Published : 18 Aug 2024 08:22 AM
Last Updated : 18 Aug 2024 08:22 AM
பதினோராம் வகுப்பில் சேரும்போது மாணவர்கள் பல்வேறு கனவுகளோடு வருகிறார்கள். அக்கனவுகள் எத்தகையவை என்பது விவாதத்திற்குரியது. ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். சொல்வதைப் போல, ‘மறந்தும் சுமக்காதீர்கள் மற்றவர்களின் கனவை’ என்கிற கருத்தை மாணவர்களுக்குத் தொடர்ந்து நினைவூட்ட வேண்டிய அவசியமும் அவசரமும் இருக்கிறது.
பெற்றோர் நினைப்பது சரியா?
குழந்தைகள் வீட்டில் வளர்கிற காலத்தில், அவர்களுக்கு வீடே ஓர் உலகமாக இருக்கிறது. வீட்டுக்கு அடுத்ததாக குழந்தைக்குத் தெரிகிற உலகம் பள்ளிக்கூடம். வகுப்பில் கற்றுத் தருகிறவர்கள் எதையெல்லாம் சரியென நம்புகிறார்களோ அதைக் கற்றுத் தருகிறார்கள். அவர்களுக்கு எவையெல்லாம் சரியெனபட்டதோ அவை சரியில்லாமலும் போகலாம். இந்த இரண்டு இடங்களிலும் கூராய்ந்து பார்த்து எது சரி, எது தவறு, சரியில்லாதவற்றைச் சரி எனச் சொல்லிவிட்டால் அந்தக் குழந்தை என்னவாக ஏற்றுக்கொள்ளும் என்பதைச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது.
இச்சூழலில் ஆசிரியர்களுக்கான கல்வி முறை, ஆசிரியர்களை உருவாக்குகிற விதத்தில் போதாமை இருக்கிறது. வீட்டுக்கும் பள்ளிக்கும் இடையில் சமூகம் இருக்கிறது. சமூகத்தின் ஒட்டுமொத்த அமைப்புக்குள் வீடும் பள்ளியும் இருந்தாலும், வீட்டில் இருந்து பள்ளிக்கு வருகிற தொலைவைக் கடக்கிறபோது, இடையிலே ஏற்படுகிற சமூகத் தொடர்பு வீதியோ, சாலையோ, சந்தையோ, மருத்துவமனையோ புதிய தோற்றத்தை, புதிய அறிவைக் குழந்தைகளுக்குத் தருகிறது. இவையெல்லாம் சேர்ந்துதான் ஒரு குழந்தையை, ஒரு மாணவரை உருவாக்குகின்றன. குழந்தை என்னுடைய கண்காணிப்பில் இருக்கிறவன்/ள், நிச்சயமாகச் சரியாகவே இருப்பான்/ள் என்று ஒரு பெற்றோர் நினைப்பது சரியா, தவறா என்கிற கேள்வி இன்றைய காலக்கட்டத்தில் மிக முக்கியமானது.
பெற்றோருக்குத் தெரியாத மற்றோர் உலகம் அல்லது சமூகம் குழந்தைகளுக்குத் தெரிந்திருக்கிறது. பெற்றோரிடம் ஒரு முகம், நண்பர்களுக்கு ஒரு முகம் என இருக்கிற சிறுவர்கள் சமூகத்திற்கென்று ஒரு முகத்தையும் வைத்திருக்கிறார்கள். குழந்தைகளுக்கு வெவ்வேறு முகங்கள் உண்டு என்கிற புரிதல் ஆசிரியர்களுக்கும் பெற்றோருக்கும் வேண்டும். அதன் மூலமாக ஏற்படும் விளைவு நல்லதாகவும் இருக்கலாம், கெட்டதாகவும் இருக்கலாம். அதைப் பகுத்து ஆராய்ந்து பார்க்கிற அறிவு குழந்தைகளுக்கு இல்லை. அவர்கள் கற்றுத் தெளிந்த விஷயங்களில் எது சரி, எது தவறு எனக் கண்டுபிடிக்க வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு இருக்கிறது.
ஆசிரியரின் பொறுப்பு
இதே அளவு கோலை இரண்டு மடங்காக்கி அறிந்துகொள்ள வேண்டிய அவசியம் ஆசிரியர்களுக்கு இருக்கிறது. அப்போதுதான் சமூகம் கற்றுத் தருகிற நல்ல விஷயங்களைத் தாண்டி, மோசமான விஷயங்களைப் புறந்தள்ள குழந்தைக்குக் கற்றுத் தர முடியும். மோசமான விஷயங்களைப் பற்றி குழந்தைகள் ஏற்றுக்கொள்ளும்படியாக எடுத்துச் சொல்வதற்கு வீடானாலும் சரி, பள்ளியானாலும் சரி அதற்கு சிறந்த அறிவு தேவைப்படுகிறது. அந்த ஆற்றலை ஆசிரியர் பெற்றிருக்க வேண்டியது கட்டாயம்.
பதினோராம் வகுப்பைத் தொடங்கும் மாணவர் களெல்லாம் எந்தப் படிப்பு அந்த வருடத்திலே பிரசித்தமான படிப்பாக இருக்கிறதோ அதைப் படிப்பதற்காக அந்த குரூப்பைத் தேர்ந்தெடுப்பது வழக்கமாக இருக்கிறது. இன்றைய காலக்கட்டத்திலே இரண்டு கூறுகளாகச் சமூகத்தைப் பிரித்துவிடலாம். மருத்துவராவது, பொறியாளராவது என்கிற இரண்டைத் தாண்டி சமூகத்தில் வேறொன்றுமில்லையா என்கிற கேள்வியை எழுப்பும்போது, மாணவர்கள் தெளிவாகக் கூறுகிறார்கள், “நான் மருத்துவர் அல்லது இன்ஜினீயர்தான் ஆவேன்” என்று.
ஏன் முடியவில்லை?
இந்த இரண்டைத் தவிர வேறு ஒன்றையும் பற்றி அவர்களுக்கு ஏன் சிந்திக்கத் தெரியவில்லை? ஏன் பள்ளிக்கூடம் மாற்றுப் படிப்புகளை அல்லது இதைத் தாண்டி நிறைய படிப்புகள், துறைகள் இருக்கின்றன என்பதைக் காட்டவில்லை? இதை ஓர் ஆய்வாக மேற்கொண்டு பார்த்தால் ஒன்றாம் வகுப்பில் இருந்தே இவர் மருத்துவராகப் போகிறார் என்று தொடர்ந்து சொல்லி வளர்க்கிற காரணத்தால்தான், அவருக்கு அது பிடித்தமானதாக மாறுகிறது. மாணவரின் விருப்பமே இதுதான் என்று பின்னால் பெற்றோர் சொல்வதற்குக் காரணம் மாணவர்களிடம் தொடர்ந்து ஊசிபோல ஏற்றப்பட்டதால் மாணவருக்கு அந்தப் படிப்புதான் பிடித்திருக்கிறது.
வேறு எதுவுமே எனக்கு வேண்டாம் என்று சொல்வதற்கு வேறு எதைப் பற்றியும் தெரியாததுதான் காரணம். பத்தாண்டு காலம் மனதிலே ஏற்றப்பட்ட ஒரு விஷயம் திடீரென்று ஒரு மாற்றுப் பாதைக்குச் செல்வது கடினமாகிறது. மாணவரின் இயல்பான கற்கும் திறன், மரபணு, குடும்பப் பின்னணி இவையெல்லாம் சேர்ந்தே ஒருவரை உருவாக்குகின்றன. இந்த அளவுகளை எல்லாம் பார்க்காமல் ஆசையை, விருப்பத்தை மட்டுமே திணித்து வருவதால் குழந்தைக்கு ஒற்றை இலக்காக அதுவே மனதிலே தேங்கிவிடுகிறது. அங்கிருந்து அதை அப்புறப்படுத்த முடிவதற்கு எந்த ஆசிரியராலும் எளிதாக முடிவதில்லை.
அதே நேரத்தில் ஆசிரியருக்கு, இப்படிப்புகளைத் தாண்டி எத்தனை வகையான படிப்புகள் இருக்கின்றன, அதற்குச் சமமான சமூக அந்தஸ்துள்ள படிப்புகள் எவை, அவற்றின் எதிர்கால நிலைமை என்ன என்பதையெல்லாம் எடுத்துச் சொல்கிற அறிவு வேண்டும். இன்றைக்கு நூற்றுக்கணக்கான மிகச் சிறந்த படிப்புகள் இருக்கின்றன. இதைப் பெற்றோருக்கும் புரியவைக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. படிப்பதை மட்டும் உற்சாகமூட்டி, வாசிப்பதைப் பழக்கமாக்கிக்கொண்டே வந்தால் குழந்தைகளின் பல்வேறு பரிமாணங்களைக் காண முடியும். வாய்ப்புகளைப் பற்றிய புரிதல் ஏற்படும். பல்வேறு வாய்ப்புகளில் இருந்து ஒன்றை அல்லது இரண்டைத் தேர்வு செய்து மனநிம்மதியோடு படிக்க முடியும். இதைப் பெற்றோர் உணர வேண்டிய அவசரமான காலம் இது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment