Published : 21 Oct 2017 10:17 AM
Last Updated : 21 Oct 2017 10:17 AM

கட்டிடம் சொல்லும் கதைகள் 04: இடிக்கப்பட்ட ‘தேசம்!’

ந்தியா சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளாகிவிட்டன. இத்தனை வருடங்களை நாம் எப்படியெல்லாம் கடந்து வந்திருக்கிறோம் என்பதைத் திரும்பிப் பார்ப்பதற்கு, நம்மிடையே இருக்கும் மிகப் பெரிய கண்ணாடி… நம் நாட்டில் உள்ள கட்டிடங்கள்தாம்!

அந்தக் கட்டிடங்களை இடிப்பது, நமது வரலாற்றை அழிப்பதற்குச் சமம். அந்த வரலாற்றின் முக்கியமான ஒரு பக்கம் சமீபத்தில் கிழித்து எறியப்பட்டிருக்கிறது. அதுவும் தலைநகர் டெல்லியில்!

வெள்ளிவிழாக் கட்டிடம்

டெல்லியில் உள்ளது ‘பிரகதி மைதான்’. இந்த இந்திச் சொற்களைத் தமிழில் மொழிபெயர்த்தால், ‘முன்னேற்ற நிலம்’ என்று பொருள்படும். ஆம், இங்குதான் சர்வதேச அளவிலான வர்த்தகக் கண்காட்சிகள் பல ஆண்டுகாலமாக நடத்தப்பட்டு வந்தன.

இங்குதான் அமைந்திருந்தது ‘ஹால் ஆஃப் நேஷனஸ்’, ‘ஹால் ஆஃப் இண்டஸ்ட்ரீஸ்’ மற்றும் ‘நேரு பெவிலியன்’ என்ற மூன்று கட்டிடங்கள் அமைந்திருந்தன. நாடு சுதந்திரமடைந்து 1972-ம் ஆண்டில் வெள்ளி விழாவைக் கொண்டாடியது. அதன் நினைவாக ‘ஆசியா 72’ எனும் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி நடைபெற்றது. அந்தக் கண்காட்சிக்காகக் கட்டப்பட்டதுதான் இந்த நிரந்தர வர்த்தக அரங்கு. ‘ஹால் ஆஃப் நேஷன்ஸ்’ என்று அழைக்கப்படும் இந்தக் கட்டிடத்தை, அன்றைய பிரதமர் இந்திரா காந்தி, அந்த வருடம் நவம்பர் மாதம் 3-ம் தேதி திறந்துவைத்தார்.

அந்தக் கண்காட்சியில் சுமார் 47 நாடுகளைச் சேர்ந்த வர்த்தக நிறுவனங்களும் 55 உள்நாட்டு வர்த்தக நிறுவனங்களும் கலந்துகொண்டன.

தூண்கள் இல்லா கட்டிடம்

இந்தியாவில், தூண்கள் இல்லாமல் கட்டப்பட்ட முதல் கட்டிடம் இதுதான். இதை வடிவமைத்துக் கட்டியவர் ராஜ் ரேவால் என்ற பொறியாளர். டெல்லியில் கட்டிடக்கலை பயின்ற ராஜ் ரேவால் இந்தக் கட்டிடம் பற்றிக் கூறும்போது, “சுதந்திர இந்தியாவில், மிகக் குறைந்த வசதிகளைக் கொண்டு, இந்தியத்துவமான பாணியில், அன்றைய இளைஞர்கள் செய்த சாதனை, இந்தக் கட்டிடம்” என்கிறார். இப்படி ஒரு கட்டிடத்தைக் கட்டியதற்காக, 1989-ம் ஆண்டு இவருக்கு ‘இந்தியக் கட்டிடக்கலைஞர்கள் நிறுவனம்’ தங்கப் பதக்கம் வழங்கிப் பாராட்டியது.

நான்முகி வடிவம் (டெட்ராஹெட்ரன்), முக்கோண வடிவம், அறுகோண வடிவம் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து இந்தக் கட்டிடம் கட்டப்பட்டது. இது முப்பரிமாண ‘ஜாலி’க்களை (துளை கொண்ட ஜன்னல் போன்ற வடிவங்கள்) உடைய கட்டிடமாக விளங்கியது. இந்த ‘ஜாலி’க்கள் வெப்பம் மிகுந்த சூரியக் கதிர்கள் உள்ளே வரவிடாமல் தடுக்கும் அதே நேரத்தில், நல்ல காற்றோட்டத்தையும் தரும்.

இந்தக் கட்டிடம், ‘ஸ்பேஸ் ஃப்ரேம்’ வடிவமைப்பு முறையில் கட்டப்பட்டுள்ளது. அதாவது, தூண், சுவர்கள் போன்ற எந்த அம்சமும் இல்லாமல், பரந்த வெளியாக, குறைந்த அளவு கட்டுமானப் பொருட்களைக் கொண்டு கட்டப்பட்ட ஒரு கட்டிடமாக இது திகழ்ந்தது.

எந்த ஒரு தடுப்புச் சுவர், தூண்கள் இன்றி, 246 X 246 அடி நீள, அகலத்துடன் பரந்த உள் அரங்கை இந்தக் கட்டிடம் கொண்டுள்ளது. தரையிலிருந்து 81 அடி உயரத்தில் கூரை அமைந்துள்ளது. இதனால் புத்தகக் கண்காட்சி முதல், புல்டோசர் கண்காட்சி வரை எல்லா வகையான வர்த்தகக் கண்காட்சிகளையும் இங்கு நடத்த முடிகிற தன்மையை, ‘ஹால் ஆஃப் நேஷன்ஸ்’ பெற்றிருந்தது.

இந்தக் கட்டிடம் கட்டப்பட்ட நேரத்தில், நம் நாட்டில் அவ்வளவாக இரும்பு கையிருப்பு இருக்கவில்லை. எனவே, ‘ரீஇன்ஃபோர்ஸ்ட் சிமெண்ட்’ மூலம் கட்டப்பட்டது. இரும்பால் கட்டப்படும் கட்டிடங்களின் கட்டுமானப் பணிகள் முடிவடைய மிக நீண்ட காலம் பிடிக்கும் என்ற நிலையில், மேற்கண்ட கான்கிரீட் முறையில், உள்நாட்டுப் பொறியாளர்கள், பணியாளர்களைக் கொண்டு இரண்டே ஆண்டுகளில் கட்டிமுடிக்கப்பட்டு, சாதனை படைத்திருக்கிறது.

வயதை வைத்துத்தான் வரலாறா?

மத்திய அரசால் இன்று பிரசாரம் செய்யப்படும் ‘மேக் இன் இந்தியா’ கருத்தாக்கத்துக்கு, முதல் உதாரணமாகத் திகழ்ந்தது இந்தக் கட்டிடம். ஆனால், அது இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தரைமட்டமாக்கப்பட்டது.

இடிக்கப்பட்டதற்குச் சொல்லப்பட்ட காரணம், இன்றைய தேவைக்கு ஏற்ப நவீன வர்த்தக அரங்கைக் கட்ட, மத்திய அரசு விரும்புகிறதாம். ‘அதற்காக இப்படி வரலாற்றுச் சிறப்புமிக்கக் கட்டிடத்தை இடிக்கலாமா?’ என்று கேட்டால், ‘சுமார் 60 வயதான கட்டிடங்களை மட்டுமே பாரம்பரியக் கட்டிடமாகக் கருதி பாதுகாக்க வேண்டும். ஆனால், இந்தக் கட்டிடத்தின் வயதோ வெறும் 40 தான்’ என்கிறது அரசு. அப்படியெனில், வயதை வைத்துத்தான் வரலாறா? புதிய சிந்தனைகளும் புதிய முயற்சிகளும் வரலாறாக மாறுவதற்குத் தகுதி படைத்தவை இல்லையா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x