Published : 21 Oct 2017 10:17 AM
Last Updated : 21 Oct 2017 10:17 AM

மாற்றுச் செங்கலுக்கு மாறலாம்

 

ன்றைக்குச் செங்கலுக்கு மாற்றாக, கான்கிரீட் சாலிட் ப்ளாக், கான்கிரீட் கேவிட்டி ப்ளாக், ப்ளை ஆஷ் செங்கல், சாய்ல் சிமெண்ட் ப்ளாக் உள்ளிட்ட பல பொருட்கள் மாற்றுச் செங்கற்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றைத் தயாரிக்கும் தொழில்நுட்பமும் இவற்றுக்கான மூலப் பொருட்களும் எளிதில் கிடைக்கக்கூடியதே. அனல் மின் நிலையங்களிலிருந்து கிடைக்கும் கழிவுப் பொருட்களிலிருந்தே இவற்றைத் தயாரிக்க முடியும். இந்த மாற்றுச் செங்கற்கள் சுற்றுச்சூழலுக்கும் கேடுவிளைவிக்காதவை.

இத்தனை அனுகூலங்கள் இருப்பினும் அதிகமாக மாற்றுச் செங்கற்கள் பயன்படுத்தப்படாததன் காரணம் நமது மனநிலையே. மாற்றுச் செங்கல் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தாலேயே நாம் அவற்றைப் பயன்படுத்த தயங்குகிறோம். இந்த மனநிலையை மாற்ற அரசு முன்வர வேண்டும். அரசுக் கட்டிடங்களின் கட்டுமானத்துக்கு மாற்றுச் செங்கற்களைப் பயன்படுத்தலாம். மாற்றுச் செங்கல் உற்பத்தியாளர்களுக்கு மானியம் வழங்குவது குறித்து அரசு பரிசீலிக்கலாம்.

இதே போல் செங்கல் உற்பத்தியாளர்கள் ப்ளை ஆஷ் செங்கற்களை உற்பத்தி செய்ய முன்வரும்போது அவர்களுக்கும் மானியம் வழங்க ஏற்பாடு செய்யலாம். இத்தகைய நடவடிக்கைகள் ப்ளை ஆஷ் செங்கல் உற்பத்தியாளர்களுக்கு உத்வேகம் அளிக்கும், அவர்களின் விற்பனை அதிகரிக்கவும் வாய்ப்பாக அமையும். ஏனெனில், ஏற்கெனவே பில்டிங் ப்ளாக்ஸ் உருவாக்குவதில் செங்கல் உற்பத்தியாளர்களுக்கு முன் அனுபவமும் அவற்றை உருவாக்கத் தேவையான உள்கட்டமைப்பும் உள்ளன.

செங்கல் தயாரிப்புத் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு மாற்றுத் தொழில்வாய்ப்பாகவும் இது அமையும். மழைக்காலங்களிலும் செங்கல் உற்பத்தி அதிகமாக இராத காலங்களிலும் மாற்றுச் செங்கல் உற்பத்தியில் அவர்கள் ஈடுபட இயலும். சுற்றுச்சூழல் சார்ந்த விழிப்புணர்வு விரைவில் அதிகரித்து செங்கல் உற்பத்திக்கு வளமிக்க விவசாய நிலத்தைப் பாழ்படுத்தக் கூடாது என்பது விதியாக அமலாக்கப்படலாம். அப்போது மாற்றுச் செங்கற்களே கைகொடுக்கக்கூடும். மேலும், செமி ஸ்கில்டு தொழிலாளர்கள் எனச் சொல்லப்படும் குறைந்த திறன் தொழிலாளர்களைக் கொண்டே மாற்றுச் செங்கற்களைத் தயாரிக்கலாம். இயந்திரமயமாக்கலை அறிமுகப்படுத்தி மாற்றுச் செங்கல் உற்பத்தியைக் கூட்டலாம்.

பெங்களூரு, சென்னை போன்ற பெரு நகரங்களில் கான்கிரீட் கேவிட்டி ப்ளாக்குகளும் கான்கிரீட் சாலிட் ப்ளாக்குகளும் அதிகமாகப் பயன்படுகின்றன. இத்தகைய பெரு நகரங்களில் செங்கற்களின் விலை தொடர்ந்து அதிகரிப்பதால் கட்டுநர்கள் கான்கிரீட் ப்ளாக்குகளை அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள். மேலும், இத்தகு நகரங்களில் செங்கல் தயாரிக்கத் தேவைப்படும் தரமான களிமண் கிடைப்பதில்லை என்பதும் ஒரு காரணம். கல் குவாரிகளில் கிடைக்கும் கழிவான கற்களே கான்கிரீட் ப்ளாக்குகளின் தயாரிப்புக்குப் போதுமானவை.

கட்டுமானத் துறையில் ஈடுபடும் பொறியாளர்களும் கட்டுநர்களும் ஆலோசகர்களும் மாற்றுச் செங்கற்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும். ஏற்கெனவே கான்கிரீட் ப்ளாக்குகளை காம்பவுண்ட் சுவர்களுக்கும் தற்காலிகக் கட்டிடங்களுக்கும் பயன்படுத்தும் போக்கு பரவலாக உள்ளது என்பதை இந்த இடத்தில் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

சில தொழிற்சாலைக் கட்டிடங்களுக்கும் சிறிய அளவிலான கட்டிடங்களுக்கும் இத்தகைய கான்கிரீட் ப்ளாக்குகளை பயன்படுத்துகிறார்கள். ஆனால், அடுக்குமாடிக் குடியிருப்புகளிலும் வணிக வளாகங்களின் கட்டுமானத்திலும் அதிக எடையைத் தாங்கும் தேவையில்லாத இடங்களிலும் கான்கிரீட் ப்ளாக்குகளின் பயன்பாட்டை அதிகரிக்கச் செய்ய வேண்டும்.

நடைமுறை யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு மாற்றுச் செங்கற்களைப் பயன்படுத்த அனைவரும் முன்வர வேண்டும். ஏனெனில், இவை சுற்றுச்சூழலுக்கும் உகந்தவை. கட்டுமானச் செலவும் குறையும். வழக்கமான செங்கற்களாலான கட்டிடமே உறுதியானவை என்னும் பழமைவாத எண்ணத்திலிருந்து விடுபட்டு எங்கெல்லாம் மாற்றுச் செங்கற்களைப் பயன்படுத்த இயலுமோ அங்கெல்லாம் அவற்றைப் பயன்படுத்தும் புதுமை எண்ணம் அனைவரிடம் உருவாக வேண்டும். அரசும் மாற்றுச் செங்கற்களைப் பயன்படுத்துவதை ஊக்கவிக்க வரிச் சலுகைகள் போன்றவற்றை அறிமுகப்படுத்துவது நல்லது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x