Published : 20 Jul 2024 05:55 PM
Last Updated : 20 Jul 2024 05:55 PM
சில ஆண்டுகளுக்கு முன்பு ‘ஃபிளாப்பி பேர்ட்’, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ‘வோர்டில்’ வார்த்தை விளையாட்டு வரிசையில், தற்போது ‘ஒன் மில்லியன் செக்பாக்சஸ்’ (One million checkboxes) விளையாட்டு இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. பார்ப்பதற்கு எளிமையான விளையாட்டைப்போல இருந்தாலும், அதை முடிப்பதற்கான வழியில்லாமல் இணையவாசிகளின் நேரத்தைக் கபளீகரம் செய்து பலரது தூக்கத்தையும் பறித்துவிடுகிறது இது.
இந்த விளையாட்டு வெறும் கட்டங்களால் ஆனது. மொத்தம் பத்து லட்சம் கட்டங்கள் உள்ளன. அனைத்து கட்டங்களையும் ‘டிக்’ செய்ய வேண்டும் என்பதுதான் விளையாட்டின் நோக்கமாக இருக்க வேண்டும், அவ்வளவே! ஆனால், கட்டங்களை ‘டிக்’ செய்வது போலவே, ‘டிக்’ஐ நீக்கவும் செய்யலாம். ‘டிக்’ செய்தாலும் சரி, நீக்கினாலும் சரி, அந்தச் செயல் விளையாடும் அனைவருக்கும் பொதுவானது. அதாவது, ஒருவர் ‘டிக்’ செய்த கட்டத்தை, வேறு யாரோ ஒருவர் நீக்கினால் மீண்டும் வெறும் கட்டமாகிவிடும். ஆக, ஒருவர் ‘டிக்’ செய்து கொண்டிருக்கும்போது வேறு சிலர் நீக்கிக் கொண்டே இருந்தால், முதலில் இருந்து தொடங்க வேண்டும். இதனால், இந்த விளையாட்டு முடிவில்லாமல் நீள்கிறது.
விளையாடுவதற்கு சுவாரசியமாக இருந்தாலும், இணையவாசிகளை இரு பிரிவினராக்கி கண்ணுக்குத் தெரியாமல் மோதலிலும் ஈடுபட வைக்கிறது. அமெரிக்க நாளிதழ் ஒன்று வர்ணித்துள்ளதுபோல, இணைய உலகின் மிகவும் அர்த்தமில்லாத விளையாட்டான இந்த விளையாட்டு, இணையவாசிகளை முட்டிக்கொள்ள வைத்துள்ளது.
ஒரு பக்கம் ‘டிக்’ செய்பவர்கள் என்றால், மறுபக்கம் ‘டிக்’ஐ நீக்குபவர்கள். எல்லாம் சரி, பத்து லட்சம் கட்டத்தையும் ‘டிக்’ செய்துவிட்டால் என்னாகும்? இந்தக் கேள்விக்கான பதில் தெரியவில்லை என்கிறார் நோலன் ராய்ல்டி. இவர்தான் இந்த விளையாட்டை உருவாக்கியவர். இந்த விளையாட்டை உருவாக்குவதற்கான எண்ணம் வந்தவுடன், இரண்டே நாட்களில் முழுவதுமாக உருவாக்கியிருக்கிறார். இந்த விளையாட்டை அதிகபட்சம் சில நூறு பேர் விளையாடுவார்கள் என எதிர்பார்த்ததற்கு மாறாக, லட்சக்கணக்கானோர் பங்கேற்பது எதிர்பாரதது என்கிறார் அவர்.
பயனர்கள் இந்த அர்த்தமில்லாத விளையாட்டைப் பல காரணங்களுக்காக விளையாடுவதாகத் தெரிய வந்துள்ளது. ஒரு சிலர் ‘டிக்’ செய்வது நிம்மதி அளிப்பதாகத் தெரிவித்துள்ளனர். இன்னும் சிலர், ‘டிக்’ விளையாட்டு உற்சாகமாக இருப்பதாகக் கூறியுள்ளனர். ஆனால், பெரும்பாலானோர் இந்த வி்ளையாட்டு அதன் எளிமையை மீறி மிகவும் சிக்கலாக இருப்பதால் சொக்கிபோவதாகத் தெரிவித்துள்ளனர்.
பி.கு: ‘ஃபிளாப்பி பேர்ட்’ என்பது சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமான விளையாட்டு. ஒரு பறவையைத் தடைகளின் மீது மோதாமல் பறக்கச் செய்ய வேண்டும். ஒவ்வொரு பிரிவையும் கடந்து செல்லும்போது தடைகள் தீவிரமாகி, ஆட்டம் கடினமாகும். ‘வோர்டில்’ என்பது கொடுக்கப்பட்ட குறிப்புகளைக் கொண்டு சரியான சொல்லை ஊகிக்கும் வார்த்தை விளையாட்டு. நாள்தோறும் ஒரு சொல்லும் அதற்கான குறிப்புகளும் என இணையத்தைக் கலக்கிய விளையாட்டு.
முந்தைய அத்தியாயம்: டிஜிட்டல் டைரி 2: தமிழுக்கும் ‘த்ரெட்ஸ் லோகோ’வுக்கும் தொடர்பு உண்டா?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment