Last Updated : 30 Jun, 2024 08:17 AM

2  

Published : 30 Jun 2024 08:17 AM
Last Updated : 30 Jun 2024 08:17 AM

அமெரிக்காவில் ரூ.3 கோடி உதவித்தொகை: சென்னை மாணவி சாதனை

நெடுஞ்செழியன்

வெளிநாட்டில் உயர்கல்வி படிக்கப் பல லட்சங்கள் செலவு செய்ய வேண்டுமா? பெரும்பாலும் செலவு செய்ய வேண்டும் என்கிற சூழல்தான் என்றாலும் திறமையும் முயற்சியும் இருந்தால் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் உதவித்தொகையுடன் உயர்கல்வி படிப்பது சாத்தியமாகலாம். திருச்சி அண்ணா பல்கலைக்கழகம் பிஐடி வளாகத்தில் இளங்கலை படித்துக்கொண்டிருந்தபோதே அமெரிக்காவின் இந்தியானா பல்கலைக்கழகத்தில் நேரடி முனைவர் பட்டத்துக்கான படிப்பில் சேர ரூ.3 கோடி உதவித்தொகையைப் பெற்று அமெரிக்கா பயணிக்க உள்ளார் சென்னையைச் சேர்ந்த நித்யஸ்ரீ.

கனவு நனவானது எப்படி?

பி.டெக். படிப்பு தொடங்கியபோதே நேரடி முனைவர் படிப்பில் சேரத் தேவையான தகுதியை வளர்க்க ஆயத்தமானார் நித்யஸ்ரீ. ‘டெக்னோகிராட்ஸ் இந்தியா காலேஜ் ஃபைண்டர்’ என்கிற அமைப்பின் வழிகாட்டுதலுடன் பி.டெக் படிப்பின்போது பயிற்சிகளில் சேர்வது, இணையவழிச் சான்றிதழ் படிப்புகளில் தேர்ச்சி பெறுவது, படிப்பைத் தாண்டி விளையாட்டு, நிர்வாகம் போன்றவற்றில் திறன்களை வளர்த்துக்கொள்வது எனத் தன்னைத் தகுதிப்படுத்திக்கொண்டார்.

முதுகலைப் பட்டப்படிப்பு இல்லாமல் நேரடி முனைவர் பட்டம் படிப்பதில் உள்ள சாதக பாதகங்கள் என்ன என்கிற கேள்வியை நித்யஸ்ரீயின் முன்வைத்தோம்.

“நேரடி முனைவர் பட்டத்துக்கான படிப்பைப் பற்றிப் பலருக்குத் தெரிவதில்லை. இளங்கலை படிக்கும்போதே படிப்பிலும் கூடுதல் திறன்களை மெருகேற்றிக்கொள்வதிலும் கவனம் செலுத்தினால் நேரடி முனைவர் படிப்புக்கான வாய்ப்புகளைப் பெறலாம். இது சவாலான காரியம்தான் என்றாலும் முதுகலைப் படிப்பை முடிக்க ஆகும் காலத்தை நேரடி முனைவர் பட்டத்துக்காகப் பயன்படுத்தலாம் என்பதால் இரண்டு ஆண்டுகளை மிச்சப்படுத்தலாம். ஆராய்ச்சிப் படிப்பின்போது படிப்பு, செயல்திறன் என இரண்டையும் வளர்த்துக்கொள்ள முடியும். இது நல்ல வேலைவாய்ப்பைப் பெற்றுத் தரும். ஆனால், முதுகலைப் படிப்பைத் தவிர்த்துச் செல்வதால், ஆராய்ச்சிப் படிப்பு சற்று கடினமானதாகத் தோன்றலாம். வழக்கத்தைவிட இரு மடங்கு கூடுதலாக உழைக்க வேண்டியது அவசியம்” என்றார்.

என்ன செய்ய வேண்டும்?

நித்யஸ்ரீயின் படிப்புக்கான செலவுடன் விரிவான சுகாதாரக் காப்பீட்டையும் இந்தியானா பல்கலைக்கழகம் வழங்குகிறது. இது மட்டுமின்றி படிப்பின்போது வழங்கப்படும் உதவித்தொகையைப் பெறவும் அவர் தேர்ச்சி பெற்றுள்ளார்.

“வலுவான பொருளாதார பின்னணி இல்லாத மாணவர்களுக்கு இது போன்ற வாய்ப்பு வாழ்க்கையையே மாற்றிவிடும். சர்வதேச அளவில் வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றைச் சரியான திட்டமிடலோடு கைப்பற்ற வேண்டும் என்கிறார்” ‘டெக்னோகிராட்ஸ் இந்தியா காலேஜ் ஃபைண்டர்’ அமைப்பின் நிறுவனர், கல்வியாளர் நெடுஞ்செழியன்.

“அதிகம் செலவு செய்யாமல் திறமையை வைத்து மட்டுமே பல முன்னணி வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் சேர முடியும். இளங்கலைப் படிப்பு முடியும் தறுவாயில் அடுத்து என்ன என்று யோசனை செய்யாமல் படிப்பில் சேர்ந்தது முதலே இலக்கை நிர்ணயித்து, அதை நோக்கிச் செயல்பட வேண்டும். கல்லூரிப் படிப்பைத் தவிர ஒரு மாணவர், தனது புரொஃபைலைச் சிறப்பாகக் கட்டமைக்க வேண்டும். தேர்வு செய்திருக்கும் துறைக்கு ஏற்பவும், அதைச் சார்ந்து இருக்கக்கூடிய மற்ற திறன்களையும் கற்று அனுபவம் பெறுவது நல்லது. உள்ளூரிலும் வெளிநாடுகளிலும் இன்டர்ன்ஷிப் மேற்கொள்ள வேண்டும். படிப்பு, கள அனுபவம் என இரண்டும் பெற்ற மாணவர்கள் போட்டி மிகுந்த இக்காலத்தில் தனித்துவமாக அடையாளம் காணப்படுவார்கள்.

பல வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில் மாணவர்களின் மொத்தக் கல்விச் செலவையும் ஏற்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இது போன்ற வாய்ப்புகளை வழங்கும் பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களை இணையத்தில் தேடி ஆராய்ந்து மாணவர்கள் அதற்கு விண்ணப்பிக்க வேண்டும். முதன்மைக் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான திறன்களைப் படிப்படியாக வளர்த்துக்கொள்ள வேண்டும். பொருளாதாரத்தில் நலிந்த குடும்பத்தைச் சேர்ந்த மாணவருக்குக் கிடைக்கும் இந்த வாய்ப்பால் அவர் எதிர்காலம் சிறப்பானதாக மாறும். இது கல்வியால் மட்டுமே சாத்தியம். திறமையும் தேடலும் கடின உழைப்பும் சரியான திட்டமிடலும் இருந்தால் நிச்சயமாக வெளிநாட்டில் கல்வி கற்கலாம்” என்கிறார் நெடுஞ்செழியன்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x