல்கள் எல்லாம் ‘ஸ்டார்ட்-அப்’ களஞ்சியம் என்றழைக்கப்படும் ‘கிரஞ்ச்பேஸ்’ (Crunchbase) தளத்தில் இருந்து எடுக்கப்படுகிறது. போலியாக உருவாக்கப்படும் நிறுவனங்களின் விவரங்கள் சாட்ஜிபிடி கொண்டு உருவாக்கப்படுகிறது.
இந்த விளையாட்டை உருவாக்கும் பொருட்டு போலி நிறுவனங்களை உருவாக்கித் தருமாறு சாட் ஜிபிடியிடம் கேட்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் சாட் ஜிபிடி உருவாக்கிய தகவல்கள் எளிதாகக் கண்டுபிடிக்கக் கூடியதாக இருந்திருக்கின்றன. பிறகு, உள்ளடக்கத்தை மாற்றிக் கேட்டபோது சாட்ஜிபிடி உருவாக்கிய நிறுவனங்கள் கிட்டத்தட்ட உண்மையான நிறுவனங்கள் போலவும், சில நேரத்தில் உண்மை நிறுவனங்களை மிஞ்சக்கூடிய வகையிலும் அமைந்திருக்கின்றன.
ஏஐ மென்பொருள் கொண்டு இணையதளம் வடிவமைப்பது போல, விளையாட்டுகளும் உருவாக்கலாம் என்பதற்கு இந்த விளையாட்டு ஒரு நல்ல உதாரணம். இணைய விளையாட்டுகள் உருவாக்கத்தை சாட்ஜிபிடி போன்ற ஏஐ சேவைகள் எப்படி அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்கின்றன என்பதை இதன் மூலம் உணரலாம் எனத் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ’ரியல் ஃபேக்’ விளையாட்டை இந்தத் தளத்தில் பார்க்கலாம் - https://realfakegame.com/
இதைப் போல ‘ஆஸ்ட்ரோகேட்’ (https://www.astrocade.com/), ‘ஆல்டரா’ (https://altera.al/) போன்ற நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment