Published : 28 Oct 2017 11:49 AM
Last Updated : 28 Oct 2017 11:49 AM
உ
டல் ஆரோக்கியத்தையும் ஆயுளையும் அதிகரிப்பதற்கான மந்திரமாக எட்டு மணிநேர தூக்கம் அமைந்திருக்கிறது என்று சொல்கிறார் தூக்க அறிவியல் நிபுணர்கள். ஆனால், நம்மில் பெரும்பாலோனோருக்கு எட்டு மணி நேரத் தூக்கம் என்பது கனவாக மாறியிருக்கிறது. மக்களின் அவசரகதியான வாழ்க்கை முறை, அதிகரித்துவரும் மனஅழுத்தம், சமூக பொருளாதாரக் காரணிகளில் சமீபத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களால் இன்று பலரும் தூக்கத்தைத் தொலைத்திருக்கிறார்கள்.
இந்த நேரத்தில், தூக்கத்தை மேம்படுவதற்கான தேவை அதிகரித்திருக்கிறது. படுக்கையறையின் வடிவமைப்பில் சில முக்கிய மாற்றங்களைச் செய்வதினால் தூக்கத்தை மேம்படுத்த முடியும் என்று சொல்கிறார்கள் உள்அலங்கார வடிவமைப்பாளர்கள். நிம்மதியான தூக்கத்துக்கு வழிவகுக்கும் வடிவமைப்புக்கான சில ஆலோசனைகள்...
ஆழ்ந்த உறக்கத்தை வரவழைப்பதற்கு வண்ணங்களின் ஆற்றலைப் பயன்படுத்துவது ஒரு சிறந்த வழி. இந்த ஆற்றல் சாம்பல் நிறத்துக்கு இருக்கிறது. அதனால் இந்தச் சாம்பல் நிறத்துடன், பின்னணியில் மஞ்சள், இளஞ்சிவப்பு போன்ற நிறங்களையும் படுக்கையறைக்குப் பயன்படுத்தலாம். இதில் நீல நிறத்தைத் தவிர்த்துவிடுவது நல்லது.
பெரியளவிளான படுக்கைகள்தான் தூங்குவதற்கு வசதியானவை. அதனால் சிறிய படுக்கைகளைத் தவிர்த்துவிடுவது நல்லது. படுக்கையில் ஏதாவது வசதி குறைவாக இருந்தால், மெத்தை அல்லது கட்டில் என எதில் பிரச்சினை என்பதைக் கண்டுபிடித்து உடனடியாக அதைச் சரிசெய்துவிடுவது நல்லது.
படுக்கையறையில் தொலைக்காட்சி பெட்டியைப் பொருத்துவதை முற்றிலும் தவிர்த்துவிடுவது நல்லது. தூங்குவதற்குமுன், தொலைக்காட்சியைப் பார்ப்பதால், தூக்கத்துக்குத் தேவைப்படும் மெலடோனின் ஹார்மோன் சுரப்பது குறையும். ஒருவேளை, படுக்கையறையில் தொலைக்காட்சி பொருத்தவேண்டிய தேவையிருந்தால், தூங்குவதற்கு அரைமணி நேரத்துக்குமுன் தொலைக்காட்சிப் பார்ப்பதை நிறுத்திவிடுங்கள்.
படுக்கையறையில் இரவில் கைப்பேசிக்கு ‘சார்ஜ்’ போடுவதைத் தவிர்ப்பது நல்லது. இதனால் பாதி இரவில் எழுந்து கைப்பேசிக்கு ‘சார்ஜ்’ போடும் நிறுத்தும் பழக்கம் ஏற்படாமல் தடுக்கலாம். அத்துடன், படுக்கையறையில் கைப்பேசி ‘அலார்ம்’க்குப் பதிலாக, ‘கடிகார அலார்ம்’ பயன்படுத்துவது சிறந்தது.
படுக்கையறையில் இரவில் தேவையில்லாத வெளிச்சம் வராமல் தடுப்பதற்குத் திரைச்சீலைகளைப் பயன்படுத்தலாம். இதற்கு ‘பிளாக்அவுட்’ (Blackout) என்ற துணியில் தயாரிக்கப்படும் திரைச்சீலைகள் பொருத்தமாக இருக்கும். இந்த வெளிச்சத்தைக் கட்டுப்படுத்தும் திரைச்சீலைகள் தற்போது பல வண்ணங்களிலும் கிடைக்கின்றன.
தூங்குவதற்கு முன், குளிப்பது அமைதியான தூக்கத்துக்கு வழிவகுக்கும். தூக்கத்துக்கும் குளியலுக்கும் இருக்கும் இந்தத் தொடர்பால் குளியலைறையையும் மற்ற அறைகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்துடன் வடிவமைக்க வேண்டும். குளியலறையில் ஏதாவது ஒரு கலைநயமிக்க படைப்பை அமைக்கலாம். அது பொம்மையாகவோ, ஒளிப்படமாகவோ ஓவியமாகவோ என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
படுக்கையறையை அலுவலகப் பணிகளுக்காகவும் பயன்படுத்துகிறீர்கள் என்றால், அதற்காக அறையின் மூலையில் ஒரு தனி மேசை அமைத்துவிடுவது நல்லது. அந்த மேசையில் கணினி அல்லது மடிக் கணினியை வைத்து பயன்படுத்தலாம். கதவுகளுடன் இருக்கும் மேசைகளை வாங்குவது இதற்குப் பொருத்தமாக இருக்கும். பயன்படுத்திய பிறகு, அலுவலக மேசையை மூடிவைக்க உதவும்.
தினமும் ஒரே நேரத்தில் தூங்குவது ஆழ்ந்த தூக்கம் கிடைப்பதற்கு உதவும். தொலைக்காட்சிக்கு மேல் ஒரு பெரிய கடிகாரத்தைப் பொருத்துவது உங்களுக்குத் தூங்குவதற்குச் சரியான நேரத்தைக் கடைபிடிக்க உதவும்.
படுக்கையறையில் நிறைய அலங்கார பொருட்களை வைக்க வேண்டிய தேவையில்லை. கூடுமானவரை, படுக்கையறையில் குறைவான பொருட்களைப் பயன்படுத்துவதுதான் சிறந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT