Last Updated : 23 Sep, 2017 10:42 AM

 

Published : 23 Sep 2017 10:42 AM
Last Updated : 23 Sep 2017 10:42 AM

புறநகர்ப் பகுதிகளின் புலி பாய்ச்சல்...

மிழகத்தின் ரியல் எஸ்டேட் தலைநகரமாக சென்னை விளங்கிக்கொண்டிருக்கிறது. சென்னையின் புறநகர்ப் பகுதிகள் கண்ட விஸ்வரூப வளர்ச்சியே சென்னையின் முகத்தை மாற்றியிருக்கிறது. சென்னையைப் போலவே தமிழகத்தின் பிற நகரங்களில் உள்ள புறநகர்ப் பகுதிகளும் இப்போது ரியல் எஸ்டேட்டில் பாய்ச்சல் நடையைப் போட ஆரம்பித்திருக்கின்றன.

கோவை

சென்னைக்கு அடுத்தபடியாக ரியல் எஸ்டேட் துறையில் மிக வேகமான முன்னேற்றம் கண்டு வருவது கோவை நகரம் என்பது கட்டுமானத் துறையைச் சேர்ந்தவர்களின் கருத்து. கோவை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் தொடர்ந்து புதிது புதிதாக வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. முதலீட்டுக்கான இலக்குகள் அதிகம் இருப்பதாகச் சொல்லப்படும் நகரங்களில் கோவையைத்தான் கைகாட்டுகின்றனர் ரியல் எஸ்டேட் துறையினர். குறிப்பாக, கோவை - அவிநாசி சாலையை ஒட்டிய புறநகர்ப் பகுதிகள் கடந்த 10 ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியிருக்கின்றன. ஒரு காலத்தில் பஞ்சாலைகள் மட்டுமே இப்பகுதிகளில் இருந்த காலம் மாறி, தற்போது பல தொழில் நிறுவனங்களும் இந்தப் பகுதியில் முதலீடு செய்துள்ளன. இதன் காரணமாக நிலத்தில் முதலீடு செய்ய பலரும் ஆர்வம் காட்டுகின்றனர்.

புதிதாகக் கட்டப்படும் ஃப்ளாட்களும், கட்டுமானப் பணி நிறைவடைவதற்கு முன்பாகவே, விற்பனையாகிவிடுகின்றன. கோவையின் புறநகர் பகுதியான அவிநாசியில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் வளர்ச்சிக்கு ஏற்ப ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சியும் மாறி வருகிறது என்கின்றனர் ரியல் எஸ்டேட் துறையினர். இங்கே வாங்கக்கூடிய அளவில் நிலத்தின் மதிப்பு குறைவாக இருப்பதால், தனி வீடுகள் கட்டித் தருவதில் கட்டுமான நிறுவனங்களும் ஆர்வம் காட்டி வருகின்றன.

திருச்சி

கோவைக்கு அடுத்தபடியாக, ரியல் எஸ்டேட் முதலீட்டாளர்களால் அதிகம் விரும்பப்படும் நகரம் திருச்சி. தமிழகத்தின் மத்திய பகுதியில் திருச்சி இருப்பதைத் தாண்டி அண்மைக்காலமாக முன்னேற்றம் கண்டு வரும் திருச்சி - கரூர் சாலையை வைத்து ரியல் எஸ்டேட் முன்னேற்றம் கண்டுள்ளதாக இப்பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் துறையினர் சொல்கின்றனர். இந்தச் சாலையை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலத்தின் மதிப்பும் சற்று அதிகரித்திருக்கிறது. இதேபோல திருச்சியின் புறநகர்ப் பகுதிகளான நவல்பட்டும், காட்டூரும் தொடர்ந்து ரியல் எஸ்டேட் துறையில் முன்னேற்றம் கண்டு வருகின்றன. முன்பைவிட திருச்சியில் பல தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது கிளைகளை திறந்துள்ளன. இதுவும் ரியல் எஸ்டேட் துறையில் திருச்சியின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறது.

சேலம்

சேலத்தில் உள்ள புறநகர்ப் பகுதிகளில்சேலம்-ஏற்காடு இடையிலான பகுதிகளில் முதலீடு செய்வதில்தான் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன. ஏற்காடு மலைவாசஸ்தலம் தொடங்கும் பகுதியிலும் அதையொட்டிய சாலைகளிலும் வீட்டு மனைகளாக அதிகரித்திருப்பதை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இந்தப் பகுதிகளிலும் கோடையில் குளுகுளு சூழல் நிலவும் ஏற்காடு மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில், சொகுசு பங்களா வாங்க வசதி படைத்தவர்கள் ஆர்வம் காட்டுவதாக இந்தப் பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் முதலீட்டாளர்கள் கூறுகின்றனர். சேலம் - ஏற்காடு சாலையையொட்டிய அடுத்த சில பகுதிகள் ரியல் எஸ்டேட் துறையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை

இந்த நகரங்கள் மட்டுமல்லாமல், அண்மைக்காலமாக சென்னை புறநகர்ப் பகுதிகளை ஒன்றிணைக்கும் வெளிவட்டச் சாலை (Outer Ring Road) அமைந்துள்ள சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் ரியல் எஸ்டேட் துறையினரின் கவனம் குவிந்துள்ளது. தென் சென்னையில் உள்ள வண்டலூரை வடசென்னையின் மீஞ்சூர் பகுதியுடன் இணைக்கும் இந்தச் சாலையால் ரியல் எஸ்டேட் துறையினர் மத்தியில் இந்தப் பகுதிக்கு முக்கியத்துவம் ஏற்பட்டுள்ளது. சென்னை மாநகருக்கு வெளியே, வளர்ச்சிப் பாதையாக இருக்கப்போகும் இந்த 62 கிலோ மீட்டர் நீள சாலை, ஏழு முக்கிய ரேடியல் சாலைகளோடு இணைந்துள்ளது.

பெங்களூரு, தமிழகத்தின் தென் மாவட்டங்கள், கொல்கத்தா போன்ற நகரங்களுக்குச் செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளுக்கும் இந்த வெளிவட்டச் சாலை வழியாக செல்ல முடியும் என்பதால், இந்தச் சாலை செல்லும் வழித்தடத்தில் உள்ள காலியிடங்கள் வீட்டு மனைகளாக மாறி வருகின்றன. சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் வீடுகளின் தேவை அதிகரித்து வருவதால், இனி இந்தப் பகுதிகளும் கவனம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த சில ஆண்டுகளில் வெளி வட்டச் சாலைக்கு அருகே மேற்கொள்ளப்படும் ரியல் எஸ்டேட் முதலீடுகள் அதிகரிக்கவும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x