Published : 08 Sep 2017 09:07 PM
Last Updated : 08 Sep 2017 09:07 PM
வீடு கட்ட, வீடு வாங்க இன்றைக்குப் பெரும்பாலோனர் வங்கிக் கடனைத்தான் நம்பியிருக்கிறார்கள். வங்கிகள் 80 சதவீதம் தொகையைப் பெரும்பாலான வங்கிகள் கடனாக அளிக்கின்றன. மீதித் தொகையை மாதத் தவணையாக வங்கிகள் வசூலிக்கின்றன. வங்கிக் கடன் என்றாலும் கடன்தானே. ராவணனின் கலக்குமுற்ற மனசைச் சொல்ல கம்பர், ‘கடன் பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன்’ என்கிறார்.
வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்த மாதத் தவணை முறைதான் சரி என்றாலும் சிலர் தங்களது சேமிப்புத் தொகை கிடைத்தாலோ சேமநல நிதி கிடைத்தாலோ அதை வைத்து வீட்டுக் கடனை அடைத்துவிட்டுக் கடன் இல்லாமல் வாழ நினைப்பார்கள். அதனால் வங்கிக் கடனை ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் முழுவதுமாகத் திருப்பிச் செலுத்தும் வசதியையும் இப்போது வங்கிகள் அளிக்கின்றன. அப்படித் திருப்பிச் செலுத்தும்போது சில விஷயங்களைக் கவனிக்க வேண்டியது அவசியம்.
வங்கிக் கடன் வாங்கும்போது பல ஆவணங்களில் கையெழுத்திட்டுக் கொடுத்திருப்போம். அது மட்டுமல்லாமல் தாய்ப் பத்திரம் உள்ளிட்ட பல ஆவணங்களையும் கொடுத்திருப்போம். என்னென்ன ஆவணங்கள் கொடுத்திருக்கிறோம் என்பதைக் குறிப்பிட்டு ஒரு ரசீது நமக்கு அளிக்கப்பட்டிருக்கும். ஒரிஜினல் மனைப் பத்திரம், தாய்ப் பத்திரம், வில்லங்கச் சான்றிதழ், விற்பனைப் பத்திரத்தின் நகல் உள்ளிட்டவை வங்கி ரசீதில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த அசல் ஆவணங்கள் அனைத்தையும் வங்கி திருப்பிக் கொடுத்திருக்கிறதா என்பதைக் கவனமாகச் சரிபார்த்துப் பெற வேண்டும்.
கடனை முன்கூட்டியே அடைக்கும்போது பாக்கி அசல் தொகை எவ்வளவு, வட்டித் தொகை எவ்வளவு என்பதை எழுத்துப்பூர்வமாக வங்கியிடம் இருந்து வாங்கிக்கொள்வது அவசியம். அந்தத் தொகையை டிமாண்ட் டிராப்ட் மூலம் வங்கிக்குக் கொடுப்பது நல்லது. இது நமக்குப் பாதுகாப்பும்கூட.
அசல் தொகை, வட்டித் தொகையைத் தவிர வேறு எந்தவிதக் கட்டணமும் வங்கிக்குச் செலுத்தத் தேவையில்லை. வீட்டுக் கடனுக்கு இ.எம்.ஐ. செலுத்தி வந்தபோது எப்போதாவது பணமில்லாமல் காசோலை திரும்பியிருக்குமேயானால், அதற்கான அபராதக் கட்டணத்தை வங்கி விதித்திருக்கலாம். அதைத் தவிர வேறு சேவைக் கட்டணங்கள் எவையும் கிடையாது. உங்கள் வீட்டுக் கடன் கணக்கில் எவ்விதப் பாக்கித் தொகையும் இல்லை என்பதற்கான சான்றிதழையும் வங்கியிடம் இருந்து பெற்றுக்கொள்வது நல்லது. வங்கி திருப்பிக் கொடுத்த ஆவணங்கள் என்ன என்பதைப் பட்டியலிட்டு அதில் வாடிக்கையாளரும் வங்கி அதிகாரியும் கையெழுத்திட்டு அதன் படிவத்தை வைத்துக்கொள்வது இரு தரப்புக்கும் நல்லது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT