Last Updated : 03 Aug, 2024 05:43 PM

 

Published : 03 Aug 2024 05:43 PM
Last Updated : 03 Aug 2024 05:43 PM

டிஜிட்டல் டைரி 5: நுகர்வோரின் ஆயுதமான சமூக வலைதளம்

மோசமான சேவையால் அதிருப்தி அடையும் வாடிக்கையாளர் இணையத்தில் அல்லது சமூக வலைதளத்தில் இது பற்றிப் புலம்புவது வழக்கம். ஆனால், சர்வதேச விமான பயணி ஒருவர், தனது அதிருப்தியை இணையச் செயல்பாடாக மாற்றியிருக்கிறார். இதற்காக அவர் அமைத்துள்ள இணையதளம் மோசமான சேவை அளிக்கும் விமான நிறுவனங்களுக்குப் பாடம் புகட்டும் வகையில் அமைந்துள்ளது.

மாற்றி யோசித்த விமான பயணி
பீட்டர் லெவல்ஸ் எனும் விமானப் பயணி, ஐரோப்பாவின் லிஸ்பனிலிருந்து பார்சிலோனா சென்றிருக்கிறார். இந்தப் பயணத்தின் முடிவில் அவரது காதலியின் பெட்டி வந்து சேரவில்லை. இதுபற்றி அவர் பயணம் செய்த ஸ்பெயின் நாட்டின் விமான சேவை நிறுவனமான வியுலிங்கிடம் (Vueling) முறையிட்டும், சரியான பதில் கிடைக்கவில்லை, பெட்டியும் கிடைக்கவில்லை.

இந்த மோசமான அனுபவத்தால், பயணிகளின் பெட்டிகளைத் தொலைத்துவிட்டு அலைக்கழிக்கும் விமான சேவை நிறுவனங்களுக்குப் பாடம் புகட்டுவதற்காக ’லக்கேஜ் லூசர்ஸ்’ (https://luggagelosers.com/) எனும் இணையதளம் ஒன்றை தொடங்கினார் பீட்டர். இத்தளத்தில், பயணிகளின் பெட்டிகளைத் தவறவிடும் விமான நிறுவனங்களைப் பட்டியலிடுகிறார். நிகழ் நேர தகவல் அடிப்படையில் இந்தப் பட்டியலை அவர் ’அப்டேட்’ செய்து வருகிறார்.

அதிக எண்ணிக்கையிலான பெட்டிகளைத் தவறவிடும் விமான நிறுவனங்களின் பெயர்களை இப்பட்டியலில் சிவப்பு நிறத்தில் அடையாளப்படுத்தியும், பெட்டிகளைத் தொலைக்காத அல்லது குறைவான எண்ணிக்கையிலான பெட்டிகளைத் தொலைக்கும் நிறுவனங்களின் பெயர்களைப் பச்சை நிறத்தில் அடையாளப்படுத்தியும் வருகிறார் பீட்டர். தொலையும் பெட்டிகளின் எண்ணிக்கை, பயணிகள் அளிக்கும் புகார்களின் எண்ணிக்கை, பெட்டிகள் தொலைவதற்கான சாத்தியக்கூறுகள் போன்ற விவரங்களும் இத்தளத்தில் இடம்பெற்றுள்ளன. உலக நாடுகளின் அடிப்படையிலும் பட்டியல் இடம்பெற்றுள்ளது. இதில், இந்திய விமான நிறுவனங்கள் பெரும்பாலும் சிவப்பு நிறத்தில் உள்ளன. இதனால், பீட்டரின் இந்தப் பட்டியல் விமான சேவை நிறுவனங்களுக்கு ஓர் எச்சரிக்கையாகவும் அமைகிறது.

எல்லாம் சரி, தொலைந்த பெட்டிகள் பற்றிய தகவல் எங்கிருந்து வருகிறது? “பயணிகளிடம் இருந்துதான்” என்கிறார் பீட்டர். ஆம், தொலைந்துபோன பெட்டிகள் தொடர்பாகச் சமூக வலைதளத்தில் பயணிகள் பகிரும் புகார்களின் அடிப்படையில் தகவல்கள் திரட்டப்படுகின்றன. இதற்கென 100 மொழிகளில் சமூக வலைதளங்களில் தகவல்களைச் சேகரிக்கும் ‘பாட்’ மென்பொருளை பீட்டர் உருவாக்கியிருக்கிறார். இதனால், விமானப் பயணிகள் மட்டுமல்ல, பாதிக்கப்பட்டவர் அனைவரையும் ‘சபாஷ்’ போட வைக்கும் இத்தளத்தை உருவாக்கிய பீட்டர், மேலும் புதிய அம்சங்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டிருக்கிறாராம்.

சுவாரசியமான மற்றொரு செய்தி
2009இல், கனடா நாட்டு இசைக்கலைஞர் டேவ் கரோல், விமானப் பயணத்தின்போது தனது கிடார் இசைக்கருவி சேதமானதாக முறையிட்டு நொந்துபோனார். விமானச் சேவை நிறுவனத்திடமிருந்து முறையான பதில் கிடைக்காததால், ‘யுனைடெட் என் கிட்டாரை உடைத்துவிட்டது’ என்கிற தலைப்பில் தனது புகாரை ஒரு பாடலாக்கி, யூடியூப் தளத்தில் பதிவேற்றினார். இந்தப் பாடல் இணையத்தில் வைரலாகி, சம்பந்தப்பட்ட விமானச் சேவை நிறுவனத்தை இறங்கிவர வைத்தது. இச்சம்பவம் டேவ் கரோலைப் பிரபலமாகியதோடு, சமூக வலைதளத்தை வாடிக்கையாளர்கள் எப்படி ஆயுதமாகப் பயன்படுத்தலாம் என்பதற்கான உதாரணமாகவும் அமைந்தது.

இது கரோலின் இணையதளம்: https://www.davecarrollmusic.com/songwriting/united-breaks-guitars/

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x