Published : 16 Sep 2017 11:31 AM
Last Updated : 16 Sep 2017 11:31 AM
இ
ந்தியாவின் முன்னோடி பொறியாளரான விஸ்வேஸ்வரய்யா ஆங்கிலேய ஆட்சியில் பொதுப்பணித் துறையில் பணியாற்றியவர். அணைக்கட்டுத் தொழில்நுட்பத்தின் விற்பன்னரான இவர் தானியங்கி மதகு தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்தவர். இந்தத் தொழில்நுட்பம் முதன்முதலாக புனேயில் கடக்வசல அணைக்கட்டில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாது நாட்டின் பல்வேறு அணைக்கட்டுகளின் பின்னால் இவரது உழைப்பு உள்ளது. அவரது பங்கைக் கவுரவிக்கும் வகையில் அவரது பிறந்த தினமான செப்டம்பர் 15 இந்திய அரசால் பொறியாளர் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தப் பொறியாளர் தினத்தை ஒட்டி இந்தியாவின் முக்கியமான பொறியாளர்கள் குறித்த ஒளிப்படத் தொகுப்பு:
ஜான் பென்னி குயிக்
இங்கிலாந்தைச் சேர்ந்த இவர் இந்தியாவில் இங்கிலாந்து ராணுவப் பொறியாளராகப் பணியாற்றியவர். பிறகு சென்னை மாகாணப் பொதுப்பணித் துறைப் பொறியாளராக நியமிக்கப்பட்டார். முல்லைப் பெரியாறு அணை கட்டியதன் மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய பகுதிகளுக்கான நீர்ப்பாசனத்துக்கு வழிவகை செய்தார். ஆங்கிலேயே அரசின் நிதி முதலீட்டால் கட்டப்பட்ட அணை வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட பிறகு தன் சொந்தப் பணத்தால் இப்போதுள்ள அணையைக் கட்டினார். இவர் தேனிப் பகுதி மக்களால் தெய்வமாக வழிபடப்படுவதாகச் சொல்லப்படுகிறது.
ஹென்றி இர்வின்
இந்தோ-சரசினிக் கட்டிடக் கலையில் விற்பன்னரான இவர் இங்கிலாந்து ஆட்சிக் காலத்தில் இந்தியப் பொதுப்பணித் துறைப் பொறியாளராகப் பணியாற்றியவர். சென்னைச் சட்டக் கல்லூரிக் கட்டிடம், சென்னை அருங்காட்சியக் கட்டிடம், சென்னை செண்ட்ரல் ரயில் நிலையம் உள்ளிட்ட பல கட்டிடங்களைக் கட்டிய பெருமை கொண்டவர்.
லெ காபூசியே
உலகப் புகழ்பெற்றக் கட்டிடக் கலைஞரான இவர், பிரான்ஸைச் சேர்ந்தவர். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு பஞ்சாப் மாநிலத்துக்கு ஒரு தலைநகரம் அமைக்க முடிவெடுக்கப்பட்டது. அதன்படி ஜவாஹர்லால் நேரு அழைப்பின் பேரில் தன் குழுவினருடன் காபூசியே இந்தியா வந்து இந்த நகரத்தை உருவாக்கினார்.
பி.வி.தோஷி
பி.வி.தோஷி,இந்தியாவின் புகழ்பெற்ற கட்டிடக் கலைஞர். உலகப் புகழ்பெற்ற கட்டிடவியல் அறிஞர் லெ காபூசியேவிடம் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் குறைந்த வருமானத்தினருக்கான வீடுகளைக் கட்டிக் கொடுத்துள்ளார். ஆரண்யா ஹவுஸ்சிங் என அழைக்கப்படும் இந்த வீட்டுக் குடியிருப்புத் திட்டம் ஒரு முன்மாதிரித் திட்டமாகத் திகழ்கிறது.
சார்லஸ் கொரிய
புதிய பம்பாய் நகரத்தை வடிவமைத்த பெருமை கொண்டவர். உலக அளவிலான நகரத் திட்டமிடல் அறிஞர்களுள் ஒருவர். கர்நாடக மாநிலத்தில் நியூ பகல்கோட் போன்ற புறநகர்களை வடிவமைத்தவர். ஏழைகளுக்கான வீடுகளிலிருந்து பிரம்மாண்டமான கட்டிடங்கள் வரை எழுப்பியவர். அடுக்குமாடிக் கலாச்சாரம் உருவாவதற்கு முன்பே மும்பையில் கஞ்சன்சங்கா அடுக்குமாடிக் குடியிருப்பை 1974-ல் உருவாக்கியவர்.
ஷிய்லா ஸ்ரீபிரகாஷ்
சென்னையைச் சேர்ந்த கட்டுமானப் பொறியாளரான இவர், பல உலக நாடுகளில் கட்டிடங்களை உருவாக்கியுள்ளார். குறைந்த விலை வீடுகளை உருவாக்கியதற்காக உலக வங்கியிடம் விருதுபெற்றுள்ளார். சென்னையின் ஓவிய கிராமமான சோழ மண்டலம் கிராமத்தின் தற்கால ஓவியங்களுக்கான மையம் உள்ளிட்ட பல கட்டிடங்களை உருவாக்கியுள்ளார்.
லாரி பேக்கர்
கட்டிடவியலின் காந்தி என அழைக்கப்படும் லாரி பேக்கர் இங்கிலாந்தில் பிறந்தவர். உள்ளூர் கட்டுமானப் பொருள்களைக் கொண்டு கட்டிடங்களைக் கட்டினர். அது பேக்கர் பாணி கட்டிடக் கலை என்று அழைக்கப்படுகிறது. குறைந்த விலை வீடுகளை உருவாக்குவதை லட்சியமாகக் கொண்டு செயல்பட்டுவந்தவர்.
நேக் சந்த்
இந்தியக் கட்டிடக் கலைஞரான நேக் சந்த், கட்டிடக் கழிவுகள், தூக்கிய எறியப்பட்ட பொருட்கள் போன்றவற்றைக் கொண்டு ராக் கார்டனை சண்டிகரில் உருவாக்கியவர். 25 ஏக்கர் நிலப்பரப்பிலுள்ள இந்த கார்டனில் 2,000 சிற்பங்கள் உள்ளன.
விஸ்வேஸ்வரய்யா
கர்நாடக மாநிலத்தில் பிறந்த இவர், சென்னையில் கல்லூரிப் படிப்பை முடித்தவர். புனே அறிவியல் கல்லூரியில் பொறியியல் பயின்றார். பாசனத்துறையில் இவர் பணியாற்றிய காலத்தில் அணைக் கட்டுமானத்தில் புதிய சாதனைகளைச் செய்தார். காவிரிக்குக் குறுக்கே கிருஷ்ண சாகர் அணையைக் கட்டியது இவரது பெரும் சாதனைகளுள் ஒன்று. இவருக்கு நாட்டில் உயரிய விருதான பாரத ரத்னா 1955-ல் வழங்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT